காதலால் அழகாகும் வாழ்க்கை

நீண்ட

நிலக் காட்சிகள்

வெட்டி

ஒதுக்கப்பட்ட மலைகள்

கூட்டமாகப்

பறக்கும் பறவைகள்

நிழல்தரும்

அழகிய மரங்கள்

கண்களைக்

குளிரச்செய்யும் நீர்நிலைகள்

வியர்வை சிந்தச்சிந்த

உழைக்கும் மக்கள்

தொலைதூரத்தில் இருக்கும்

பரந்த தொடுவானம்

ஒளிரும்

ஒற்றை நட்சத்திரம்

மரக்கிளையில் மறையாமல்

காதல் செய்யும்

இரண்டு ஜோடிப்புறாக்கள்

என

காட்சிகளால்

அழகாகும்

பயணத்தைப் போல

காதலால்

அழகாகும்

வாழ்க்கையை

நினைத்துப் பார்க்கிறேன்

இருளில்

ஒளி புகுந்துவிட்டால்

எல்லாமும்

ஒளிரத் தொடங்குவது போல

வாழ்க்கையில்

காதல் புகுந்துவிட்டால்

எல்லாமும் ஒளிரத் தொடங்குவது

தவிர்க்கவே முடியாதது தான்

இருளே கதியாக

வாழ்ந்து கொண்டிருந்த

எத்தனையோ பேர்

காதலின் கரத்தைப்

பற்றிக் கொண்டு

ஒளிசிந்த

ஒளிசிந்த

நடந்து சென்ற

காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்

நானும்கூட

ஒளிரும் இதயத்தோடு

காதலின் கரங்களைப்

இறுகப்பற்றிக் கொண்டு

நிறைந்த நம்பிக்கையோடு

நடந்த காட்சிகளை

நினைத்துப் பார்க்கிறேன்

காதல்

நம்பிக்கையின்

நங்கூரத்தால்

நிலைக்கக்கூடியது என்பதைப்

புரிந்துகொள்ளவே

எண்ணிலடங்கா நாட்களை

காதலில்

கரைக்க வேண்டியிருந்தது

இதோ

குழந்தையின் விரல்களை

இறுகப் பற்றிக்கொண்டு

நடந்துசெல்லும்

தாயைப்போல

கைகளைப் பற்றிக்கொண்டு

அழைத்துச் செல்கிறது காதல்

எங்கே

என்ற கேள்வியில்லை!

ஏன்

என்ற வினாவுமில்லை!

காதலின் மீதான நம்பிக்கையில்

தொடர்கிறது இந்தப் பயணம்

 

ந்த வாழ்க்கையில்

காதலிக்க நேரமிருக்கிறதா

இந்தச் சமூகத்தின்

பொருளாதாரச் சிக்கலால்

சிதைந்து கொண்டிருக்கும்

இதயத்தில்

காதல் கசிந்துருகுவது

சாத்தியமா

என்ற கேள்விகளும்

அந்தக் கேள்விகளுக்கான

அவசரமான பதில்களும்

கேட்கத்தான் செய்கிறது

இந்தக் காலம்

அவரவர் வசதிக்கேற்ப

உண்மையை

வளைத்துக்கொள்ளும் காலம்

இந்தக் காலம்

பொய்களே

உண்மை வேடமிட்டு

கூனிக்குறுகாமல்

கம்பீரமாக

வலம்வரும் காலம்

எது எப்படியாகினும்

காதலுக்கு முன்னால்

பல தடைகளை

விரித்து வைத்திருக்கும்

இந்தச் சமூகத்தில்

காதல் செய்வதே

எதிர்ப்புணர்வு நிறைந்ததுதான்

என்பதை

உங்களுக்கு

நினைவூட்ட நினைக்கிறேன்

அழுக்குப் படிந்த

சாதியின் இதயத்தை

குத்திக் கிழித்த

காதல் கதைகளின்

எண்ணிக்கையைச்

சொல்லிவிட முடியுமா!

மதத்தை

மனிதர்களுக்கு இடையில்

பிரிவினைப் பாலமாகப்

பிடித்துக் கொண்டிருப்பவர்களை

எதிர்த்து

காதலால் இணைந்துகொண்ட

இதயங்களின் எண்ணிக்கையைச்

சொல்லிவிட முடியுமா!

காதலிக்க நேரமில்லாமல்

துரத்தும்

பொருளாதாரச் சுமைகளை

காதல் தரும் வலிமையால்

விரட்டிப் பிடிக்கும்

நம்பிக்கைக் கதைகளின்

எண்ணிக்கையைச்

சொல்லிவிட முடியுமா!

ஆம்

இப்படியாக

இப்படியாக

இந்த முதலாளித்துவச் சமூகம்

காதலுக்கு எதிரானதாகத்தான்

இருக்கிறது

மனித உறவுகளுக்கு

எதிரான

இந்தச் சமூகத்தில்

இந்தச் சமூகத்தில்

காதல் செய்வதென்பது

ஒருவகையில்

எதிர்ப்புணர்வு நிறைந்ததுதான்

மனித உறவுகளுக்கு மத்தியில்

பணமென்னும் திரையை

விரித்து வைத்திருக்கும்

இந்தச் சமூகத்தில்

காதல் செய்வதென்பது

ஒருவகையில்

புரட்சிகரமானதுதான்

இத்தனை வருடங்கள் கழித்தும்

இன்னும் குறையாத காதல்தான்

ஏற்றத்தாழ்வுகள் நிலைத்திருக்கும்

இந்தச் சமூகத்திற்கு எதிராக

சாதி மாத வேறுபாடுகளிருக்கும்

இந்தச் சமூகத்திற்கு எதிராக

எல்லாவற்றையும் உருவாக்கிக் கொண்டிருக்கும்

உழைக்கும் மக்களுக்கு எதிரான

இந்தச் சமூகத்திற்கு எதிராக

குறையாத பலத்தோடும்

குறையவே குறையாத நம்பிக்கையோடும்

வார்த்தைகளை

வாள்போல

வீசச்செய்து கொண்டிருக்கிறது

அதனால்தான்

அதனால்தான்

கேள்விகள் ஏதுமில்லாமல்

நானும்கூட

காதலின் கரங்களை

இறுகப் பற்றிக்கொள்கிறேன்

இறுகப் பற்றிக்கொள்கிறேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment