மணிப்பூர் – காட்சியும் கவிதையும்

காலங்காலமாகத் தங்களின் சொந்த ஆதாயங்களுக்காக சாதிக் கலவரங்களையும், மதக் கலவரங்களையும், இன மோதல்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் எந்தவொரு மனிதகுல விரோதிக்கும் தெரியாத ஒன்று, எந்தவொரு மனிதகுல விரோதியும் யோசிக்காத ஒன்று, அந்தக் கலவரங்களாலும், அந்த மோதல்களாலும் ஏற்படும் நீண்டகால விளைவுகள்.

தோ மூட்டிய நெருப்பு மெல்ல அணைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மணிப்பூரில், உயிருக்குப் பயந்து போட்டது போட்டபடி உடுத்திய துணியோடு அப்படியே ஓடிய மக்கள் உடைந்த இதயங்களோடு மெல்ல வீடுதிரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், நெருப்பின் பாதிப்பு என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் தோழர்களே! வன்முறையின் விளைவுகள் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் தோழர்களே! இதோ சில உதாரணங்கள்.

காட்சி : 1

லவரக்காரர்கள் நெருங்குவது தெரிந்து

அவசரமாக வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு

பக்கத்துக் காட்டில் ஒளிந்துகொள்கிறது ஒரு குடும்பம்

எரியும் தங்களின் எளிய வீட்டை

எட்டுக் கண்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றன

காட்டிற்குள் பதுங்கியபடி

அவர்களின் கண்ணீர் அணைக்குமா நெருப்பை!

காட்சி : 2

கையில் பொம்மைகள் இல்லை

கையில் புத்தகங்கள் இல்லை

கையில் திண்பண்டங்கள் இல்லை

கண்களில் கண்ணீரோடு

ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

தப்பித்த குழந்தைகள்!

காட்சி : 3

நிவாரண முகாமாக

மாற்றப்பட்டிருக்கும் தேவாலயத்தில்

தூங்குவதுபோல் படுத்திருக்கும் சிறுவன்

கால்பந்து விளையாட காலணிகள் வேண்டுமென்று

தூக்கத்தில் உதைத்துக் கொண்டிருக்கிறான் கால்களை

பாவம் ஒருகோலும் விழவில்லை அப்போது!

காட்சி : 4

வாழ்வாதாரமாக இருந்த

சின்னஞ்சிறு மளிகைக்கடையை

வன்முறைக்கும்பல் சூறையாடிவிட்டுச் செல்கிறது

கடையோடு கனவுகளும் கடின உழைப்பும்

சூறையாடப்பட்ட சோகத்தை

வறண்ட தொண்டையில்

எச்சிலைப்போல முழுங்கிக் கொண்டிருக்கிறார்

முதியவர்!

காட்சி : 5

ணைந்தும் அணையாமல் இருக்கும்

தங்கள் கிராமத்தை

நிவாரண முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும்

தொலைக்காட்சியில் பார்த்த ஊரின்கண்கள்

ஒற்றுமையாய் ஒரேநேரத்தில் அழுதுகொண்டிருக்கின்றன!

காட்சி : 6

தற்காகப்

எங்கள் பள்ளிக்கூடத்தை எரித்தார்கள்

என்ற காரணமே தெரியாமல்

கலங்கிக் கொண்டிருக்கிறார்கள்

கல்வியை விரும்பும் குழந்தைகள்!

காட்சி : 7

பேரவலத்தில் சாட்சியாக

வீட்டிற்கு வெளியே

தங்கள் சாதிப்பெயரை

எழுதி ஒட்டியிருக்கிறார்கள் கிராமவாசிகள்

பாதுகாப்பிற்காக என்று

அந்தோ!

அந்தச் சனியனே

அத்தனை அழிவிற்கும் காரணமென்று

அறிந்தும் அறியாதவர்களாய்!

காட்சி : 8

லவரத்தில் கொல்லப்பட்டவர்களின்

குடும்பத்து இதயங்கள்

எதிர்காலமெல்லாம்

எத்தகைய உணர்வுகளை

ஏந்தியபடி அலைந்துகொண்டிருக்கும்

என்பதை நினைக்கும்போது

வேதனையாகத்தான் இருக்கிறது!

காட்சி : 9

யற்கைப் பேரழிவைப் போல

இந்தச் செயற்கைப் பேரழிவிலும்

பாதிக்கப்பட்டவர்களால்

நிறைந்திருக்கின்றன மருத்துவமனைகள்

உண்மையைச் சொன்னால்

பேரழிவை உருவாக்குவதில்

இந்த மனித இனம்

இயற்கையை மிஞ்சியதுதான்!

காட்சி : 10

ன்முறை வெறியாட்டங்களை

எரிந்து கொண்டிருக்கும் வீடுகளை

துண்டாடப்பட்டிருக்கும் மனித உடல்களை

எங்கும் எங்கெங்கும்

எழுந்து கொண்டிருக்கும் புகையை

முதன்முறையாகப் பார்த்துக் கொண்டிருக்கும்

ஒரு குழந்தையின் கண்களில்

நிறைந்திருக்கும்

பயத்தின் உணர்வுகளுக்கு

பாதுகாப்பின்மையின் உணர்வுகளுக்கு

ஆட்சியாளர்களே

ஆட்சியாளர்களே

ஆட்சியாளர்களே

பதிலிருக்கிறதா உங்களிடம்?

Related Articles

4 comments

மைத்திரிஅன்பு 12/05/2023 - 1:49 PM

”உண்மையைச் சொன்னால்
பேரழிவை உருவாக்குவதில்
இந்த மனித இனம்
இயற்கையை மிஞ்சியதுதான்!” – உண்மையிலும் உண்மை. இயற்கைக்கு பேரழிவிலும் அளவிட தெரியும். மனித நேயமற்ற சாதிமத வெறி கவ்விய மனிதனுக்குத்தான் அப்படி எந்த ஒரு அளவும் இல்லை. மணிப்பூர் நிகழ்வுகள் ஒவ்வொரு மனித மனங்களையும் கணக்கும் செயல். அதிர்ந்துபோகச் செய்யும் காட்சிகள், அத்தனைக்கும் மேலாய் அந்த உணர்வுகளை வரிகளாய் வடித்து, வாசிக்கும் மனித மனங்களை ‘ஒன்றுமில்லாத ஒன்றிற்காக இத்தனை அதிகாரச் சிந்தனை’ என சிந்திக்க தூண்டி மனிதநேயத்தின் மனிதத்தின் முக்கியத்துவத்தை ‘உச்’ கொட்டி உணரச் செய்கிறது தங்களின் கவிதை. இதைவிட உணவுப்பரிமாற்றத்தை எப்படியும் வெளிப்பட வேறு வழியில்லை என்றுதான் நினைக்கிறேன். மனிதனுக்கு எப்பொழுது இந்த வெறிச் சிந்தனை அடியோடு அழியுமோ. இந்த பூமி பந்து மட்டும் ஏன்? மனிதர்கள் வசிக்கும் சூழலைப் பெற்றிருக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. மற்ற கோள்களைப் போல உயிரினங்கள் வசிக்க ஏதுவற்றதாக இந்த பூமிப்பந்தும் இருந்திருப்பின், இத்தனை அழிவுகளை மனிதன் மனிதனுக்குள்ளாக நிகழ்த்திக்கொள்ளாமல் இருப்பானே.. இருக்கும் அழகியலை ஆக்கத்தை அன்பை உணர சிந்திக்காதவனை எப்படி மனிதன் மனிதன் என்று சொல்லுவது? இதை இன்னும் தெரிந்துகொள்ளாமல் எங்கோ ஏதோ என்று நினைத்து திரிந்துகொண்டிருக்கும் நம்மவர்களின் மனநிலை இதைக்காட்டிலும் ஆபத்து நிறைந்ததே. ‘அறியாமை’ என்னும் கொடிய அரக்கண் எப்படி இருப்பான் என்பதை நாம் எப்படியும் எதிர்க்கொள்ளத்தான் போகிறோம். என்று என்பது மட்டுமே நம் கேள்வியும் எதிர்ப்பார்ப்பும் தோழர்.

Reply
ஜோசப் ராஜா 12/05/2023 - 2:28 PM

தங்கள் உணர்வுப் பரிமாற்றத்திற்கு நன்றி தோழர். மணிப்பூர் எங்கோ ஓரத்தில் இருப்பதாய் நினைத்துக்கொண்டிருப்பதுதான் பெரும்பாலான மனிதர்களின் மெளனத்திற்குக் காரணம். உண்மையைச் சொன்னால் அங்கே நிகழும் வன்முறை பெரும் துயரத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் ஒற்றுமையின் தேவையை உணர்த்துவதாகத்தான் உணர்கிறேன் நான். முதலில் பேசுவோம். தொடர்ந்து கொண்டுசெல்வோம். வெல்ல முடியாத எதிரி எங்கிருக்கிறான்? வெல்வோம் தோழர். நன்றி.

Reply
பெரணமல்லூர் சேகரன் 12/05/2023 - 4:15 PM

மணிப்பூர் கலவரங்களை
அங்குலம் அங்குலமாக காட்சிப்படுத்திக் கவிதையாக்கியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

அக்காட்சிகள் நம் கண்முன் விரியும்போது ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரக்கமும் மறுபுறம் இந்நிலைக்குக் காரணமானவர்கள் மீதான கோபாவேசமும் மேலிடுகிறது.

படியுங்கள்
பரப்புங்கள்
அசைக்கட்டும்
அசையாமல் உள்ள மனிதர்களை!

Reply
ஜோசப் ராஜா 12/05/2023 - 4:43 PM

நன்றி தோழர்.தங்கள் கருத்துகளுக்கு!

Reply

Leave a Comment