மீண்டும் ஒரு போராட்டம்
டெல்லியை
சூடாக்கிக் கொண்டிருக்கிறது
ஆட்சியாளர்களின் அடிவயிற்றில்
நெருப்பைக் கொட்டிய
விவசாயிகளின்
போராட்டத்தைத் தொடர்ந்து
இதோ
தேர்வுகளின் வழியாக
நீண்ட நாட்களாகத்
தங்களுக்கு
இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
அநீதிக்கு எதிராகத்
திரண்டிருக்கிறார்கள் மாணவர்கள்
வழக்கம்போல
அதிகாரத்தின் கரங்கள்
மாணவர்களுக்கு எதிராகவும்
இளைஞர்களுக்கு எதிராகவும்
இரக்கமில்லாத வகையில்
நீண்டு கொண்டிருக்கிறது
மாணவர்களே
இளைஞர்களே
அவர்களுக்கு
அவ்வளவுதான் தெரியும்
மக்களுக்கு எதிரான
அந்த அதிகாரத்தை
மண்ணோடு மண்ணாக
புதைத்து விடக்கூடிய வலிமை
உங்களுக்குத்தான்
உங்களுக்கு மட்டும்தான் இருக்கிறது
உண்ணாவிரதமாகட்டும்
பேரணியாகட்டும்
அமைதியான போராட்டமாகட்டும்
அதிகாரம்
தனக்கு எதிரான
எந்தப் போராட்ட வடிவத்தையும்
விரும்பாது எப்போதும்
முன்னேறுங்கள் தோழர்களே
கொலைகாரத் தேர்வினால்
தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டவர்கள்
வருகிறார்கள் பின்னே
முன்னேறுங்கள் தோழர்களே
கொலைகாரத் தேர்வினால்
தொடர்ந்து ஏமாற்றப்பட்டவர்கள்
வருகிறார்கள் பின்னே
முன்னேறுங்கள் தோழர்களே
கொலைகாரத் தேர்வுக்குப்
பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள்
வருகிறார்கள் பின்னே
முன்னேறுங்கள் தோழர்களே
கொலைகாரத் தேர்வினால்
கடன்காரர்களாகிப் போனவர்கள்
வருகிறார்கள் பின்னே
முன்னேறுங்கள் தோழர்களே
கொலைகாரத் தேர்வினால்
எதிர்காலம் தொலைத்தவர்கள்
வருகிறார்கள் பின்னே
நிச்சயமாக ஒருநாள்
எண்ணற்ற கனவுகளைக்
கொலை செய்த
எண்ணற்ற நம்பிக்கைகளைக்
கொலை செய்த
மாணவர்களின் எதிர்காலத்தைக்
கொலை செய்த
அந்தத் தூக்குக் கயிறுகள்
இறங்கிவரும்
அந்தத் தூக்குக் கயிறுகள்
கைமாறும்
அன்று
அதிகாரத்தின் குரல்வளைகள்
நெறிக்கப்படும்
அதற்காகத்தான்
அந்தக் காட்சிக்காகத்தான்
அதற்காகத்தான்
அந்த நாளுக்காகத்தான்
காத்திருக்கிறேன்!
ஜோசப் ராஜா
