சென்னை புத்தகக் கண்காட்சி – 2026

மதிமலர் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பொன் சுதா அவர்களோடு

2026 ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது.

நேற்று மாலை சென்றிருந்தேன்.

உள்ளே நுழைந்ததில் இருந்து,

ஒளிசிந்த அலைந்து கொண்டிருக்கும் எண்ணிலடங்கா முகங்களைப் பரவசத்தோடு பார்த்தேன்.

இந்த முகங்களை பதினைந்து வருடங்களுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அதே பரவசம், அதே வாஞ்சை, அதே அன்பு, அதே அக்கறை என்று இயங்கிக் கொண்டிருக்கும் முகங்கள்.

இந்தக் கண்காட்சியின் புதிய வரவாக வந்திருக்கும் தோழர் பொன் சுதா அவர்களின் மதிமலர் பதிப்பகம், இலக்கியம் சார்ந்தும், சினிமா சார்ந்தும் இன்னும் சிறந்த படைப்புகளைக் கொண்டுவர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இடதுசாரிப் பத்தகங்கள் இருக்கும் கடைகளில் சோவியத் புரட்சியின் வரலாற்றை விசாரித்துக் கொண்டிருந்த இளைஞரிடம் “போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு” வாங்கி வாசியுங்கள் என்று சொன்னேன். குறித்துக் கொண்டார். நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. 

குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் தாண்டி இப்படிப்பட்ட இளைஞர்களை வாசிக்க வைக்க வேண்டியதும், வழிநடத்த வேண்டியதுமே தேவையாக இருக்கிறது.

புத்தகங்களைக் கண்காட்சியில் வைக்கச்சென்ற தம்பி கணேஷ், கவிதைகள் வாசிக்கப்படாது, கவிதை நூல்கள் விற்பனை ஆகாது என்று, கவிதைகளின் மீது ஒருவித ஒவ்வாமை இருக்கிறதே” என்று கேட்டார். கவிதையின் மீதான இதுபோன்ற கேள்விகளையும், இதுபோன்ற விமர்சனங்களையும் கடந்த இருபது வருடங்களாகக் கேட்டுக்கொண்டேதான், எழுதிக் கொண்டிருக்கிறேன். 

ஏன் எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள் என்று கேட்டால், ஏன் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று கேட்கலாம். இரண்டும் ஒன்றுதான்.  காதலிக்கத் தொடங்குவதும், கவிதை எழுதத் தொடங்குவதும் ஒன்றுதான். ஆனால் தொடர்வதில்தான் எல்லாமும் அடங்கியிருக்கிறது. உங்களால் தொடர்ந்து எழுதமுடிந்தால் உன்னதங்களைப் பிரசவிக்கலாம். உன்னதங்களை உருவாக்குங்கள். உருவாக்கத் துணைநில்லுங்கள். 

வார்த்தைகளால் வாசகனை என்னால் கட்டிப்போட முடியும், கவிதை வாசித்தால் கேட்கிறவர்களை என்னால் தீப்பிழம்பாக மாற்ற முடியும். ஒரு கவிஞனாக நான் செய்ய முடிந்தது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

இன்னும் விரிவாக எழுதலாம்.

காத்திருக்கும் சாவிகள் உள்ளிட்ட நம்முடைய நூல்களில் சில கீழ்க்கண்ட கடைகளில் கிடைக்கும். தோழர்கள் சென்று வாங்கவும், நண்பர்களுக்கு வாங்கிக் கொடுக்கவும், கவிதைகள் சார்ந்த உரையாடல்களை முன்னெடுக்கவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மதிமலர் பதிப்பகம்  – 197 

சிந்தன் புக்ஸ் – 298 – 299

அலைகள் வெளியீட்டகம் – 048 – 049

போதிவனம் – 263 – 264

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment