பாலஸ்தீன வானத்தில் பறக்கும் பட்டங்கள்

முகமது அகமது ஷாமாவிற்கு

பன்னிரெண்டு வயதாகிறது

யுத்தம் தொடங்கியதும்

பாலஸ்தீனத்தின் வடக்கிலிருந்து

இடம்பெயர்ந்து

இடம்பெயர்ந்து

இடம்பெயர்ந்து

இப்போது

ரஃபாவில் இருக்கின்ற

அகதி முகாமில்

வசித்துக் கொண்டிருக்கிறான்

குடும்பத்தோடு

உணவிற்காக அங்குமிங்கும்

அலைந்து கொண்டிருக்கும்

தந்தையின் வேதனை

அவனுக்கும் புரிகிறது

அதனால்தான்

பசிக்கிறது என்ற சொல்லை

உச்சரிப்பதையே நிறுத்திவிடுகிறான்

அகதிமுகாமில் இருக்கும்

பள்ளிக்குச் செல்லும்போது

தங்களைப் பலிகேட்டுச்

சுத்திக் கொண்டிருக்கும்

இராணுவ வாகனங்களைப்

பயத்தோடு தினமும்

பார்த்துக் கொண்டிருக்கிறான்

நீலநிறப் பாலித்தின் கவர்களால்

முழுவதுமாகச் சுற்றப்பட்டு

வெள்ளைத்துணியால் மூடப்பட்டிருக்கும்

ஏராளமான உடல்களைத்

பதட்டத்தோடு தினமும்

பார்த்துக் கொண்டிருக்கிறான்

 

நினைத்துப் பாருங்களேன்

அந்தச் சிறுவனின் நாட்கள்

எப்படி நகர்ந்து கொண்டிருக்கும்

அந்தச் சிறுவனின் இதயம்

எப்படித் துடித்துக் கொண்டிருக்கும்

ஆனாலும் அவன் ஓய்ந்துவிடவில்லை

ஆனாலும் அவன் சோர்ந்துவிடவில்லை

தன்னுடைய மகிழ்ச்சிக்கான

வழியை அவனே கண்டுபிடிக்கிறான்

தன்னுடைய மகிழ்ச்சிக்கான பட்டத்தை

அவனே உருவாக்குகிறான்

அவன் சொல்கிறான்

”காற்றோடு காற்றாய்ப்

பறக்கும் பட்டத்தைப் பார்க்கும்போது

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

வானத்தை நோக்கி உயரப்பறக்கும்

பட்டத்தைப் பார்க்கும்போது

உற்சாகமாக இருக்கிறேன்

நம்பிக்கையாக இருக்கிறேன்

எங்கள் ஊரில்

நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த

வீட்டைத் தகர்த்து விட்டார்கள்

ஆனாலும்

யுத்தம் முடிந்து

ஊருக்குத் திரும்பிச் சென்று

இன்னும் உயரமாக

பட்டம்விட ஆசையாக இருக்கிறது”

என்று அவன் சொல்லச்சொல்ல

மேலே பறந்து கொண்டிருக்கும்

போர் விமானத்தை ஏளனம் செய்தபடி

பறந்து கொண்டிருக்கிறது

அவன் கைகள் இயக்கும்

வண்ணமயமான பட்டம்

 

லகத்தின் உத்தமர்கள்

அள்ளிக்கொடுத்த

போர் விமானங்கள்

ஓயாமல் பறந்து கொண்டிருக்கும்

ரஃபவின் வானத்தில்தான்

உலகத்தின் நியாயவான்கள்

கப்பல்கப்பலாக ஏற்றிவிட்ட

ஏவுகணைகளும் பீரங்கிகளும்

ஓயாமல் வெடித்துக் கொண்டிருக்கும்

ரஃபவின் வானத்தில்தான்

அகதிமுகாம்களில்

அடைக்கப் பட்டிக்கும்

முகமது அகமது ஷாமாவைப்போன்ற

இன்னும் கொல்லப்படாத

குழந்தைகளின் கைகளிலிருந்து

பால்ஸ்தீன வானத்தில்

பட்டங்கள் பறந்து கொண்டிருக்கின்றன

 

ஃபாவின் கிழிந்த கூடாரங்களில்

உணவிற்காகவும் தண்ணீருக்காகவும்

விறகிற்காகவும் விடியலுக்காகவும்

நீண்ட வரிசையில்

நின்று கொண்டிருக்கும்

குழந்தைகளின் கைகளிலிருந்து

நிறைந்த நம்பிக்கையோடு

வானத்தை நோக்கிப்

பறந்து கொண்டிருக்கும்

அந்தப் பட்டங்கள்

இடிபாடுகளின் வலியிலிருந்து

இழப்புகளின் வலியிலிருந்து

இடம்பெயர்தலின் வலியிலிருந்து

பசியின் வலியிலிருந்து

அவர்களின் முகத்தில்

புன்னகையைப் படரச்செய்கிறது

நேட்டோவின் அழுகிய இதயத்திலிருந்து

வாரிவழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்

அத்தனை பேரழிவின் சாதனங்களையும்

மொத்தமாகப் பயன்படுத்திய பிறகும்

இஸ்ரேலால் மட்டுமல்ல

இஸ்ரேலுக்கு உதவிக் கொண்டிருக்கும்

யாராலும் யாராலும்

ஒருபோதும் வெல்லமுடியாதவர்களாக

இருக்கிறார்கள்

பாலஸ்தீன வானத்தில்

பட்டங்களைப் பறக்கவிடும் குழந்தைகள்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 31/05/2024 - 9:41 PM

பாலஸ்தீன சிறுவர்களை வைத்து அழகான கவிதையில் அழுத்தமான செய்தி பரிமாறப்பட்டுள்ளது.

கவிஞர் ஜோசப் ராஜாவுக்கு வாழ்த்துகள்.

படியுங்கள்
பரப்புங்கள்

Reply

Leave a Comment