எதிர்ப்புணர்வு கொண்ட சாப்ளின்

சாப்ளின் எல்லோருக்கும் பிடித்தமானவர்.

யாருக்கும் அதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொன்றாகத் தேடித்தேடி சாப்ளினின் எல்லாத் திரைப்படங்களையும் பார்த்து முடித்தபோது,

சாப்ளினை ஏன் நேசிக்கிறேன் என்ற காரணம் எனக்குப் பிடிபடத் தோன்றியது.

ஆம்! சாப்ளினை நான் நேசித்தது அவருடைய உறுதியான அரசியல் நிலைப்பாட்டிற்காகத்தான்.

ஒரு கலைஞனுக்குத் தேவையானது நிலைப்பாடு, என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நிலைப்பாடே இல்லையென்று ஒருவன் சொன்னால், அவனை நம்பாதீர்கள். அவன் பொய் சொல்கிறான்.

ஒடுக்கப்படும், உழைக்கும் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் என்ற சாப்ளினின் நிலைப்பாடு, ஒரு கலைஞனாக அவருக்கு நிம்மதியைக் கொடுத்தாலும்

அதற்காக அவர்கொடுத்த விலை கொஞ்சமல்ல,

எந்த நாட்டில், எந்தத் திரைப்படத் துறையில் அவர் சுதந்திரமாக திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தாரோ,

அந்த நாடு ஒரு நாளில் அவருக்குத் தடை விதித்தது. சிகப்புக் கம்பளம் விரித்து அவரை வரவேற்றுக்கொள்ள பல நாடுகள் தயாராக இருந்தாலும்,

உலகையே சிரிக்க வைத்த அந்த இதயம் எவ்வளவு அழுதிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கும் போது கலங்கிப் போகிறது கண்களும், இதயமும்.

ஆனாலும் நிறுத்தவில்லை சாப்ளின், அந்தக் கலைஞனின் இதயத்திலிருந்து படைப்பு பிரசவிக்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தது.

அவரைக் கம்யூனிஸ்ட் என்றார்கள்!

என்னைக் கேட்டால் சாப்ளினுக்கு கிடைத்த லட்சோப லட்சம் பாராட்டு வார்த்தைகளில் இதுதான் இதுதான் மிகப்பெரிய பாராட்டு என்று உறுதியாகச் சொல்வேன்!

ஏழைகளின் பக்கம் நின்றார் சாப்ளின். உழைப்பாளர்களைச் சுரண்டும் முதலாளிகளைப் பகடி செய்தார் சாப்ளின். புறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை எல்லோரும் பார்க்கும்படி திரையிட்டுக் காட்டினார் சாப்ளின். போருக்கு எதிராக உரக்கப் பேசினார் சாப்ளின்.

என்ன செய்யலாம் என்று, உலகமே பார்த்து கையைப் பிசைந்து கொண்டிருந்த ஹிட்லரை துச்சமென நினைத்துப் பகடி செய்தார் சாப்ளின்.

யாரும் பேசாதாதைப் பேசினார். யாரும் தொடாததைத் தொட்டார். யாரும் பார்க்காததைப் பார்த்தார். அதனால்தான் சாப்ளின் இன்றும் பேசப்படுகிறார். என்றும் பேசப்படுவார்.

வேறு வழியே இல்லாமல், சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது கொடுக்க அழைக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து அமெரிக்கா செல்கிறார்.

பார்வையாளர்கள் 12 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். நன்றியுரையில் இப்படிச் சொன்னார், “சொற்கள் மிகவும் பலவீனமாகத் தோன்றுகின்றன. அழைத்துக் கெளரவித்தமைக்கு நன்றி மட்டும் சொல்லிக் கொள்கிறேன்” என்றார் சாப்ளின்.

எல்லாக் காலங்களிலும், எல்லாத் துறைகளிலும் ஒருவரை மிஞ்ச ஒருவர் வரத்தான் செய்வார்கள். ஆனால் மேதைகளின் இடத்தை இன்னொருவர் இட்டு நிரப்புவது அவ்வளவு எளிதல்ல!

யாராலும் இட்டு நிரப்ப முடியாதது சாப்ளினின் இடம். காரணங்களைத் தேடி அலையத் தேவையில்லை! யார்பக்கம் நிற்கவேண்டும் என்ற சாப்ளினின் தெளிவான உறுதியான நிலைப்பாடுதான்.

எதிர்ப்புணர்வே மழுங்கிப்போன எண்ணற்ற கலைஞர்களைப் பார்க்க முடிகிறது. நீங்களும் அப்படி யாரையாவது பார்த்தால் ஹிட்லரை எதிர்த்த சாப்ளினை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேளுங்கள்.

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment