சுகவனத்தில் பேசும் கிளி

சி
நாட்களுக்கு முன்னால்
மைசூர்
நகரத்தில் இருக்கும்
சுகவனம் சென்றிருந்தேன்
பறவைகள் நிறைந்திருந்தன
இதுவரையிலும்
பார்க்காத
பலவண்ணப் பறவைகள்
இதுவரையிலும் கேட்காத
பறவைகளின் குரல்கள்
உற்சாகம் நிறைந்த
குழந்தைகளின் கண்களும்
குழந்தைகளாகிப் போன
பெரியவர்களின் கண்களும்
ஒளிசிந்த
ஒளிசிந்த
பறவைகளைப்
பார்த்துப் பார்த்து
வியப்பில்
விரிந்து கொண்டிருந்தன!

ஒவ்வொரு
கைப்பேசியின் திரைகளும்
பறவைகளின் படங்களால்
நிறைந்து கொண்டிருந்தன
எல்லோரையும் போல
நானும்
என் மகள்களும்
பார்த்துப் பரவசமடைந்தோம்
பறக்கும் பறவைகளை
அமர்ந்திருக்கும் பறவைகளை
நடக்கும் பறவைகளை
சண்டையிடும் பறவைகளை
மனிதர்களின் மீது
உட்கார்ந்து கொள்ளும் பறவைகளைப்
பார்த்துக் கொண்டே
வந்த மகள்
பேசும் கிளியைப் பார்த்து
பிரமித்துப் போனாள்!

வணக்கம் சொன்னால்
வணக்கம் சொல்கிறது கிளி
ஹலோ சொன்னால்
ஹலோ சொல்கிறது கிளி
பைபை சொன்னால்
பைபை சொல்கிறது
குழந்தைகள்
பெரியவர்கள் என
எல்லோரும்
பேசிச் செல்கிறார்கள்
கிளியோடு!

விரிந்த கண்களோடு
வியப்பின் உச்சத்தில்
மகள் கேட்டாள்
“கிளி எப்படி பேசுதுப்பா?”
“மனிதர்கள் சொல்லிக்கொடுத்தால்
சில வார்த்தைகளைப்
பேசும்” என்றேன்
“அப்ப சொல்லிக்கொடுக்கலனா”
என்றாள் சந்தேகத்துடன்
“சந்தேகமே வேண்டாம்
பேசத் தெரியாது
பேச வராது” என்றேன்
“ஓ” என்று
அமைதியாக இருந்தவள்
“அப்ப
நானும் நல்லாப் பேசணும்னா
என்ன செய்யணும்ப்பா”
என்றாள்
“படிக்க வேண்டும் மகளே
அறிவை
வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்றேன்”
புரிந்தவளைப் போல
பறந்து சென்றாள்
புகைப்படம் எடுப்பதற்கு!

சுகவனத்தில் இருந்து
வெளியே வந்தோம்
சாலைகளில் எல்லாம்
பறவைகள்
இயந்திரப் பறவைகள்!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment