போரும் பசியும்

ள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கும்

சின்னஞ்சிறிய மகள்

அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்

எப்படித்தான் அவளுக்கு

இவ்வளவு களைப்பு வருகிறதோ

என்றெண்ணிக் கொண்டே

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

அன்பின் வார்த்தைகளை

அள்ளித் தெளிக்கிறேன்

பேரன்பின் முத்தங்களால்

அவளை நிறைக்கிறேன்

பள்ளிக்கு நேரமாகிறது என்று

பதட்டமடையச் செய்யாமல்

அவளை உற்சாகமடையச் செய்யும்

ஒவ்வொரு வார்த்தைகளையும்

தேர்ந்தெடுத்துப் பேசுகிறேன்

அவ்வளவுதான்

கணப்பொழுதில் சோர்வு நீங்கி

மலர்கிறாள் ஒளிர்கிறாள்

“அப்பா

நான் சாப்பிடனும்னா கதைசொல்லு”

என்று கேட்கிறாள்

நான் சொல்ல ஆரம்பிக்குமுன்

கதையின் கருவைச் சொல்லிக்கொடுத்து

கதைக்கான சூழலையும்

கதை மாந்தர்களையும்

ஏன் கதையின் போக்கையும்

சொல்லிக் கொடுக்கிறாள்

இப்படியாக

அவளோடு விளையாடி

அவளுக்குக் கதைசொல்லி

அவளுடைய  

அத்தனை கட்டளைகளுக்கும்

கீழ்ப்படிந்து

காலை உணவைச் சாப்பிடவைத்து

மதிய உணவைத் தயார்செய்து கொடுத்து

இடையில் பசியெடுத்தால் சாப்பிட்டுக்கொள்ளக்

கொஞ்சம் தின்பண்டங்கள் கொடுத்து

பள்ளிக்கு அனுப்பிய பிறகு

கொஞ்சம் பதட்டமான குரலில்

மனைவி கேட்கிறாள்

“சரியாச் சாப்பிட்ருவால்ல

கொழந்த பசியோட இருந்திரமாட்டாளே” என்று

அம்மாவின் பாடு அம்மாவுக்கு

 

நீங்கள் நினைக்கலாம்

எல்லோர் வீட்டிலும் நடப்பதுதானே

எல்லாக் குழந்தைகளும்

அனுபவிப்பதுதானே என்று

இல்லை அப்படி இல்லை

உங்களுடைய என்னுடைய

குழந்தைகளைப்போல அல்ல

அந்தப் பாலஸ்தீனக் குழந்தைகள்

குண்டுகளால் கொல்லப்படாத குழந்தைகள்

கொஞ்சம் கொஞ்சமாக

கொஞ்சம் கொஞ்சமாக

பசியால்

பசியால்

பசியெனும் பேரழிவால்

கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

போர் ஏற்படுத்திய

உணவுத் தட்டுப்பாட்டால்

பெருங்கருணை கொண்ட

எதிரியின் கைகளால்

உணவுப்பாதைகள் அடைக்கப்பட்டதால்

ஒவ்வொரு நாளும் பசியோடிருக்கிறார்கள்

ஒவ்வொரு பொழுதும் பசியோடிருக்கிறார்கள்

பசியோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

போரின் மரணங்களை

பசியோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

போரின் அலைக்கழிப்புகளை

பசியோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

புதியபுதிய புதைகுழிகளை

பசியோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

உலகத்தை

பசியோடுதான் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்

பாலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்காக

 

ப்போது என் விருப்பமெல்லாம்

என் மகளைப்போலவே

ஒவ்வொரு பாலஸ்தீனக் குழந்தையும்

பசியாற வேண்டுமென்பதுதான்!!!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 13/06/2024 - 5:14 PM

கவிஞர் ஜோசப் ராஜாவின் எண்ணமும் ஆசையும் அவரது குழந்தையைப் போலவே பாலஸ்தீனக் குழந்தையும் உண்ணவும் உடுத்தவும் உலவவும்
வேண்டும் என்பதே.

அவருக்கு மட்டுமல்ல. நமக்கும் அதே எண்ணமும் ஆசையும் தான்.

ஆனால் அவரைப் போல நம்மாலான முயற்சியை மேற்கெள்ள வேண்டும்தானே.

நான் ரெடி
நீங்க ரெடியா?

Reply

Leave a Reply to பெரணமல்லூர் சேகரன் Cancel Reply