தொழிலாளர்கள்
தங்கள் உரிமைகளைத்
தெரிந்து கொண்டதிலிருந்தே
போராடத் தொடங்கிவிட்டார்கள்
ஒவ்வொரு தொழிற்சாலையிலும்
தொழிலாளர்கள்
தங்கள் முக்கியத்துவத்தை
அறிந்து கொண்டதிலிருந்தே
போராடத் தொடங்கிவிட்டார்கள்
உதயமும் பாராமல்
அஸ்தமனமும் பாராமல்
உழைத்துக் கொண்டேயிருந்த
தொழிலாளர்கள்
போராடித்தான்
போராடித்தான்
ஒழுங்கு செய்தார்கள்
தங்களுடைய வேலைநேரத்தை
வியர்வை சிந்திச்சிந்தி
இரத்தம் சிந்திச்சிந்தி
உழைத்து உழைத்து
உற்பத்தியைப் பெருக்கிய
தொழிலாளர்கள்
போராடித்தான்
போராடித்தான்
ஒழுங்கு செய்தார்கள்
தங்களுடைய கூலிவிகிதத்தை
சுரண்டியே
பழக்கப்பட்ட முதலாளிகள்
இலாபத்திற்காகத்
தொழிலாளர்கள் இரத்தத்தை
உறிஞ்சிக் கொழுத்தபோது
போராடித்தான்
போராடித்தான்
தங்களுக்காகப் பேசக்கூடிய
சங்கங்களை உருவாக்கினார்கள்
இந்த உலகத்தில்
இதுவரையிலும் உருவாக்கப்பட்ட
எந்தச் சங்கத்தையும்
எந்த முதலாளியும்
இன்முகத்தோடு
ஆதரித்தது கிடையாது
அதேநேரத்தில்
தொழிலாளர்களும் அவர்களை
அவ்வளவு எளிதாக
விட்டதும் கிடையாது
அரசாங்கம்
முதலாளிகளுக்கு
ஆதரவாக இருந்தாலும்
அரசாங்கம்
முதலாளிகளின் நலன்களின்மீது
அக்கறையாக இருந்தாலும்
அரசாங்கம்
முதலாளிகளின்
இலாபத்தைக் கட்டிக்காக்க
தொழிலாளர்களை நசுக்கினாலும்
இன்று வரையிலும்
போராடித்தான்
சங்கம் வைக்கிறார்கள்
போராடித்தான்
நீதி கேட்கிறார்கள்
இதோ
சாம்சங் தொழிற்சாலையின்
தொழிலாளர்களும்
நியாயமான கோரிக்கைகளுக்காக
நீண்ட நாட்களாகப்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்
அவதூறுகள்
அள்ளிவீசப்பட்டுக் கொண்டிருக்கும்போதும்
அரசியல் தந்திரங்களை
நரிகள் சுதந்திரமாக
நடத்திக் கொண்டிருக்கும் போதும்
அவசியமான உரிமைகளுக்காக
நீண்ட நாட்களாகப்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்
நீங்கள் வெற்றியடைவீர்கள்
தோழர்களே
நிச்சயமாக வெற்றியடைவீர்கள்
தொழிலாளர்கள்
ஒன்று சேரும்போதெல்லாம்
வெற்றியடைந்திருக்கிறார்கள்
இது வரலாறு
தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்து
போராடும் போதெல்லாம்
வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள்
இதுவே வரலாறு
தொழிலாளர்கள்
கரம்கோர்த்துத்
தங்கள் கோரிக்கைகளில்
உறுதியாக நின்றபோதெல்லாம்
உன்னதங்களைப் உருவாக்கியிருக்கிறார்கள்
இதுதான் வரலாறு
போராடுங்கள் தோழர்களே
நீங்கள் வெற்றியடைவீர்கள்
நீங்கள் வரலாறு படைப்பீர்கள்
நீங்கள் உன்னதங்களை உருவாக்குவீர்கள்!
ஜோசப் ராஜா
1 comment
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவது அவர்களின் சுவாசம் போன்றது.
அதன் நியாயத்தை அழகுற தமது பதிவுகள் மூலம் விளக்கியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
வாசியுங்கள்.
பரப்புங்கள்.