வீட்டிலும்
அலுவலகத்திலும் என
அன்றாடம்
நீங்கள் பார்க்கும்
கரப்பான் பூச்சிகள்
அல்ல!
உங்கள் கைகளால்
அடிவாங்கி
உங்கள் கால்களால்
மிதிவாங்கி
நசுங்கிச் செத்துப்போகும்
கரப்பான் பூச்சிகள்
அல்ல!
அதிகாரத்தின்
அடிமடியில்
அணுகுண்டை
வீசியிருக்கின்றன
இந்தக்
கரப்பான் பூச்சிகள்!
வேலையில்லாதவர்கள்
என்று
விமர்சிக்கப்பட்ட
இந்தக்
கரப்பான் பூச்சிகள்
மக்களை
ஏமாற்றுவதையே
வேலையாக வைத்திருக்கும்
அரசியல்வாதிகளின்
இதயங்களில்
அச்சத்தை விதைத்திருக்கிறார்கள்!
சோம்பேறித்தனமானவர்கள் என்று சொல்லப்பட்ட
இந்தக்
கரப்பான் பூச்சிகள்
ஆட்சியாளர்களின் அநீதிகளை
சுறுசுறுப்பாக
பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
சமூக வலைத்தளங்களில்
சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்
என்று
குறைத்து மதிப்பிடப்பட்ட
இந்தக் கரப்பான் பூச்சிகள்
ஆட்சியாளர்களின் மீதான
அதிருப்தியில்
ஆட்சியாளர்களின் மீதான
கோபத்தில்
ஆட்சியாளர்களின் மீதான
நம்பிக்கையின்மையில்
ஒன்று பத்து நூறு
ஆயிரம் லட்சம் கோடியென
அதே
சமூக வலைத்தளத்தில்
இணைந்து கொண்டே
இருக்கிறார்கள்!
அதிகாரத்திற்கு எதிரான
எதிர்ப்பு
எங்கிருந்து புறப்படும் என்று
யாராலும் சொல்ல முடியாது!
ஆனால்
சரியான தத்துவத்தால்
சரியான பாதையில்
சரியான நேரத்தில்
சரியான தோழர்களால்
வழிநடத்தப்பட்டால்,
சொல்ல முடியாது
கரப்பான் பூச்சிகள்
ஒரு புரட்சியை
நிகழ்த்தினாலும்
ஆச்சரியப் படுவதற்கு
ஒன்றுமில்லை!
அதிகாரத்தின் வேர்களை
அழிப்பதற்காக அணிசேரும்
கரப்பான் பூச்சிகளே
வாழ்த்துகள்!
ஜோசப் ராஜா
