எங்கிருந்தோ ஒலிக்கும் பாடல்

த்தனையோ முறை

கேட்ட பாடல்தான்

ஒவ்வொரு வரியும்

மனப்பாடமாகத் தெரியும்தான்

ஆனாலும்

இந்த இரவில்

மீண்டும் ஒருமுறை

அந்தப் பாடல்

மூளையின் நரம்புகளை

முற்றும் முழுவதுமாக

வருடிக் கொடுக்கிறது

வாஞ்சையாக!

உங்களுக்குத் தெரியாது

ஒரு காலத்தில்

இந்தப் பாடல்தான்

உணவாக இருந்தது

ஒரு காலத்தில்

இந்தப் பாடல்தான்

தாகம் தீர்த்தது

ஒரு காலத்தில்

இந்தப் பாடல்தான்

காற்றாக இருந்தது

ஒரு காலத்தில்

இந்தப் பாடல்தான்

காத்துக் கொண்டது

ஒரு பாடலால்

உயிர் காக்க முடியுமென்றும்

ஒரு பாடலால்

உயிர்கொடுக்க முடியுமென்றும்

நம்புவதற்கான

அத்தனை காரணங்களும்

அத்தனை சூழல்களும்

இருந்த காலத்தில்

என்னோடு இருந்தது

அந்தப் பாடல் மட்டும்தான்

ஒருகணம் கூட

என்னைத் தனித்திருக்க விடாமல்

ஒலித்துக் கொண்டேயிருந்த

அந்தப் பாடல்

பேரன்பு நிறைந்தது

என் பாதைகளிளெல்லாம்

எதிரொலித்த அந்தப் பாடல்

இந்த இரவிலும்

இதயத்தை வருடுகிறது

ஒரு துயரத்தைக் கடப்பதற்கு

இன்னொரு துயரம்

போதுமானதாக இருக்கிறது

இசையில் என்ன இருக்கிறதென்று

இப்போது என்னைக் கேட்டால்

காதலும் அமைதியும்

என்றுதான் சொல்வேன்

இந்த இரவை

இந்தப் பாடல்

எடுத்துக்கொள்ளப் போகிறது

என்பதில்

எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment