ஒரு திருமணத்தை
எதன் பொருட்டு
ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள்
என்று சொல்லமுடியுமா?
எனக்குத் தெரிந்து
நிறையத் திருமணங்கள்
அங்கு பரிமாறப்படும்
உணவின் பொருட்டு
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப்படும்!
திருமண வீட்டாரின்
அன்பான வரவேற்பும்
பேரன்பு நிறைந்த உபசரிப்பும்
காரணமாக இருக்கலாம்!
ஒரு திருமண மண்டபத்தின்
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
மணமேடை ஒன்று
நீண்ட நாட்களாக
என் கண்ணில்
நிழலாடிக் கொண்டிருந்தது!
பொருள்தேட மட்டுமே
ஓடிக்கொண்டிருக்கும்
இந்த உலகத்தில்
நீண்ட காலங்களாக
சந்திக்க முடியாத தோழமைகளிடம்
அந்தத் தவில் சத்தத்திற்கு நடுவே
அந்த நாதஸ்வரத்தின் ஓசைக்கிடையே
அன்பைப் பரிமாறிக்கொள்ளக் கிடைத்த
பொழுதும் காரணமாக இருக்கலாம்!
ஆனால்
இன்று நான்
சென்று வந்த
திருமணத்தின் நினைவுகள்
மணப்பெண்ணின்
புன்னகையாக மட்டுமே
இதயத்தில்
பதிந்திருக்கும் என்று நம்புகிறேன்
எந்தப் பதட்டமுமில்லாத
எந்தக் குழப்பமுமில்லாத
நம்பிக்கை மட்டுமே
நிறைந்திருந்த
நல்ல புன்னகை அது
குழந்தையின் புன்னகை அது!
தோழர் ரத்னவேல் அழைத்தார்
என்பதையும் தாண்டி
ஒரு காதலின் வெற்றியைக்
கண்குளிரப் பார்த்துவரலாம்
என்றே சென்றிருந்தேன்
காதலுக்காக
இரத்தம் சிந்திக் கொண்டிருக்கும்
இந்தச் சமூகத்தில்
காதல்
படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்தச் சமூகத்தில்
காதல்
வேட்டையாடப் பட்டுக் கொண்டிருக்கும்
இந்தச் சமூகத்தில்
காதலைப் புரிந்துகொள்ளும் பெற்றோர்களை
காதலைக் கொண்டாடும் பெரியவர்களை
காதலை ஆதரிக்கும் அன்பர்களை
இறுகப் பற்றிக்கொள்ள நினைக்கிறேன்
ஓ காதலர்களே
அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்
அன்பு நிறைந்த உங்களின் வாழ்க்கை
அவர்களுக்கு மட்டுமல்ல
உங்களுக்குப் பின்னால்
வந்து கொண்டிருக்கும் காதலர்களுக்கும்
வழிகாட்டக்கூடியது
ஒரு காதலின் வெற்றி
பல காதல்களின்
மெளனத்தை உடைக்கக்கூடியது
ஒரு காதலின் வெற்றி
பல காதல்களின் மீது
ஒளியைப் பாய்ச்சக்கூடியது
ஒரு காதலின் வெற்றி
பல காதல்களை
ஆசீர்வதிக்கக்கூடியது!
இன்றைய திருமணமும்
எத்தனையோ இதயங்களில்
நம்பிக்கையை நிறைத்திருக்கும்
பெரியவர்களுக்கு
எல்லாவற்றையும்
சரியாகச் செய்துவிட வேண்டும்
என்ற தவிப்பு
அதிலிருந்து எழும் பதட்டம்
மணமகன் கூட
எட்டிப்பார்க்கும் புன்னகையை
ஒளித்துக் கொண்டு
கவனமாக இருக்க
அந்த மகளின் புன்னகை
எல்லாம் சரியாக நடக்கும்
என்ற நம்பிக்கையின் புன்னகை
சுற்றியிருக்கும் எல்லோரையும்
நம்பியதிலிருந்து எழுந்த புன்னகை
இப்படியே இரு மகளே
நீ சிரித்தால் போதும்
குடும்பம் மட்டுமல்ல
இந்தப் பூமியும் ஒளிபெறும்!
ஜோசப் ராஜா
