உழைப்புச் சுரண்டலால்
கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருந்த
உலகத் தொழிலாளர்களுக்காக
உறுதியாகப் பேசியவர்
தனிச்சொத்துரிமை
ஒழிக்கப்பட வேண்டுமென்று
ஓயாமல் உழைத்தவர்
மிகச்சரியாக
அங்கிருந்துதான்
நானும் மார்க்ஸை
நெருங்கத் தொடங்கினேன்
மிகச்சரியாக
அங்கிருந்துதான்
நானும் மார்க்ஸின்
கரம்பற்றிக் கொண்டேன்
சுரண்டலின் உச்சத்தில்
தனிச்சொத்துரிமையின் உச்சத்தில்
அன்றைக் காட்டிலும்
இன்றுதான்
மார்க்ஸின் தேவை
அதிகமாக இருக்கிறது
உழைப்பின் பெயரால்
நடக்கும் சுரண்டல்
மதத்தின் பெயரால்
நடக்கும் சுரண்டல்
சாதியின் பெயரால்
நடக்கும் சுரண்டல்
தேசபக்தியின் பெயரால்
நடக்கும் சுரண்டல்
ஜனநாயகத்தின் பெயரால்
நடக்கும் சுரண்டல்
தேர்தலின் பெயரால்
நடக்கும் சுரண்டல்
என
சுரண்டலின் மீதுதான்
இந்தச் சமூகம்
இயங்கிக் கொண்டிருக்கிறது
சுரண்டலை எதிர்க்காத
எவனையும்
எதிர்க்கத் தயங்காதீர்கள்
தனிச்சொத்துரிமையை
ஒழிக்கத் தயங்குகிற
எவனையும்
ஒழிக்கத் தயங்காதீர்கள்
அதுதான் நீங்கள்
மார்க்ஸின் தோழனாக
இருப்பதற்கான ஒரே தகுதி
மார்க்ஸை நேசிப்பது
என்பது
புரட்சியை
நேசிப்பது தான்
மார்க்ஸை நேசிப்பது
என்பது
உண்மையை
நேசிப்பது தான்
மார்க்ஸை நேசிப்பது
என்பது
மாற்றத்தை
நேசிப்பது தான்
இப்போதும் கூட
எதுவும்
குறைந்து விடவில்லை
தேர்தல்
என்ற பெயரில்
நடக்கும் நாடகங்களை
மக்களாட்சி
என்ற பெயரில்
நடக்கும் அபத்தங்களை
விட்டுவிட்டு வாருங்கள்
அதோ
அதோ
அதோ
மார்க்ஸ் சொன்ன
பொண்ணுலகம்!
ஜோசப் ராஜா
05.05.2026
மார்க்ஸின் பிறந்த நாளுக்காக…
