சையத் : இந்தியாவின் நாயகன்

லைகளால் போர்த்தப்பட்ட

ஆறுகள்

பசுமையான சோலைகள்

பச்சைப் புல்வெளிகள் என

பார்ப்பவர்களை ஈர்க்கக்கூடியது

காஷ்மீரில் இருக்கும்

பஹல்காம் நகரத்தின்

பைசாரன் பள்ளத்தாக்கு

இயற்கையின் அழகைத்

தரிசிப்பதற்காக

சுற்றுலாப் பயணிகள்

விரும்பி வரக்கூடிய

அற்புதமான பள்ளத்தாக்கு

அப்படி வரும்

சுற்றுலாப் பயணிகளை

தன்னுடைய குதிரையில்

உட்காரவைத்து

இயற்கையின் அழகை

அப்படியே

அள்ளிக் கொடுக்கக் கூடியவன்

பஹல்காமைச் சேர்ந்த சையத்

குதிரைக்காரன் என்றும்

அழைப்பார்கள் அவனை

பஹல்காமின் மலைச் சிகரங்களை

பஹல்காமின் அழகிய ஆறுகளை

பஹல்காமின் பரந்த பள்ளத்தாக்குகளை

பஹல்காமின் அழகின் இரகசியங்களை

பயணிகளுக்கு

சொல்லிக் கொண்டிருக்கும்

நேரத்தில்தான்

அந்தக் கொடூரமான

பயங்கரவாதத் தாக்குதல்

நடக்கிறது

தாமதிக்கவில்லை சையத்

பயணிகளைக் காப்பாற்ற

பரபரப்பாகச் செயல்படுகிறான்

முடிந்தவரைக் காப்பாற்றுகிறான்

அதற்காகத்தான்

அவனைத் துளைக்கின்றன

துப்பாக்கிக் குண்டுகள்

சிலமணி நேரத்திற்கு முன்னால்

சந்தித்தவர்களுக்காக

உயிரைக் கொடுக்க

முன்வருவீர்களா நீங்கள்

சையத் முன்வந்தான்

தன்னுடைய நிலத்திற்குப்

பயணிகளாக வந்தவர்களுக்காக

உயிரைக் கொடுத்தான்

இதுவரையிலும்

யாருக்கும் தெரியாத

இருபத்தியெட்டு வயதேயான

அந்தக் குதிரைக்காரன்

அன்பின் அடையாளமாக

வீரத்தின் அடையாளமாக

தியாகத்தின் அடையாளமாக

உலகமெல்லாம்

பேசப்பட்டுக் கொண்டிருக்கிறான்

சுயநலம் என்றால்

என்னவென்றே அறியாத

அந்தப் பள்ளத்தாக்கின்

குதிரைக்காரன்

அந்தச் சிகரங்களைக் காட்டிலும்

உயர்ந்து நிற்கிறான்

இன்று மட்டுமல்ல

என்றும் என்றென்றும்

கதைகளாகவும்

பாடல்களாகவும்

இதைப்போன்ற கவிதைகளாகவும்

எங்கும் எங்கெங்கும்

நெகிழ்ந்த இதயங்களால்

பேசப்பட்டுக் கொண்டிருப்பான்

நானும்

என் மகள்களிடம்

அந்தக் குதிரைக்காரனின்

வீரத்தையும் தியாகத்தையும்

இன்றிரவு சொல்லப்போகிறேன்

அர்த்தமுள்ள

அந்த வாழ்க்கையை

அறிந்து கொள்ளட்டும் தானே!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 25/04/2025 - 11:58 AM

இதயம் கணக்கிறது

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து சுற்றுலா பயணிகளைக் காக்க குதிரைக்காரர் சையத் செய்த உயிர்த்தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதை கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதை வழி கேளுங்கள். கண்ணீர் சிந்துங்கள்.

மனித நேயத்தின் முன்னால் மதமேது? சாதியேது.

Reply

Leave a Reply to பெரணமல்லூர் சேகரன் Cancel Reply