காதலின் பரிணாம வளர்ச்சி

முகப்பு ஓவியம் : ஓவியர். ஐயப்பன்

“அந்தக் காலம்
மாதிரி இல்ல
இந்தக் காலத்துக்
காதல்
ரொம்ப மாறிடுச்சு”
என்று சொல்லி
சலித்துக் கொண்டார்
நண்பர்
“அந்தக் காலம் என்றால்
உங்களுக்கு
எந்தக் காலம் தெரியும்
ஆதியிலிருந்து
ஆணும் பெண்ணும்
தோன்றியதிலிருந்து
அறிந்தவரா நீங்கள்”
என்ற கேள்வியின்
அர்த்தம் புரிந்து
அமைதியாகி விட்டார்

இந்தப் பூமியில்
மானுடத் திரள்
தோன்றிய காலத்திலிருந்தே
காதலின் மீது
இப்படிப்பட்ட வார்த்தைகள்
வீசப்பட்டுக் கொண்டுதான்
இருந்திருக்கும் அல்லவா!
அதையெல்லாம்
தாண்டித்தான்
வரலாறு நெடுகிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
காதல்

மொழி
மானுட சமூகத்தின்
உணர்விலிருந்து
முளைத்து எழுந்தது போல
காதலும்
சமூகத்தின் உணர்விலிருந்து
முளைத்து எழுந்தது தான்
காதல் தான்
மானுட சமூகத்தை
ஆதியிலிருந்து
அடுத்த கட்டத்திற்கு
எடுத்துச் செல்கிறது
காலத்தின் வடிவங்கள்
மாற மாற
காதலின் வடிவங்களும்
மாறிக் கொண்டிருக்கின்றன

வழிமேல் விழிவைத்து
காத்துக் கொண்டிருந்த
காதலர்கள்
கைப்பேசித் திரையில்
விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்
அதே காதல்
அதே காத்திருப்பு
அதே ஏக்கம்
அவ்வளவு தான்

மனிதனின்
பரிணாம வளர்ச்சியே
காதலின்
கொடை தான்
மனிதர்களிடம் இருந்து
காதலைக் கழித்து விட்டால்
எதுவும் மிஞ்சாது

அன்பே
காதலின்
நீண்ட இந்தப் பாதையில்
நான் யார்
நீ யார்
காதலுக்கு எதிராக இருக்கும்
அந்த முட்டாள் யார்
நோய்கொண்ட இதயத்தால்
காதலை
ஒருபோதும்
வெல்ல முடியாது
வாழ்வைக் கொண்டாட
காதல் செய்வோம்!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment