சிறப்பு காவல் படையினரால் ஆறு நக்சல்கள் சுட்டுக்கொலை என்று செய்தித்தாளில் போடப்பட்டிருக்கும். செய்தியைப் படித்துவிட்டு நாமும் கடந்து சென்று விடுவோம். நமக்கிருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளில் கொல்லப்பட்டது நக்சல்கள் தானா? என்ற கேள்வியை கண்டிப்பாக நாம் கேட்கப் போவது கிடையாது.
ஜார்க்கண்ட் காட்டுப் பகுதியில் துணை ராணுவத்திற்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இருபதுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். முடிந்தால் முன்னோ பின்னோ தீவிரவாதிகள் என்று சேர்த்துக்கொள்ளலாம். கொல்லப்பட்டது மாவோயிஸ்ட்டுகள் தானா? என்ற கேள்வியை இன்றல்ல என்றுமே நாம் எழுப்பப் போவது கிடையாது.
தருமபுரி பகுதியில் நக்சல் நடமாட்டம் அதிகமாகி இருக்கிறது என்று செய்தி வரும். நமக்கென்ன! நாம் நேற்றைப்போல இன்றும் நடமாடிக் கொண்டிருப்போம். இன்றைப்போல நாளையும் நடமாடிக் கொண்டிருப்போம்.
ஆனால், எனக்கென்ன என்ற மனோபாவத்தில், ஒரு கலைஞன் இருக்க முடியாது. தோழர் அதியன் அப்படி இல்லை. ஒரு நல்ல கலைஞன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்மையை நெருங்கிச் செல்ல வேண்டும். தோழர் அதியன் தன்னுடைய தண்டகாரண்யத்தில் அவ்வளவு நெருங்கிச் சென்றிருக்கிறார்.
சக மனிதனின் மீது அக்கறை கொண்டவனால் மட்டுமே வலிந்து வலியோடு கலையைப் பிரசவிக்க முடியும். வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு எதுவும் தேவையில்லை. முதலீடும் இலாபமும் போதும்.
நினைத்துப் பாருங்களேன், தண்டகாரண்யம் தலைப்பே அதிகாரத்தின் புருவங்களை உயர்த்தச் செய்துவிடும். எல்லாவற்றையும் மீறி தான் நினைத்ததை முடிந்த அளவிற்குச் செய்து முடித்திருக்கிறார். இன்னும் அவருக்குச் சுதந்திரம் இருந்திருக்குமென்றால், இன்னும் ஒர் உயரம் தாண்டியிருப்பார். அந்தச் சுதந்திரத்திற்காக அவர் மட்டும் போராட முடியாது. நம் எல்லோருக்கும் கடமை இருக்கிறது.
நக்சலைட் என்றால் யார்? மாவோயிஸ்ட்டுகள் என்றால் யார்? அவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள்? அவர்களின் கோரிக்கைகள் என்ன? காடுகளுக்குள் அவர்களுக்கு என்னதான் வேலை?
பழங்குடி மக்களுக்கு என்ன பிரச்சனை? காடு அவர்களுக்குச் சொந்தமானதில்லையா? பழங்குடி மக்களை காட்டைவிட்டுத் துரத்த அரசாங்கம் எதற்காகத் துடித்துக் கொண்டிருக்கிறது?
அரசாங்கம் காடுகளைப் பாதுகாக்கிறதா? இல்லை பழங்குடிகள் காடுகளைப் பாதுகாக்கிறார்களா? மலைகளையும் காடுகளையும் நோக்கி முதலாளிகள் பாய்ந்து கொண்டிருக்கிறார்களே எதற்காக? அரசுக்கும் முதலாளிகளுக்கும் என்ன சம்பந்தம்?
இந்தக் கேள்விகளையெல்லாம் நீங்கள் கேட்க வேண்டும். ஒருவகையில் நீங்கள் அமைதியாக இருப்பதால் தான் இவ்வளவும் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. அதிகாரத்தின் கரங்கள் எழுதும் கதைகளை இன்னும் எத்தனை காலம் நம்பிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?
தோழர் அதியனை விடவும், என்னை விடவும், உங்களை விடவும் கதைசொல்லக் கூடியவர்கள் அதிகாரத்தின் பக்கம் ஆயிரமாயிரமாய் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பு பற்றி சமூக ஊடகங்களில் நிறைந்த உரையாடல்களைப் பார்த்திருப்பீர்கள். தேர்தலுக்கும் குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தப்படுத்தி மக்கள் அவர்களே பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால் அதிகாரம் அவசர அவசரமாக ஒரு கதையைத் தயார் செய்கிறது. அந்தக் கதையை அத்தனை பத்திரிக்கைகளும் வெளியிடுகிறார்கள். அத்தனை தொலைக்காட்சிகளும் பின்னணி இசையோடு ஒருபடி மேலேபோய் பின்னியெடுக்கிறார்கள்.
அப்படித்தான் கொரோனா காலத்தில் ஒரு கதையைப் பரப்பிப் பார்த்தார்கள். கடைசியில் அவர்களல்ல, கொரோனாதான் வென்றது. இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்? வேறொன்றுமில்லை வெறுப்புதான். சக மனிதனின் மீதான வெறுப்பு. வேறென்ன பிரசவித்துவிடப் போகிறது.
அன்பு, சக மனிதனின் மீதான அன்பு தண்டகாரண்யம் போன்ற படைப்புகளைப் பிரசவிக்கும். காலங்காலமாக நாம் பத்திரிக்கைகளில் வாசித்துக் கொண்டிருக்கும், தொலைக்காட்சிகளில் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு செய்தியின் மீது சம்மட்டியைக் கொண்டு ஓங்கி அறைகிறது தண்டகாரண்யம். உண்மையே இல்லாத ஒன்று எப்படி உருவாக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட கைகளாலேயே எப்படி அழிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கும்போது நெஞ்செல்லாம் நடுங்கித்தான் போகிறது.
தேர்தலுக்காக சாதிக் கலவரங்கள், தேர்தலுக்காக மதக் கலவரங்கள், தேர்தலுக்காக தீவிரவாத அச்சுறுத்தல்கள், தேர்தலுக்காக நக்சலைட் வேட்டைகள் என்று தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த ஜனநாயகத்தை கேள்வி கேள்வி கேட்பது மட்டும்தான் சிறந்த, உண்மையான தேசப்பற்றாக இருக்கும் என்று நம்புகிறேன். தேசமென்பது அதிகாரவர்க்கம் மட்டுமல்ல அல்லவா!
அந்தவகையில் இந்தியா முழுவதும் இருந்து அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி அழைத்துவந்து நக்சல்கள் என்று ஒப்புக்கொள்ளச் செய்து, மறுவாழ்வு கொடுக்கிறோம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி, கடைசியில் நக்சலைட் என்று முத்திரை குத்தப்பட்டு கொன்றுபோடப்படும் உண்மையை உரக்கச் சொல்லியிருக்கும் தோழர் அதியன் பாராட்டுக்குரியவரே!
இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம். இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். ஏனென்றால், அப்படி ஒரு களம், அப்படி ஒரு கரு. ஆனாலும், இதைச் செய்வதற்கு நம்மிடம் ஒரு அதியன் இருக்கிறாரே என்று மகிழ்ச்சியடைவோம். வருங்காலங்களில் செய்வதற்கு துணைநிற்போம். அதிகாரத்தைக் கேள்வி கேட்காமல், அழகான வாழ்க்கையை அடைந்திடவே முடியாதென்பதை மனதில் கொள்வோம்.
இறுதியாக, எதற்காக இந்தக் கதையைப் படமாக எடுக்க வேண்டும்? என்ற கேள்வி உங்களுக்கு வருமானால் நல்லது, ரொம்ப நல்லது. அதற்காகவேனும் இந்தப் படத்தைப் பார்த்துவிடுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஜோசப் ராஜா
