லெனினைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

புரட்சியின் விஞ்ஞானி தோழர். லெனின் பிறந்தநாள் இன்று. . .

லெனினைப்

புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

ஆயிரமாயிரம் வருடங்களின்

மானுட வரலாற்றைப்

புரிந்துகொள்ள வேண்டும்


லெனினைப்

புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

மானுட வரலாற்றில்

தனிச்சொத்தின் தோற்றத்தையும்

வரலாறு முழுக்க

தனிச்சொத்தின் தாக்கத்தையும்

புரிந்துகொள்ள வேண்டும்


லெனினைப்

புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்கள்

ஒருசிலருக்கே சொந்தமாக இருக்க

எண்ணிலடங்கா எளிய மனிதர்கள்

அடிமைகளைப் போல அந்த நிலத்தில்

வியர்வையும் ரத்தமும் சிந்திக் கொண்டிருந்ததைப்

புரிந்துகொள்ள வேண்டும்


லெனினைப்

புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

இலாபமே குறிக்கோளாய்க் கொண்ட

முதலாளித்துவ உற்பத்தி முறையையும்

சந்தையே லட்சியமாகக் கொண்ட

முதலாளித்துவ உற்பத்தி உறவையும்

புரிந்துகொள்ள வேண்டும்


லெனினைப்

புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

விவசாயிகளின் தொழிலாளிகளின்

நீண்டகாலத் துயரங்களையும்

நீண்டகாலப் போராட்டங்களையும்

நீண்டகால ஆசைகளையும்

புரிந்துகொள்ள வேண்டும்


லெனினைப்

புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

கனவுகளிலிருந்து

விலக்கி வைக்கப்பட்டவர்களையும்

கல்வியிலிருந்து

புறக்கணிக்கப்பட்டவர்களையும்

உழைப்பிலிருந்து

அந்நியப்படுத்தப்பட்டவர்களையும்

புரிந்துகொள்ள வேண்டும்


எல்லாவற்றிற்கும் மேலாக

எல்லாவற்றிலும் முக்கியமாக

லெனினைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

உங்களுக்கு இதயம் வேண்டும்

உங்கள் இதயத்திலிருக்கும்

அன்பின் ஊற்றுக்கண்கள் திறந்திருக்க வேண்டும்

உங்கள் இதயம்

உலகத் தொழிலாளர்களின்

உன்னத வாழ்விற்காகத் துடித்திருக்க வேண்டும்


லெனினைப்

புரிந்துகொள்ள வேண்டுமென்றால்

சமூகத்தின் அடித்தளத்திலிருந்து

பாட்டாளிவர்க்க இலக்கியத்தின்

பிதாமகனாய் உருவெடுத்த

மக்சீம் கார்க்கியும்

சாதாரண கூலித்தொழிலாளியாக இருந்து

உலகத்தின் ஒவ்வொரு இதயத்திலும்

புரட்சி நெருப்பை பற்றச்செய்த

நிக்கலாய் ஒஸ்த்ரோவ்ஸ்கியும்

உருவாகக் காரணமாக இருந்த புரட்சியையையும்

அதைநிகழ்த்திய போல்ஷ்விக் கட்சியையும்

புரிந்துகொள்ள வேண்டும்


லெனின்

வெறும் பெயரல்ல தோழர்களே

மானுட நாகரீகத்தை

அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்ற

மாபெரும் இயக்குவிசை

நினைத்ததை நினைத்தபடி

சொன்னதைச் சொன்னபடி

கருத்தைப் பெளதீக சக்தியாய்

மாற்றிக்காட்டிய புரட்சியின் விஞ்ஞானி

அந்த மகத்தான தலைவரை

ஒரு முதலாளி வெறுக்கலாம்

முதலாளித்துவத்தை ஆதரிக்கும்

எழுத்தாளனும் பத்திரிக்கையாளனும்

விமர்சனம் செய்யலாம்

ஆனால்

ஒரு தொழிலாளியாக

ஒரு எளியமனிதனாக

ஒரு கவிஞனாக

எனக்கான தலைவராய்

என்னுடைய லெனினை

எப்போதும் ஏந்திக்கொள்வேன் இதயத்தில்


இதோ இந்தக் காலையில்

நிலங்கள் அனைத்தும் பொதுவுடமையாக்கப்படும்

என்ற மானுட அன்பின் குரல்

தனிச்சொத்து முற்றிலும் ஒழிக்கப்படும்

மானுடக் கரிசனத்தில் குரல்

மகத்தான தோழர் லெனினின் குரல்

உங்களுக்குக் கேட்கவில்லையா

என் காதுகளோ நிறைந்திருக்கிறது!

Related Articles

2 comments

பேராசிரியர் டில்லிபாபு, பொன்னேரி 22/04/2023 - 10:04 AM

லெனினை மூளைக்குள் ஏற்றி மனனம் செய்து வியபாரம் செய்பவர்கள் இருக்க நீங்கள் லெனினை இயத்தில் ஏற்றி இருப்பது, பாராட்ட சொல்கிறது வாழ்க!

Reply
பெரணமல்லூர் சேகரன் 24/04/2023 - 9:15 AM

பொதுவுடமைச் சிற்பி லெனின் பிறந்தநாளில்
லெனினைப் புரிந்துகொள்ள எவற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தமக்கே உரிய முறையில் வரிசைப்படுத்தியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

அவ்வாறே அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொண்டு லெனினைப் புரிந்துகொள்வோம்.

மனிதகுல விடுதலைக்கான பயணத்தில் இணைவோம்‌.

Reply

Leave a Comment