அண்ணன் செழியனுக்கு

ரணம் பொதுவானதுதான்

புரியாமல் இல்லை

எல்லோருக்கும் வரக்கூடியதுதான்

விளங்காமல் இல்லை

காய்ந்த இலையைப் போல

உடைந்த கிளையைப் போல

எல்லோரும் ஒருநாள்

விடைபெறத்தான் வேண்டும்

ஆனால்

ஒரு மரணம்

வெறுமனே இப்படி

அறிவில் இருந்து மட்டும்

புரிந்துகொள்ளக் கூடியதா

இறந்த மனிதருக்கும்

நமக்குமான உறவு

இறந்த மனிதருக்கும்

நமக்குமான உரையாடல்கள்

எல்லாமும் எழுந்துவரும்

அந்தத் துக்கவீட்டில்!

அதுதான்

அதுதான்

மானுட வேதனையின் உச்சம்

அதுதான்

அதுதான்

மானுட இழப்பின் உச்சம்

அண்ணன் செழியனின்

மரணச் செய்தி

நேற்றைய அதிகாலையின் மீது

அணுகுண்டு வீசியதுபோல இருந்தது

என்பது மிகையல்ல

உண்மை அதுதான்

உடைந்து சிதறியதுதான் உண்மை

ஒருகணம்

எல்லாமும் நின்றுபோனது

ஒருகணம்

உலகம் பேரமைதியானது

நேற்று முழுக்க

அவரோடு அவர் பக்கத்திலேயே

இருந்தேன்

அதிகபட்சமாக நான்கு வருடங்கள்

அவருக்கும் எனக்குமான உறவு

ஆனால்

பேசியது அதிகம்

பரஸ்பரம் பகிர்ந்துகொண்டது அதிகம்

தனிப்பட்ட விஷயங்களுக்கு

ஒதுக்கிக் கொண்டது

எப்போதுமே சில நொடிகள்தான்

மற்றதெல்லாம்

சமூகம், அரசியல், கலை

மீண்டும் மீண்டும் 

இவ்வளவு வலிகளைத் தாங்கிக்கொண்டா

எப்போதும்

புன்னகையை தரித்துக் கொண்டிருந்தீர்கள்

என்பதை நினைக்கும் போது

இதயத்தில் முள்ளாய் குத்துகிறது

நல்ல சமூகம்

நல்ல கவிதை

நல்ல கதைகள்

நல்ல சினிமா

இதுதான் இதுதான் இதுமட்டும்தான்

அவர் விரும்பியது

இந்தச் சமூகத்தின் மீதும்

வியாபாரமாக்கப்பட்ட

இந்தக் கலைகளின் மீதும்

கடுமையான

மிகக் கடுமையான விமர்சனம்

இருந்தது அவருக்கு

அந்த விமர்சனத்தின் விடைதான்

உலக சினிமா நூலின் பிறப்பு

அந்த விமர்சனத்தின் விடைதான்

டூலெட் திரைப்படம்

அந்த விமர்சனத்தின் விடைதான்

தி பிலிம் ஸ்கூல்

அந்த விமர்சனத்தின் விடைதான்

புதியவர்களுடனான நெருக்கம்

அந்த விமர்சனத்தின் விடைதான்

எனக்கும் அவருக்குமான பிணைப்பு

சமூக ஏற்றத்தாழ்வுகளை சொல்ல

கலையைப் பயன்படுத்த வேண்டும்

சமூக மாற்றத்திற்கான காரணியாக

கலையைப் பயன்படுத்த வேண்டும்

இதுதவிர

அவருக்கு எந்த நோக்கமுமில்லை

அவரை எனக்குப் பிடித்ததற்கும்

அதுதான் காரணமாக இருந்தது

இதுதான்

அவர் வாழ்வாக இருந்தது

இதுதான்

அவரின் அன்றாடமாக இருந்தது

எல்லோரையும்

தோழர் என்று

அழைக்கக்கூடிய நான்

ஒருசிலரை

அண்ணன் என்று அழைப்பேன்

அவரை அப்படித்தான் அழைத்தேன்

தம்பி என்று

அதீத வாஞ்சையோடு

அழைக்கும் அந்த அன்பின் குரல்

இரவெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தது

இனியென்ன

காலத்திற்கும் கேட்டுக்கொண்டுதான்

இருக்கப் போகிறது

ஆறாத காயம்தான்

ஆனாலும்

திரைக்கதையின் நுட்பங்களை

ஒளிப்பதிவின் நுட்பங்களை

சொல்லிக் கொடுத்திருக்கிறார்

ஒரு கவிஞன் இயக்குநராக வேண்டும்

என்ற அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்

அண்ணா

இந்தத் துயரத்திலும்

என்ன செய்ய வேண்டும் என்பதில்

எந்தக் குழப்பமுமில்லை

வேலையில்தான்

நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்

எனக்குத் தெரியும்

அற்பக் காரணங்களுக்கு

உங்கள் இதயத்தில்

ஒருபோதும் இடமிருந்ததில்லை

ஓய்வெடுங்கள் அண்ணா

இருக்கும்வரை நான் தொடர்வேன்!

 

ஜோசப் ராஜா

 

Related Articles

Leave a Comment