படம் : மாவளி சுற்றுதல்
சென்ற வருடத்தில் இதே தீபத்திருநாளில் குருநாதரின் ஒருங்கிணைப்பில் தம்பி விஜய் அவர்கள் திருவண்ணாமலையிலிருந்து மாவளிகளைச் செய்து கொண்டு வந்தார். இந்த நிலத்தின் நீண்டகால பழக்கங்களில் ஒன்றான மாவளி சுற்றதலில் எல்லோரும் மகிழ்ந்திருந்தோம். குழந்தைகளோடு நானும் மாவளி சுற்றி முடித்தபோது இந்தக் கவிதை தொடங்கியது. அந்த நாளின் அற்புதம் இது.
எதுவும் தெரியாதபடி
எல்லையே இல்லாதபடி
எங்கும் எங்கெங்கும்
நிறைந்திருக்கிறது இருள்
எல்லாவற்றையும்
மறைக்கக்கூடிய இருள்
நிலவையும் மறைத்திருக்கிறது
ஒவ்வொன்றையும்
ஒளிக்கக்கூடிய இருள்
நட்சத்திரங்களையும் ஒளித்திருக்கிறது
பயத்தைப் பிரசவிக்கக்கூடிய இருள்
காற்றோடு காற்றாய்
பற்றிப் படர்ந்திருக்கிறது
மனிதன் இயற்கையை அறிந்துகொள்ள
முயற்சித்துக் கொண்டிருந்த காலத்தை
நினைத்துப் பார்க்கிறேன்
ஒளியைத் தேடிக்கொண்டிருந்த
நாடோடிகளின் காலடித்தடங்களை
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்
முதன்முதலாக
இருளை உரசிப்பார்த்த
அந்த ஆதிக்கரங்களை
அன்போடு பற்றிக்கொள்கிறேன்
புதிதாய்ப் பிரசவித்த ஒளியை
வியப்பு நிறைந்த விழிகளோடு
பார்த்துக் கொண்டிருந்த
அந்தப் பார்வையின் பரவசத்தை
கால இடைவெளிகளைத் தாண்டி
உணர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்
இருளிலும்
பார்க்கக் கற்றுக்கொண்டதுதான்
மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்பு
இருளை
முழுமையாக வெற்றி கொண்டதுதான்
மனிதகுலத்தின் மகத்தான சாதனை
ஒளியைக் கண்டுபிடித்த பிறகு
ஒளிரத் தொடங்கியது மனிதகுலம்
நெருப்பு
இருளை மட்டும் போக்கவில்லை
மானுடத்திரளின்
பசியையும் போக்கியது
நெருப்பு
வெளிச்சத்தை மட்டும் தரவில்லை
கடுங்குளிர்காலத்தில்
கதகதப்பையும் கொடுத்தது
இதோ
கடுங்குளிர் உறைக்கும்
கார்த்திகை மாதத்தில்
திசைகளெங்கும்
தீபஒளி பூத்திருக்கும்
திருக்கார்த்திகை மாதத்தில்
நெருப்புக்கு அச்சப்படும் குழந்தைகள் கூட
நெருப்போடு விளையாடும்
விளையாட்டைப் பாருங்கள்
மாவளியோ மாவளி என்ற
குதூகலக் குரல்கள்
நெருப்பைப் போலவே
நீடித்து ஒலிப்பதை
நீங்களும் கேளுங்கள்
இருள் நிலத்தில்
பூத்துக் குலுங்கும்
நெருப்புப் பூக்கள்
பார்க்கப் பார்க்கப்
பரவசம் தருகிறது
இருள் வெளியில்
சுற்றிச் சுடரும்
நெருப்புச் சிதறல்கள்
பார்க்கப் பார்க்கப்
பேரின்பம் தருகிறது
இருளைக் கிழிக்கும்
நெருப்புக் துகள்கள்
திசைகள் எங்கும்
சிதறிப்பறக்க
காற்றில் பறக்கும்
கங்குத் துகள்கள்
எங்கும் எங்கெங்கும்
சிறகு விரிக்க
அடடா அடடா
என்னே இந்த ஒளியின் விளையாட்டு
அடடா அடடா
என்னே இந்த இருளின் படபடப்பு
அடடா அடடா
நெருப்புத் துகளில்
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
விந்தை நிறைந்த
வினோதக் காட்சிகள்
நெருப்பு
தன்னைதானே
வரைந்துகொள்ளும்
ஓவியத்தைப் பாருங்கள்
நெருப்பு
இருளிலிருந்து எழுந்துநின்று
காற்றோடு காற்றாய்ச் சுற்றிச்சுழன்று
நடனமாடுவதைப் பாருங்கள்
மழைத்துளிகளைப் போல
நிறைந்திருந்த
நெருப்புத் துளிகளைப் பார்த்துப்பார்த்துப்
பரவசத்தில் துள்ளிக்குதிக்கும்
குழந்தைகளைப் பாருங்கள்
இந்தக் குதூகலத்தையும்
இந்தப் பெருமகிழ்ச்சியையும்
எதிர்காலமெல்லாம் நிலைக்கச் செய்யுங்கள்
இருள்
விலக்க முடியாதது அல்ல
இருள்
அகற்ற முடியாதது அல்ல
நீங்கள்
ஒளியை உருவாக்கக் கூடியவர்கள்
இருண்ட காலங்களின்
சாட்சிகளாக இருந்துவிடாதீர்கள்
நீங்கள்
ஒளியாய் உருமாறக் கூடியவர்கள்
இந்த மனிதகுலத்தை
இருளில் தள்ளும் எவரையும்
விட்டுவிடாதீர்கள்
நீங்கள்
ஒளியைப் பிரசவிக்கக் கூடியவர்கள்
உங்கள் சந்ததிகளுக்கான
பிரகாசமான வாழ்க்கைக்காகப்
போராடுங்கள்
விலைவாசி இருள்
பணவீக்க இருள்
வேலையில்லா இருள்
சூழ்ந்திருக்கிறது நம்மை
மதவெறி இருள்
சகிப்பின்மை இருள்
இலாபத்திற்காக மட்டுமே இயங்கும்
சந்தை இருள்
நிச்சயமற்ற தன்மையை
நிரந்தரமாக வைத்திருக்கும்
முதலாளித்துவ இருள்
மனிதகுலத்தை
படுகுழியில் தள்ளக் காத்திருக்கும்
யுத்த இருள்
சூழ்ந்திருக்கிறது நம்மை
சுற்றிச் சூழ்ந்திருக்கிறது நம்மை
ஆனபோதிலும் ஆனபோதிலும்
உலகத்தின் நிலங்களிலெல்லாம்
நம்பிக்கை துளிர்ப்பதை
பார்க்கத் தவறாதீர்கள்
மக்களின் விரோதிகளுக்கு
மக்களால் எழுதப்பட்ட தீர்ப்புகளை
படிக்கத் தவறாதீர்கள்
எப்பேர்ப்பட்ட காரிருளையும்
கலைக்கக்கூடிய நெருப்பு
உங்கள் கைகளில் இருக்கும்போது
எதற்கும் கலங்காதீர்கள்
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்
உங்கள் கைகளில் இருக்கும் நெருப்பை
உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்
பேரரசர்களின் அரண்மனைகளையும்
மக்களுக்கு விரோதமானவர்களின் இருப்பிடங்களையும்
தடயமே இல்லாமல் எரித்து அழித்தவர்களுக்கு
நான் சொல்லித்தர என்ன இருக்கிறது
ஒளியாயிருந்தால்
உங்களுக்கு ஏது இருண்டகாலம்
ஒளியாயிருங்கள்
ஒளிர்ந்திருங்கள்
ஒளிகொடுங்கள்
புதிய விடியலுக்கான
புதிய தொடக்கத்துக்கான
புதிய வாழ்க்கைக்கான
புத்தம்புதிய புரட்சியில்
நீங்கள் நிகழ்த்தப்போகும்
நெருப்பின் நடனத்தைப் பார்க்கத்தான்
அளவற்ற ஆசைகொண்டிருக்கிறேன்!
ஜோசப் ராஜா
1 comment
நெருப்பின்
நடனத்தை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கவியோவியமாய்த் தந்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
நெருப்பின் பிறப்பு குறித்தும் அதன் தேவை குறித்தும் தமக்கே உரிய நடையில் அழகுற வடித்துள்ள கவிதையை வாசியுங்கள்.
அவரது கூற்றுப்படி நாமும் ஒளியாவோம்
அனேக இருளைப் போக்க.