நட்சத்திரங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்றவன்

ரு
காட்சி போதும்
இதயத்தை
சுக்கு நூறாக
உடைத்தெறிவதற்கு
ஒரு
காட்சி போதும்
ஆன்மாவின் ஆழத்திலிருந்து கண்ணீரை
இழுத்துக் கொண்டு வருவதற்கு
நேற்றின்
உறக்கத்தை
தொலையச் செய்த
அந்தக் காட்சி
இன்றும் விலக மறுக்கிறது
நீங்களும்
பார்க்க வேண்டும்
அந்தக் காட்சியை

ரு சிலை
சுற்றிலும் மனிதர்கள்
அந்தச் சிலையை நோக்கி
நடந்து வருகிறாள் தாய்
சிலையின் முகத்தை
இரண்டு கைகளாலும்
ஏந்திக் கொள்கிறாள்
கன்னத்தையும்
புருவத்தையும்
நெற்றியையும்
உதடுகளையும்
கண்களையும்
வாஞ்சையாகத்
தொட்டுப் பார்க்கிறாள்
கண்களில் இருந்து
கண்ணீர்
பெருகிப் பெருகி
பெருகிப் பெருகி
வழிந்தோடிக் கொண்டிருக்கிறது
அந்தக் கண்ணீரில்
பத்தாண்டு காலக் கோபம்
பத்தாண்டு காலப் போராட்டம்
பத்தாண்டு கால விரக்தி
பத்தாண்டு கால அலைக்கழிப்பு
பத்தாண்டு கால வலி
எல்லாமும்
எல்லாமும்
அடங்கி இருக்கிறது
முகத்தில் முத்தமிட்டு
அழுது கொண்டிருக்கும்
அந்தத் தாயைப்
பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு
அது சிலையாக தெரியலாம்
ஆனால்
அவளுக்கு அது சிலையல்ல
அவளுடைய மகன்
சமூகத்தின் மீதும்
வாழ்வின் மீதும்
ஏற்பட்ட கசப்பில்
நட்சத்திரங்களை நோக்கிப்
புறப்பட்டுச் சென்றவன்

ந்த தேசத்தின்
இருண்ட முகத்தில்
நட்சத்திரங்களின் மூலம்
ஒளி பாய்ச்சி
சாதி இருக்கிறது
சாதி அழிக்கிறது என்ற
உண்மையைச் சொன்னவன்
அவன் பெயர்
ரோகித் வெமுலா!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment