ஒருவழியாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஒருவகையில் கொஞ்சம் சீக்கிரமாகவே தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.
ஏனென்றால், உடனடியாக விசாரித்து தீர்ப்பு கொடுக்க வேண்டிய இதுபோன்ற வழக்குகள் ஏராளம் இருக்கத்தான் செய்கின்றன.
தேர்தலுக்கு இன்னும் சிலநாட்களே இருக்கும் நிலையில், இப்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு இந்தத் தேர்தலில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்து இந்தத் தீர்ப்பை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளலாம்.
மன்னிக்கவே முடியாத குற்றத்தைச் செய்த அந்தக் குற்றவாளிகளுக்கு இந்த தேசத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன சட்ட வாய்ப்புகள்.
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அதிகாரத்தின் கரங்கள் நீளத்தான் செய்யும்.
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தை நினைத்துப் பார்க்கிறேன். கணவனை, மகனை இழந்த தாயின் துயரம் ஆற்றுப்படுத்த முடியாதது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை எளிய மனிதர்களின் மீது தவறாகப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.
ஆனால் இந்தச் சமூகமே அவர்களுக்கானதுதானே!
எளிய மனிதர்களுக்கானது இல்லையே! என்ற எண்ணங்கள் இந்த நேரத்தை இன்னும் சூடாக்குகின்றன.
இப்போது மட்டுமல்ல, எப்போதும் நான் உறுதியாக நம்புவது இதுதான். எளிய மனிதர்களுக்கு எதிரான இந்தச் சமூகமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்காமல் மாற்றங்கள் சாத்தியமில்லாததுதான்.
உயர்நீதிமன்றம் உறுதிசெய்யுமா? உச்சநீதிமன்றம் என்ன சொல்லும்?
பில்கிஸ் பானு போன்ற இந்த தேசத்தின் மகள்களுக்கு எதிரான வழக்குகளின் வடிவங்கள் கண்முன்னால் தோன்றி மறைகின்றன.
ஜோசப் ராஜா
