போரை யார் நிறுத்துவது?

மீப காலங்களாக இந்த உலகத்தின் கண்கள் அதிகமாகப் பார்த்துக் கொண்டிருப்பது, போர்ச் செய்திகளைத்தான்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் பின்னிருந்து இயக்க உக்ரைன் ரஷ்யாவை எதிர்க்கத் தயாரானது.

வெளியிலிருந்து பார்த்தால், ரஷ்யா போரைத் தொடங்கியது போலத்தான் தெரியும். ஆனால் உண்மை? போரைத் தொடங்க நிர்பந்திக்கப்பட்டது ரஷ்யா.

உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்தது அமெரிக்கா. உக்ரைனிற்கு இராணுவ உதவிகளைச் செய்தார்கள் அமெரிக்க உள்ளிட்ட நேட்டோ கூட்டணி நாடுகள்.

ட்ரம்ப் இரண்டாவது முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் சில நகைச்சுவைகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். அதில் முக்கியமானது. போர்களையெல்லாம் நிறுத்தப்போகிறேன் என்பது.

இந்த உலகம் இதுவரையிலும் சந்தித்த பெரும் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது அமெரிக்கா. இந்த உலகத்திற்குப் பெரும் தீங்குகளைச் செய்திருக்கிறது அமெரிக்கா. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டை முதலில் பயன்படுத்தி ஒரு பேரழிவைத் தொடங்கி வைத்தது அமெரிக்கா.

அதிபர் ட்ரம்ப் மட்டுமல்ல, அமைதியைப் பற்றிப்பேச ட்ரம்பை ஆதரிக்கும் ஒர் அமெரிக்கனுக்குக் கூட அருகதை கிடையாது. சொல்லி வைத்தது போல எல்லா அதிபர்களும் பொய்தான் சொல்கிறார்கள்.

அமெரிக்க அதிபரின் பொய்தான் ஈராக்கை சிதைத்தது. லிபியாவை ஒன்றுமில்லாமல் ஆக்கியது. ஆப்கானை அழிக்கத் துடித்தது. சிரியாவை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஹமாஸ் தாக்குதல் தொடுத்தார்கள் என்று போரைத் தொடங்கிய இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் பல்லாயிரம் குழந்தைகளைக் கொன்றுபோட்டது. அமெரிக்கா அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டதை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்ட காஸாவை எப்படிப் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று புத்திசாலியைப் போல ட்ரம்ப் பேசியதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சம்.

பாலஸ்தீனத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவுகள் இஸ்ரேலின் அமெரிக்காவின் இரத்தவெறியைத் தணித்திருக்க வேண்டும். உலகமும் கூட அப்படித்தான் எதிர்பார்த்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

போர்க்கப்பலைக் கொண்டு வந்து ஈரானுக்குப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்ன அமெரிக்க முட்டாள்தனத்தை உலகம் உதட்டில் சிரிப்பை நிறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானோடு போர் தொடங்கிய உடனேயே, அவர்கள் உச்ச தலைவரைக் கொன்றார்கள் அதுமட்டுமில்லாமல் பள்ளிக்கூடத்தின் மீது குண்டுபோட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகளைக் கொன்று போட்டார்கள்.

இப்போது ஈரானில் செய்து கொண்டிருப்பதைப்போல, வரலாறு முழுக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் செய்து கொண்டிருப்பது எல்லாமும் மன்னிக்க முடியாத போர்க்குற்றங்கள். மானுட சமூகத்திற்கு எதிரான மிகப்பெரிய அநீதி.

இந்த உலகம் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து இவர்களைக் கண்டிக்க வேண்டும். இந்த உலகத்தின் கரங்கள் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து இவர்களைத் தண்டிக்க வேண்டும்.

உலக மக்களையே துன்பத்திற்குள் தள்ளும் ஒரு பெரும் போரை ட்ரம்ப் ஒரு விளையாட்டை போலச் செய்து கொண்டிருப்பதை அமெரிக்கர்கள் எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.

மானுட அழிவை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இஸ்ரேல் அதிபரை அந்த நாட்டின் மக்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று நினைக்கும்போதே எரிச்சல் அதிகரிக்கிறது.

ஆனால் சமகாலப் போர்களின் தொடர்ச்சியில் உக்ரைன் ரஷ்ய யுத்தம் செய்யாததை, இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் செய்யாததை, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நட த்தும் யுத்தம் செய்திருக்கிறது.

ஆம் உலக மக்களைப் பேச வைத்திருக்கிறது. போருக்கு எதிராக மெல்ல வாய் திறக்கிறார்கள். காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு என்றதும், என்னதான் நடக்கிறது என்று மெல்ல எட்டிப்பார்க்கிறது உலகத்தின் கண்கள்.

மளிகைக்கடையில் இரண்டு பெண்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கடுமையாகக் கண்டித்து தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தேநீர்க்கடையில் கொதித்துக் கொண்டிருக்கும் பாலைவிடவும் சூடாக இருக்கிறது போர்ச்செய்திகள்.

பேசவே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கணவனும் மனைவியும் இரவு உணவோடு போரைப் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். என்னதான் நடக்கிறது என்று குழந்தைகளும் கூட கேட்கத் தொடங்குகிறார்கள்.

அலுவலகங்களில் போர்ச்செய்திகள் கணிப்பொறிகளை நிறைக்கத் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்காவின் போர்க்குற்றங்களைத், இஸ்ரேலின் மானுட வெறுப்பை தேடித்தேடிப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் எல்லோரும்.

உலகத்தின் இதயங்களிலிருந்து மிகப்பெரிய வெறுப்பை இந்த யுத்த வெறியர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் தேடிப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் கோபம் அதிகரிக்கத்தான் செய்யும்.

பாலஸ்தீனப் போரைத் தொடர்ந்து எழுதியவன் என்ற முறையில், போர்களைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவன் என்ற முறையில் எதற்காக இந்தப் போர்கள்? எதற்காக இந்தப் பேரழிவுகள் என்றெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது.

போருக்கு நடுவில் உக்ரைன் அதிபரை அழைத்து வியாபாரம் பேசினார் ட்ரம்ப். கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடச் சொல்லி அடிக்காத குறையாக கேட்டார் அமெரிக்க அதிபர்.

ஆக, எல்லாமும் அவர்களுக்கு வியாபாரம்தான். ஆனால் உங்களுக்கும் எனக்கும் அப்படியல்ல தானே. அதனால்தான் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்காதீர்கள், யார் சொல்வதையும் கேட்காதீர்கள்.

தேடுங்கள், இவர்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தேடிப் பாருங்கள். போருக்கு எதிராகப் பேசத் தொடங்குங்கள். போரை அமெரிக்க அதிபரால் நிறுத்தமுடியாது. இஸ்ரேல் அதிபரால் நிறுத்த முடியாது. இழப்பிலுக் போராடிக் கொண்டிருக்கும் ஈரானால் நிறுத்தமுடியாது.

ஆனால், நீங்கள் நினைத்தால் நிறுத்தலாம். முயற்சி செய்யுங்கள். சமயலறை வரைக்கும் வந்துவிட்டது, போரின் தாக்கம். போருக்கு நடுவில் அமெரிக்காவில் பல்லாயிரம் கோடியை முதலீடு செய்து, போருக்கு உதவியாக இருக்க நாமொன்றும் பணமே! என்றலையும் முதலாளி அல்ல! மனிதர்கள்.

எழுத்தாளர்களே! நீண்டகாலங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் கண்களுக்கு இந்தப் பேரழிவுகள் தெரியவில்லையா? இந்த அழிவுகளுக்கெல்லாம் உங்கள் இலக்கிய இதயம் துடிக்காதா?

சக கலைஞர்களே, நாமே மானுடத்தின் சாட்சியல்லவா! நம்முடைய வார்த்தைகளே வரலாற்றின் சாட்சியல்லவா! வாருங்கள் பேரழிவிற்கு எதிராகக் பேசுவோம், எழுதுவோம், போராடுவோம். விருதுகளை விட்டுவிடுங்கள். அதிகார பீடங்களின் அங்கீகாரங்களைப் புறந்தள்ளுங்கள். மக்களைப் பாருங்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள்.

போர் வியாபாரிகளுக்கானது. திமிர் பிடித்த தலைவர்களுக்கானது. விளைவுகள் மக்களுக்கு மட்டும்தான். எரிவாயுக் கிணறுகளும், எண்ணெய் வயல்களும் பற்றியெரிந்து கொண்டிருக்கின்றன.

பொறுமையாக இருக்கும் நேரமல்ல, போர் ஒழிய வேண்டும் என்றால், உங்களால்தான் முடியும். போர் வெறியர்கள் ஒழிய வேண்டுமென்றால், உங்களால் தான் முடியும். ஒரு கலைஞனாக, காயம்பட்ட இதயங் கொண்டவனாக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment