திரும்பி வருகிறார்கள் பாலஸ்தீனர்கள்

சொந்த நிலத்திற்குத்

திரும்பி வருவதென்பது

முற்றிலும் வேறானது

திரும்பி வருகிறார்கள்

பாலஸ்தீனர்கள்

தாயின் மடிதேடி

துள்ளிக் குதிக்கும்

குழந்தைகளைப்போல

நீண்டநாட்கள் கழித்து

கண்டெடுத்த புன்னகையோடு

குழந்தைகளின் கைகளை

இறுகப்பற்றிக்கொண்டு

பரவசம் நிறைந்த கண்களோடு

ஓடி வருகிறார்கள்

பாலஸ்தீனர்கள்

யுத்தத்தால் சிதறடிக்கப்பட்டவர்கள்

இடிபாடுகளுக்கு இடையில்

சந்தித்துக் கொள்கிறார்கள்

அன்பின் ஊற்றுக்கள்

பொங்கிப் பிரவாகமெடுத்ததில்

குண்டுகள் துளைத்த

பூமியின் காயங்கள்

கொஞ்சம் கொஞ்சமாக

மறையத் தொடங்குகின்றன

யுத்தம் தொடங்கும்போது

அவர்கள் விட்டுச்சென்ற எதுவும்

எஞ்சியிருக்கவில்லை

வாழ்வை அழிக்கவேண்டும் என்ற

எதிரியின் உன்னத நோக்கம்

விளங்காமல் இல்லை யாருக்கும்

இடிபாடுகளின் மேல்

கூடாரங்கள் முளைக்கத் தொடங்குகின்றன

குழந்தைகளின் கல்லறையாக்கப்பட்ட

காஸாவிலிருந்து

நம்பிக்கையின் பாடல்

ஒலிக்கத் தொடங்குகிறது

வெட்டப்பட்ட ஆலீவ்மரங்கள்

பாலஸ்தீனர்களுக்காகத்

துளிர்க்கத் தொடங்குகிறது

துப்பாக்கிகளில் இருந்தல்ல

மானுட இதயங்களில் இருந்துதான்

வாழ்க்கை தொடங்குகிறது என்பது

பாலஸ்தீனர்களுக்கு நன்றாகத் தெரியும்

சாம்பலில் இருந்து

எப்படி எழலாம் என்று

யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்

நான்கு குழந்தைகளை

அழைத்துக்கொண்டு

வேகமாக வந்த பெண்ணொருத்தி

முற்றிலும் இடிந்துகிடக்கும்

வீட்டின் முன்னால்

மெல்லிய புன்னகையோடு

நின்று கொண்டிருக்கிறாள்

உடைந்து கிடக்கும் கற்களோடும்

சன்னல் கம்பிகளோடும்

மனம் விட்டுப் பேசுகிறாள்

குழந்தைகளை இறுக அணைத்தபடி

வானத்தைப் பார்த்து

உரக்கக் கத்துகிறாள்

எங்கள் முன்னோர்களைப்போல

நாங்கள்

திரும்ப வரமாட்டோம்

என்றுதான் நினைத்திருந்தோம்

துருப்பிடித்த சாவிகளோடு

எங்கள் முன்னோர்கள்

நீண்டகாலம்

போராடிக் கொண்டிருப்பதைப்போல

நாங்களும்

இந்த உலகத்தின்

குருட்டுக் கண்களுக்கு முன்னால்

சாவிகளை உயர்த்தியபடி

போராட நேருமோ என்றுதான்

நினைத்திருந்தோம்

அல்லா எங்களைக் கைவிடவில்லை

என்று சொல்லி

மண்டியிட்டு முத்தமிட்டாள்

அவளுடைய மண்ணை

சுற்றியிருந்தவர்களின் நரம்புகளுக்குள்

தாய்மண்ணின் மீதான காதல்

பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது

அவர்களின் இதயங்களில்

நிறைந்திருந்த வார்த்தைகள்

இவைகள் தான்

எங்களை அப்புறப்படுத்த நினைத்த

அவர்கள் நோக்கம்

நிறைவேறவில்லை

எங்களை அகதிகளாக்க நினைத்த

அவர்களின் விருப்பம்

நிறைவேறவில்லை

நாங்கள் திரும்புகிறோம்

எங்கள் நிலத்திற்கு

நாங்கள் திரும்புகிறோம்

எங்கள் தெருவிற்கு

என்ற குரல்களால்

பாலஸ்தீனத்தின்

அபகரிகப்பட்ட ஒவ்வொரு எல்லையும்

ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறது

முற்றிலும் அழிக்கப்பட்ட

குழந்தைகளின் எலும்புக்கூடுகளால் நிறைக்கப்பட்ட

அந்த நிலத்தை நோக்கி

எதற்காக இவ்வளவு மகிழ்ச்சியாகச்

சென்று கொண்டிருக்கிறார்கள் என்று

சில முட்டாள்கள்

யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்

இன்னுமா தெரியவில்லை

மீண்டும் கட்டியெழுப்பத்தான்!

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 28/01/2025 - 9:44 PM

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலாகி நம்பிக்கை துளிர்க்கத் துவங்கியுள்ளது. அதைத் “திரும்பி வருகிறார்கள் பாலஸ்தீனர்கள்” எனும் தலைப்பிட்டு அற்புதமான கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

வாசியுங்கள் தோழர்களே.

Reply

Leave a Reply to பெரணமல்லூர் சேகரன் Cancel Reply