தவறுகளைச் சரிசெய்யுங்கள்

இதுவரையிலும் அவர்கள்

எந்தத் தவறும் செய்யவில்லை

இப்போதும் அவர்கள்

எந்தத் தவறும் செய்யவில்லை

இனிமேலும் அவர்கள்

எந்தத் தவறும் செய்யப்போவதுமில்லை

பல்லாயிரக்கணக்கான

மக்களுடைய வாழ்க்கையின்

உறுதியான நம்பிக்கைகளையும்  

பெரும் கனவுகளையும்

ஒற்றை அறிவிப்பால்

ஒன்றுமில்லாமல் சிதைத்தழித்த

பணமதிப்பிழப்பை தவறென்று சொல்வீர்களா

அது ஊழலை ஒழித்தது என்பார்கள்

அது கறுப்புப்பணத்தை ஒழித்தது என்பார்கள்

எந்த நாட்டில் எந்த மாநிலத்தில்

என்ற கேள்விகளை நாம் கேட்காமலிருப்பதுதான்

சுயநலமான நம் வாழ்க்கைக்கு

இன்னும் கொஞ்சம் சுகம் சேர்க்கக்கூடியது

லட்சக்கணக்கான மக்களை

இந்தத் தேசத்தை இணைக்கும்

ஒவ்வொரு சாலைகளிலும்

உயிரை ஒரு கையிலும்

உடமைகளை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு

சாரைசாரையாக நடந்திடச்செய்த

திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பைத்

தவறென்று சொல்வீர்களா

புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரைக்காத்த

உன்னதமான முடிவு என்பார்கள்

நடந்தாவது சாகட்டும்

கொரோனாவில் சாக்கூடாது என்ற

அக்கறைமிகுந்த முடிவு என்பார்கள்

ஏன் இப்படி

மனசாட்சி இல்லாமல் பேசுகிறீர்கள் என்று

நாம் கேட்காமலிருப்பதுதான்

நம்முடைய பொறுப்பற்ற வாழ்க்கைக்கு

இன்னும் கொஞ்சம் சிறப்பு சேர்க்கக்கூடியது

நீண்ட நாட்களாக

எரிந்து கொண்டிருக்கிறது மணிப்பூர்

தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள்

வீடுகள் எரிந்து கொண்டிருக்கின்றன

தேவாலயங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன

எண்ணிலடங்கா இதயங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன

அன்று குஜராத்தில் கேட்ட பெண்களின் ஓலம்

இன்று மணிப்பூரிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது

ஒவ்வொரு மணிநேர மெளனத்திலும்

மணிப்பூரின் மரணங்களின் எண்ணிக்கை

ஒவ்வொன்றாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது

இப்படிப்பட்ட மாபெரும் பேரழிவைத் தடுக்காத நீங்கள்

எதற்காக ஆட்சியையும் அதிகாரத்தையும் மட்டும்

விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று

நாம் கேட்காமலிருப்பதுதான்

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு

இன்னும் வேகமூட்டக்கூடியது

இப்படியாக அவர்கள்

தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்

இப்படியாக அவர்கள்

செய்யும் தவறுகளை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்

இப்படியாக அவர்களின்

தவறுகளிலிருந்து நம்மை திசைதிருப்புகிறார்கள்

என்னுடைய கேள்வியெல்லாம்

என் அன்பிற்குரியவர்களே

என் தோழமைக்குரியவர்களே

நாம் சரியாக இருக்கிறோமோ

நாம் சரியாகத்தான் இருக்கிறோமா

நாம் சரியாகவா இருக்கிறோம்

அப்படியென்றால்

இத்தனை தவறுகள் எப்படி நிகழ்கின்றன

இன்னும் நீங்கள் புரிந்து கொள்வதற்கு

அவர்கள் எத்தனை தவறுகளைச் செய்யவேண்டும்

இன்னும் நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு

அவர்கள் எத்தனை பேரழிவுகளைப் பிரசவிக்கவேண்டும்

இன்னும் நீங்கள் அறிந்துகொள்வதற்கு

அவர்கள் எத்தனை கலவரங்களை உருவாக்க வேண்டும்

இன்னும் நீங்கள் ஒப்புக்கொள்வதற்கு

அவர்கள் எத்தனைமுறை வேஷத்தைக் கலைக்கவேண்டும்

தவறுகளைச் சரிசெய்யுங்கள் அதுவே சுகம்

தவறுகளைச் சரிசெய்யுங்கள் அதுவே பொறுப்பு

தவறுகளைச் சரிசெய்யுங்கள் அதுவே முன்னேற்றம்

தவறுகளைச் சரிசெய்யுங்கள் அதுதான் புரட்சி

மானுடத் துயரங்களை மட்டுமே

தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க

எனக்கும் விருப்பமில்லைதான்

மானுடப் பேரழிவுகளைப் பிரசவித்தவர்களை

மண்ணில் இருந்ததற்கான தடயமே இல்லாமல்

தேடித்தேடி அழித்தார்கள் மக்கள்

அப்படியான மகோன்னத வரலாற்றை

நீங்கள் நிகழ்த்திக் காட்டவே காத்திருக்கிறேன்

அதற்காகத்தான் கவிதை எழுதுகிறேன்!

Related Articles

2 comments

இறைமொழி 26/07/2023 - 9:09 AM

இது வெறும் கவிதை மட்டும் அல்ல.உதிர்ந்து கொண்டிருக்கும் உயிரின் ஓலம். செவிட்டு மூடர்களின் செவிகளைக் குத்திக் கிழித்து விட்டுப் போகும் வரிகள்.

Reply
பெரணமல்லூர் சேகரன் 26/07/2023 - 11:07 AM

பற்றி எரிவது மணிப்பூர் மட்டுமல்ல
மனித நேயம் கொண்ட அனைவரின் மனங்களும் தான்

ஆட்சியாளர்களின் தவறுகளையும் அட்டூழியங்களையும் அடுக்கி இதற்குமேல் என்ன செய்தால்தான் கோபம் கொப்பளிக்கும் என்பதுபோல் கவிஞர் ஜோசப் ராஜா எழுப்பும் கேள்விகள் நியாயமானவை

அன்று குஜராத்தில்
இன்று மணிப்பூரில்

இரண்டு நிகழ்வுகளிலும்
மத்தியிலும் மாநிலத்திலும் காவிகளின் கொடுங்கோல்தான்

என்ன செய்வதாய் உத்தேசம்?

மௌனம் உடைத்துக் களத்தில் இறங்குவோம் வாருங்கள்.

Reply

Leave a Comment