யுத்தம் நிறுத்தப்பட்ட நிலம்

யுத்தம்

நிறுத்தப்பட்ட நிலத்தில்

மெளனத்தைத் தவிர

எதற்கும் இடமில்லை

யுத்தம்

நிறுத்தப்பட்ட நிலத்தில்

அமைதியைத் தவிர

எதற்கும் இடமில்லை

நேற்றுவரையிலும்

காஸாவை மூடியிருந்த

கரும்புகை

பேரழிவின் சாட்சியாக

நகர முடியாமல்

நகர்ந்து கொண்டிருக்கிறது

நேற்றுவரையிலும்

போர் விமானங்களினால்

மறைக்கப்பட்டிருந்த

காஸாவின் வானம்

அழிக்கப்பட்டிருக்கும்

அந்த நிலத்திற்கு

ஆதரவாகத் தன்னுடைய

ஒளிக்கற்றைகளை

அனுப்பிக் கொண்டிருக்கிறது

நரகமாக்கப்பட்டிருக்கும்

நகரத்திற்கு மேலே

எந்தப் பறவைகளும்

பறக்கத் தொடங்கவில்லை

யுத்தம்

மனிதர்களை மட்டுமல்ல

பிரபஞ்சத்தின்

ஒவ்வொரு அம்சத்தையும்

அழிவை நோக்கி

அழைத்துச் செல்லக் கூடியது

உலகமே

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க

குழந்தைகளின்

கல்லறையாக்கப்பட்ட காஸா

கனத்த மெளனத்துடன்

மூச்சிறைத்துக் கொண்டிருக்கிறது

மீண்டெழுமா

மிச்சமிருக்கும் கொஞ்சமும்

மீண்டும் ஆழப் புதைக்கப்படுமா

என்ற கேள்விகள்

எனக்குள் எழுப்புகின்ற உணர்வுகளை

உங்களை விட்டால்

யாரிடம் பகிர்ந்து கொள்வேன்

யுத்தம்

நிறுத்தப்பட்ட நிலத்தில்

இடிந்த வீடுகளின் கீழ்

இறந்து கிடக்கும் மனிதர்கள்

ஒரே குழியில்

குவியல் குவியலாகப்

புதைக்கப்படுவதை

நீலவானத்தோடு சேர்ந்து

நிம்மதியின்றி

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

யுத்தம் நிறுத்தப்பட்ட

நிலத்தைப் பார்ப்பதென்பது

ஒருவகையில்

மனிதர்களின் பேராசையைப்

பார்ப்பதுதான்

யுத்தம் நிறுத்தப்பட்ட

நிலத்தைப் பார்ப்பதென்பது

ஒருவகையில்

மனிதர்களின் அற்பத்தனத்தைப்

பார்ப்பதுதான்

யுத்தம் நிறுத்தப்பட்ட

நிலத்தைப் பார்ப்பதென்பது

ஒருவகையில்

மனிதர்களின்

மனிதத் தன்மையற்ற செயலைப்

பார்ப்பதுதான்

யுத்தம் நிறுத்தப்பட்ட

நிலத்தைப் பார்ப்பதென்பது

ஒருவகையில்

முதலாளிகளின் இலாபவெறியைப்

பார்ப்பதுதான்

யுத்தம் நிறுத்தப்பட்ட

நிலத்தைப் பார்ப்பதென்பது

ஒருவகையில்

முதலாளித்துவத்தின் குணத்தை

இரத்தமும் சதையுமாகப்

பார்ப்பதுதான்

பாருங்கள்

கண்களைத் திறந்து பாருங்கள்!

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 25/11/2023 - 8:04 PM

யுத்தம் நிறுத்தப்பட்ட
பாலஸ்தீனத்தைப் பார்ப்பது எவ்வளவு கொடுமையானது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

யுத்த நிறுத்தமும் தற்காலிகமானதுதான் என்னும்போது கவலை மேலிடுகிறது.

இன்னும் எவ்வளவு உயிர்களைப் பலி கொடுப்பது?

வேதனையின் விளிம்பில் மனிதகுலம்.

நிரந்தரப் போர் நிறுத்தம் ஒன்றுதான் ஆறுதல் அளிக்கும். அப்போதுதான் இருக்கும் உயிர்களைக் காக்கவும் இயல்பு வாழ்க்கை திரும்பவும் செய்ய வேண்டிய இமாலயப் பணிகளில் பயணிக்க முடியும்.

Reply
மைத்திரிஅன்பு 26/11/2023 - 10:41 PM

பேராசை, மனித தன்மையற்ற செயல், அற்பத்தனம், முதலாளித்துவம் – இப்படித்தான் சக மனிதர்கள் அழித்தொழிக்கும் முதலாளித்துவத்திற்கு கவசமாக இருந்துவருகிறார்கள். மனிதர்கள் ஆசையும், அளவுக்கு அதிகமான பொருளீட்டலும், முறையற்ற செயல்முறைகளும் அர்த்தமற்ற கொண்டாட்டங்களும் தொடர்ந்து இம்மாதிரியான முதலாளித்துவ அத்துமீரல்கள் நிகழ வழிவகுத்துகொண்டே இருப்பதை தோழரின் இவ்வரிகள் உணர்த்துகிறது.

Reply

Leave a Comment