சில நாட்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் நம்மீது கொண்ட அன்பின் மிகுதியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். சாதாரண சிவில் வழக்குதான் என்பதால் மாலை ஏழுமணிக்கு விசாரணைக்கு வாருங்கள் என்று அழைப்பு வந்தது. உண்மையை அழைத்துக் கொண்டு மாலை சென்றிருந்தேன். இதுபோன்ற காவல் நிலைய வேலையென்றால் சில மணி நேரங்களை ஒதுக்கிவிடுவது நல்லது. மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. எங்கும் சரியான நேரத்திற்குச் செல்லக்கூடிய நான், அங்கும் சரியான நேரத்திற்குச் சென்று காத்திருந்தேன். அதனால்தான் அந்தக் காட்சிகளை என்னால் பொறுமையாகக் கவனிக்க முடிந்தது.
இந்த மனிதர்கள் அவ்வளவு எளிதில் திருந்திவிட மாட்டார்கள் என்பதற்கு காவல் நிலையத்தில் கண்ட காட்சிகள் உறுதியாக உணர்த்திக் கொண்டிருந்தன. காவல் நிலையம் ஏன் இவ்வளவு கூட்டமாக இருக்கிறது? என்ற கேள்வி எழுந்து கொண்டிருக்கும் போதே, அலையாக, அலைஅலையாக வந்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள். என்ன வித்தியாசமென்றால், அதுவரையிலும் சேர்ந்திருந்தவர்கள் இப்போது இருதரப்பாக பிரிந்து வருகிறார்கள். வெறுப்பைச் சுமந்துகொண்டு, கசப்பை நிறைத்துக் கொண்டு, ஆளுக்கொரு வழக்கறிஞரை அழைத்துக்கொண்டு வரும் அந்த முகங்கள் அவ்வளவு அழகாக இல்லை!
ஒரே வீட்டில் சேர்ந்திருந்த கணவன் மனைவி கணக்கற்ற புகார்களைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறார்கள். அக்கம் பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அண்ணன் தம்பி உப்புச்சப்பில்லாத பிரச்சனையில் அடிதடி எல்லாம் நிகழ்த்திவிட்டு நின்று கொண்டிருக்கிறார்கள் நீண்ட காலங்களாக ஒரே அடுக்ககத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் வாகன நிறுத்துமிடம் இவ்வளவு பெரிய பிரச்சனையை உருவாக்கி விடுமா என்பது ஆச்சரியமாக இருக்கத்தான் செய்கிறது! ஆகமொத்தம் இந்த மனிதர்கள் நிம்மதியான ஒரு வாழ்க்கையை ஒருபோதும் விரும்புவது கிடையாது.
காவல் நிலையத்திற்கு வெளியே ஆட்டோ ஒன்று விரைந்து வந்து நிற்க, ஆட்டோவின் சத்தத்தையும் தாண்டி உள்ளே இருக்கும் பெண்மனியின் சத்தம் வெளியே கேட்கிறது. யாரிடமோ போனில் பேசிக்கொண்டு வாருகிறார். கணவனோடு பிரச்சனை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கணவன் மீதான புகார்களை போனில் சொல்லிக்கொண்டே, அதே புகாரை காவல் நிலையத்திலும் கொடுப்பதற்காக உள்ளே செல்கிறாள். அங்கே கூடியிருக்கும் நூறு கண்களும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவள் யாரையும் பார்க்கவில்லை. சண்டையின் உச்சத்தில் அப்படியே புறப்பட்டு வந்திருக்கிறாள். அவனைக் கைதுசெய்தால் மட்டுமே அடங்கும் ஆத்திரம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உடைந்த மொழியில் அவள் சொல்லும் புகார்களை எழுதத் தொடங்குகிறார் ஒரு காவலர்.
குடும்பப் பிரச்சனையில் விசாரணைக்காக வந்து, நீண்டநேரமாகக் காத்திருக்கிறார் ஒரு பெண்மனி. சிறிதுநேரம் கழித்து அங்கே வந்த வழக்கறிஞர்கள் இருவர் அந்தப் பெண்ணுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்குகிறார்கள். விசாரிக்கும் உதவி ஆய்வாளரிடம் எப்படிப் பேசவேண்டும், முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே, உடைக்கப்பட்ட மண்டையிலிருந்து வழியும் இரத்தத்தை துணியால் துடைத்துக்கொண்டே காவல் நிலையத்திற்குள் ஓடுகிறான் ஒருவன். எல்லாக் கண்களும் அவனைக் கவனிக்கத் தொடங்குகின்றன. சொந்த அண்ணன் அடித்துவிட்டானாம்! புகாரை எழுதத் தொடங்குகிறார் காவலர். சொட்டுச்சொட்டாய் சிந்திக்கிடக்கும் இரத்தத் துளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
காவல் உதவி ஆய்வாளர் அறையில் விசாரணைக்காக கூட்டம் கூட்டமாக கூடியிருக்கிறார்கள். உள்ளே நிறைந்திருப்பது முரண்கள் மட்டும்தான். அவர்கள் மொழியில் அதாவது இருதரப்பு. பெரியவர்கள் சண்டையில் சித்தியை அடித்துவிட்ட சிறுவனை அதட்டியபடி விசாரித்துக் கொண்டிருக்கிறார் ஆய்வாளர். ஒருமணிநேரத்தில் அந்த விசாரணை முடிந்து அவர்கள் வழியனுப்பப்படுகிறார்கள். அடுத்த இருதரப்பாக அடுக்ககத்தில் வாகன நிறுத்துமிடப் பிரச்சனைக்காக உட்கார்கிறார்கள் இருதரப்பு. வாகன நிறுத்துமிடப் பிரச்சனையில் சக குடியிருப்பாளாரான ஒரு பெண்ணை இன்னொருவர் ஆபாசமாக பேசிவிட்டார், அங்கிருந்து தொடங்குகிறது விசாரணை. யாருமே விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லையாதலால், முடிவும் எட்டப்பாடாமலே நீதிமன்றம் செல்கிறோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு கலைந்து செல்கிறார்கள்.
தொடர்ந்து சில மணிநேரங்களாக விசாரித்துக் கொண்டிருக்கும் அந்த உதவி ஆய்வாளரைப் பார்க்கிறேன். இடையில் அவர் தண்ணீர் குடித்தும் பார்க்கவில்லை, பேசுகிறார், பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார். ஆகமொத்தம் ஒரு பத்தரை மணிவரைக்கும் அந்தக் காவல் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. நான் சென்றிருந்த வேலை முடிந்தும்கூட முடியாமல் எனக்குள் ஒருவாரமாக ஓடிக்கொண்டிருப்பதெல்லாம் இவைகள்தான். ஏன் இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள்? வெறும் புகார்களோடு மட்டும் வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியுமா? அன்பிற்கும், விட்டுக்கொடுத்தலுக்கும், பெருந்தன்மைக்கும் இந்த வாழ்க்கையில் எந்த இடமுமில்லையா என்ற கேள்விகள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
அன்பின் பாதைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்ட இந்தச் சமூகமைப்பில் காவல் நிலையமும் நீதிமன்றமும் புகார்களால் நிறைந்த மக்கள் கூட்டம் நிறைந்ததாக இருக்கத்தான் செய்யும். மிகச்சிறிய தவறுகளை மன்னிக்கத் தயாராக இல்லாத மனிதர்கள் பெருகிக் கொண்டிருப்பதும், சின்னஞ்சிறிய விட்டுக்கொடுத்தல்களை செய்யமுடியாமல் இருப்பதும், மறக்க வேண்டிய விஷயங்களை இறுகப்பற்றிக்கொண்டு இருப்பதும் நல்லதில்லை என்பது புரியவரும்போது உறவுகள் எல்லாமும் உடைந்து சிதறியிருக்கும் என்பது எல்லோருக்கும் புரியுமென்றுதான் நினைக்கிறேன். ஆனாலும் இந்த மானுட அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது வேதனைதான். எல்லாவற்றையும் மீறி மானுடஅன்பு வெல்ல வேண்டும். இந்தச் சமூகமைப்பு மாறாமல் சாத்தியமா என்ன!
ஜோசப் ராஜா
