மே தின வாழ்த்துகள்

மே தினம் என்பது

விடுமுறை நாள் மட்டுமல்ல

என்பதைப்

புரிந்து கொண்டீர்கள் என்றால்

உங்களுக்கு

என்னுடைய

மே தின வாழ்த்துகள்

இன்று நேற்றல்ல

நீண்ட காலங்களாகப்

போராட்டங்களின் வழியே

பிரசவித்தது 

இந்த மே தினம்

என்பதைப்

புரிந்து கொள்வதற்கு

முயற்சி செய்தீர்கள் என்றால்

உங்களுக்கு

என்னுடைய

மே தின வாழ்த்துகள்

எட்டுமணி நேர

வேலை என்ற

உரிமைக்கான போராட்டங்களில்

எத்தனையோ தொழிலாளர்கள்

உயிரிழந்திருக்கிறார்கள்

உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற

நியாயமான கோரிக்கைகளுக்காக

எத்தனையோ தொழிலாளர்கள்

காயமடைந்திருக்கிறார்கள்

உரிமைகள் என்ற பெயரில்

உலகத் தொழிலாளர்களின்

கைகளில் இருக்கும்

ஒவ்வொன்றும்

சாதாரணமாக

சாதாரணமாகக்

கிடைத்துவிடவில்லை

இலாபம்

இலாபம்

இலாபம்

என்று மட்டுமே

அலைந்து கொண்டிருக்கும்

முதலாளிகளுக்கு எதிராகப்

போராடிய

ஒவ்வொரு தொழிலாளியையும்

நினைத்துக் கொள்ளுங்கள்

கொஞ்சம்கூட

சுயநலமில்லாதவர்கள்

அந்தத் தொழிலாளிகள்

தங்களுக்காக மட்டுமல்லாமல்

தங்களைப் போன்ற

தொழிலாளர்களையும்

நினைத்துக் கொண்டே

போராட்டக் களங்களில்

நங்கூரமாய்

நிலைத்து நின்றவர்கள்!

 

உண்மைதான்

நிலைமைகள் இன்று

மாறித்தான் இருக்கின்றன

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில்

சங்கம் அமைத்திட உரிமையில்லை

பன்னாட்டு நிறுவனங்கள்

தொழிற்சங்கங்களை விரும்புகிறதில்லை

அவர்களுக்குத்

தொழிலாளர்களின் உழைப்பும்

உழைப்பிலிருந்து விளையும்

இலாபம் மட்டுமே

போதுமானதாக இருக்கின்றது

ஆனபோதிலும்

சங்கம் இல்லையென்றாலும்

அமைப்பாய்த் திரளாத போதிலும்

எதிர்ப்புணர்வு குறையவில்லை

எந்தத் தொழிலாளர்களுக்கும்

என்பதையும் நீங்கள்

தெரிந்துகொள்ள வேண்டும்

 

இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் மீது நடத்திய

இனப்படுகொலைக்கு

தான் வேலைசெய்யும்

மைக்ரோசாப்ட் நிறுவனம்

துணைபோகின்றது

எனபதற்காக

எதிர்த்துக் கேள்வி கேட்டார்

ஒரு தொழிலாளி

அவருடைய வேலை பறிக்கப்பட்டது

ஆனால் அந்தக் கேள்வி

உலகமெல்லாம் எதிரொலித்தது!

 

கூகுள் மற்றும் அமேசான்

நிறுவனங்கள்

தங்கள் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு

போர் சார்பாக

நிலைப்பாடு இருக்கக்கூடாது

என்று தடைவிதித்தது

தடையையும் மீறி

அந்த நிறுவனங்களில்

சுதந்திர பாலஸ்தீனத்திற்கான

முழக்கங்கள் ஒலிக்கத் தொடங்கின!

 

செயற்கை நுண்ணறிவைக்

காரணமாகச் சொல்லி

வேலைகளைப் பறிக்க நினைத்த

அமெரிக்கத்

திரைப்பட முதலாளிகளுக்கு எதிராக

போராட்டத்தை தொடங்கியது

அமெரிக்க எழுத்தாளர் சங்கம்

வெற்றி

போராடியவர்களின் கைகளுக்கு வந்தது

 

ஸ்விக்கி ஸ்மொட்டோ உபெர்

போன்ற நிறுவனங்கள்

பல்லாயிரக்கணக்கான

இளைஞர்களின் மீது

சுதந்திரமான வேலை

என்ற பெயரில்

உழைப்புச் சுரண்டலை

நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்

உண்மையறிந்த தொழிலாளர்கள்

அங்கொன்றும் இங்கொன்றுமாக

போராடத் தொடங்கியிருக்கிறார்கள்

 

சிங்கப்பூரில்

தன்னை

மோசமாக நடத்திய

ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு

கழிவறைக் காகிதத்தில்

ராஜினமாக் கடிதத்தை

எழுதிக் கொடுத்தார்

ஒரு தொழிலாளி

என்ற செய்தி

வெறும் செய்தி மட்டுமல்ல

அதற்குப் பின்னால்

வலியும் கோபமும் இருக்குமல்லவா!

 

கேள்வி கேட்க

யோசிப்பவர்களால் அல்ல

அல்லவே அல்ல

கேள்வி கேட்பவர்களால் தான்

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

எதிர்த்துப் போராட

தயங்குகிறவர்களால் அல்ல

எதிர்த்துப் போராடுகிறவர்களால் தான்

உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றன

நீங்களும்

கேள்வி கேளுங்கள்

எல்லாமும் மாறும்

நீங்களும்

எதிர்த்து நில்லுங்கள்

எல்லாமும் கிடைக்கும்

கேட்பீர்கள் என்றால்

எதிர்ப்பீர்கள் என்றால்

தோழர்களே

உங்களுக்கு எனுடைய

மே தின வாழ்த்துகள்!

 

ஜோசப் ராஜா

01.05.2026

Related Articles

Leave a Comment