கடந்த வருடத்தின் புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக பங்கேற்றிருந்தது தோழர் பொன்சுதா அவர்களின் மதிமலர் பதிப்பகம்.
மேலும், மதிமலர் பதிப்பகத்தின் முதல்நூல் இதுவென்று, ரஷ்ய இலக்கிய மேதை செகாவின், “மனைவியை விற்றவன் நாவலை அறிமுகப்படுத்தினார்.
நீண்டநாட்கள் கழித்து இன்றைய காலை செகாவோடு தொடங்கியதற்கு தோழர் பொன்.சுதா அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ரஷ்ய இலக்கியங்களை பெரும்பாலும் சோவியத் வெளியீடாகவே பார்த்து படித்த எனக்கு இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பும் அளவும் வித்தியாசமாகப்பட்டது. அதனாலேயே கூட எடுக்கத் தாமதமாகியிருக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று பேரின் மொழிபெயர்ப்பில் சோவியத் புத்தகங்கள் அத்தனையும் பழக்கமாகியிருக்கின்றன. அந்த மொழிபெயர்ப்பின் மயக்கம் இப்போதும் மூளையை ஆக்கிரமித்திருக்கிறது.
ஆனால், இந்தப் புத்தகத்தை அவை நாயகன் அவர்கள் அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.
எது உங்களை கவனம் சிதறாமல் வாசிக்கத் தூண்டுகிறதோ அதுவே சிறந்த நூல், சிறந்த மொழிபெயர்ப்பு, சிறந்த வடிவமைப்பு. அந்த வகையில் மதிமலர் பதிப்பக்கத்தின் மனைவியை விற்றவன் நூல் உண்மையின் மிகச்சிறந்த மொழிநடையில் வந்திருக்கும் மிகச்சிறந்த நூல்.
செகாவை புதிதாக நான் சொல்ல ஏதும் இருக்கிறதா என்ன? செகாவை வாசிப்பது என்பது என்னளவில் மனித மனங்களுக்குள் இரகசியச் சாவியின் துணையோடு நுழைவதுதான் என்பேன்.
பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில், அதாவது ஜாரின் ரஷ்யாவில் மனிதர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதற்கு செகாவின் கதைகள் சாட்சியாக இருக்கின்றன.
இந்தக் குறுநாவலும் கூட பணத்திற்காக மனைவியை விற்றவனைப் பற்றிய கதையாகத் தொடங்கி, காதலையும் மகிழ்ச்சியையும் விற்கவே வாங்கவோ முடியுமா என்ற கேள்விகளோடு பயணிக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி ஜாரின் ரஷ்யாவில் பெண்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?
பணத்திற்காக மனைவியை விற்கிறான் என்றால், அவனுடைய மனநிலை என்ன?
மனைவி என்பவள் யார்? சமூகத்தில் அவளுடைய இடமென்ன? அவள் வெறும் விற்பனைப் பொருளா? அவளுடைய விருப்பு வெறுப்புகள்?
பணத்தைக் கொடுத்து அவளைப் பெற்றுக் கொள்கிறவன் மனநிலை என்ன? அவன் அவளை என்னவாகப் பார்ப்பான்?
கொடுமை என்னவென்றால் எல்லோரும் காதலை முன்னிறுத்துகிறார்கள்!
அழகு என்னவென்றால் செகாவ் அற்புதமாக எழுதியிருக்கிறார். அவ்வளவுதான்! நூலை வாங்கி வாசியுங்கள்.
இன்னும் இதுபோல் நிறைய நல்ல புத்தகங்களைக் கொண்டு வாருங்கள் தோழர். மதிமலருக்கு என் வாழ்த்துகள்.
தோழமையுடன்
ஜோசப் ராஜா
