165 சின்னஞ்சிறிய கல்லறைகள்

ப்படித்தான்

காஸாவின் குழந்தைகளைத்

தேடித்தேடிக்

கொன்று குவித்தார்கள்

கொஞ்சம் விட்டிருந்தால்

பசியாலோ

குளிராலோ

அவர்களே

செத்துப் போயிருப்பார்கள்

திறந்த வானத்தின் கீழ்

ஒளிய இடமின்றி

ஓடிக் கொண்டிருந்தவர்களை

தேடித்தேடிக்

கொன்று குவித்தார்கள்

இலக்கே

குழந்தைகள்தான்

என்பது போல

வெறிபிடித்த மிருகமாய்த்

தின்று தீர்த்தார்கள்

பாலஸ்தீன நிலமெங்கும்

பாய்ந்தோடிய

குழந்தைகளின் இரத்தத்தைக்

குடித்துச் செரித்தார்கள்

பாருங்களேன்

அந்த

யுத்த வெறியர்களுக்கு

இன்னும் அடங்கவில்லை பசி

ஈரானின் மீது

தாக்குதலைத் தொடங்கியதும்

குண்டு விழுந்தது

பள்ளிக்கூடத்தில்

யுத்தமென்றால்

என்னவென்று தெரியுமா

அந்தக் குழந்தைகளுக்கு

யுத்தத்தைத் தொடங்க

அமெரிக்கா சொல்லும்

பொய்கள்தான்

என்னவென்று புரியுமா

அந்தக் குழந்தைகளுக்கு

இஸ்ரேலின் இதயத்தில்

மானுட வெறுப்பும்

யுத்த வெறியும்

எதற்காக நிறைந்திருக்கிறது

என்பதை அறிவார்களா

அந்தக் குழந்தைகள்

உலக ஒழுங்கு

அணு ஆயுதம்

ஆயுத வியாபாரம்

பணப்பசி

இனவெறி

இப்படி எதையாவது

அறிவார்களா

அந்தக் குழந்தைகள்

நூற்று அறுபத்தியைந்து

குழந்தைகள்

படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்

வெள்ளைத் துணியில்

வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்கும்

அந்தப் பிஞ்சுகளைப்

பார்க்க முடியவில்லை

அவர்களுக்காக

அவசர அவசரமாக

சின்னஞ்சிறிய அளவில்

தோண்டப்பட்டிருக்கும்

கல்லறைகளைப்

பார்க்க முடியவில்லை

ஏ அமெரிக்கர்களே

ஏ இஸ்ரேலியர்களே

எப்படி வாழப்போகிறீர்கள்

இந்த பூமியில்

எத்தனை கோபம்

எத்தனை சாபம்

உண்மையிலேயே உங்களுக்கு

வெட்கமாக இல்லையா!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment