சாவின் இதயத்திலிருந்து பிரசவிக்கப்பட்ட குழந்தை

கிழ்ச்சியான நினைவுகளை

உள்ளடக்கிய கதைகளைத்தான்

புன்னகையைப் பிரசவிக்கக்கூடிய

காட்சிகளையுடைய கதைகளைத்தான்

உங்களுக்குச் சொல்ல நினைக்கிறேன்

ஆனால் அப்படிப்பட்ட கதைகள்

இந்த உலகத்தின்

காயம்பட்ட கைகளிலும்

கனன்று கொண்டிருக்கும் இதயங்களிலும்

இல்லாமல் இருக்கிறது

நீங்கள் நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள்

வயல்வெளிகளில் பிள்ளை பெற்றவளை

பேருந்து நிலையத்தில் பிள்ளை பெற்றவளை

தொடர்வண்டிப் பயணத்தில் பிள்ளை பெற்றவளை

நீங்கள் நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள்

ஆனால்

யுத்தம் நடந்து கொண்டிருக்கும்

நிலத்தில்

இடிபாடுகளுக்கு நடுவில்

போர்விமானங்களுக்கு அடியில்

குண்டுச்சத்தங்களைக் கேட்டபடி

சாவின் இதயத்திலிருந்து

குழந்தையைப் பிரசவித்த

பாலஸ்தீனத்தின் தாயொருத்தியைப்பற்றி

உங்களுக்குச் சொல்ல நினைக்கிறேன்

 

யுத்தம் தொடங்கும்போது

ஆலா எட்டுமாத கர்ப்பிணி

நகருக்குள்

இராணுவம் நுழைந்ததும்

மக்களோடு மக்களாக

ஆலாவும் வெளியேறுகிறாள்

உறவினர் வீட்டில் தஞ்சமடைகிறாள்

இராணுவம் நெருங்கிவர

அங்கிருந்து இன்னொரு இடத்திற்கு

இடம்பெயர்கிறாள்

இப்படியே இப்படியே

வயிற்றில் குழந்தையைச்

சுமந்துகொண்டு

அந்த இடிபாடுகளுக்குள்

பதினோருமுறை

இடம்பெயர்ந்து கொண்டேயிருக்கிறாள்

ஒவ்வொரு முறை

குண்டுச்சத்தம் கேட்கும்போதும்

தன்னையும்

வயிற்றிலிருக்கும் குழந்தையையும்

தொட்டுத் தடவிப்

பார்த்துக் கொள்கிறாள்

குழந்தையின் அசைவை

மீண்டும்மீண்டும்

சோதித்துக் கொள்கிறாள்

அவளுடைய அல்லாவிடம்

அவள் வேண்டிக் கொண்டதெல்லாம்

பிரசவத்திற்கு முன்

யுத்தம் முடிந்துவிட வேண்டும்

என்பதுமட்டும்தான்

ஆனால் ஆனால்

அப்படியெல்லாம் நடந்துவிடுமா என்ன

அந்தக் குளிர் ஜனவரியில்

ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு

உயிர்காப்பதற்காக

நடந்துசென்று கொண்டிருக்கிறார்கள்

ஆலா அடிக்கடி

வயிற்றைத் தொட்டுப் பார்க்கிறாள்

பொய்வலியாக இருக்கவேண்டுமென்றுதான்

அவள் விரும்பினாள்

ஆனால் வலித்தது உண்மைதான்

அதற்குமேல் அவளால்

ஓரடி எடுத்துவைக்க முடியவில்லை

தெருவோரத்தில்

அந்த இடிபாடுகளின்மேல்

அப்படியே உட்கார்கிறாள்

அப்போதும்

அவளுடைய அல்லாவிடம்

அவள் வேண்டிக் கொண்டதெல்லாம்

மருத்துவமனைக்குச்

செல்லும் வரையிலாவது

எனக்குத் தெம்பு கொடுங்கள்

என்பதுமட்டும்தான்

ஆனால்

மருத்துவமனைக்குச் செல்ல

வண்டி கிடைக்குமா என்று

நாலாதிசைகளிலும்

காற்றைப்போல

அலைந்து திரிந்துவிட்டு

வெறுங்கையோடு வந்த

அவள் கணவனின் கைகளில்

இரத்தமும் சதையுமாக

அழகான பெண்குழந்தையைப்

பெற்றுக்கொடுத்தாள் ஆலா

சாவின் இதயத்திலிருந்து

பிரசவிக்கப்பட்ட அந்தக் குழந்தை

அவர்கள் இருவருக்கும்

அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது

ஆலா

அவளுடைய அல்லாவிற்கு

நன்றி சொல்ல மறக்கவில்லை

 

ப்போது

அடுத்த கவலை என்னவென்றால்

வீசப்படும் குண்டுகளால்

சாகாமல் இருக்க வேண்டும்

அந்தக் குழந்தை!

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 06/08/2024 - 5:33 PM

சாவின் இதயத்திலிலிருந்து பிரசவிக்கப்பட்ட குழந்தையைக் காட்சிப்படுத்திய கவிஞர் ஜோசப் ராஜா கவிதையை முடிக்கும்போது இப்போதைய கவலையாக குண்டுவீச்சில் இருந்து குழந்தை தப்பிக்க வேண்டும் என்பதே.

அதே எண்ணம் தான் இக்கவிதையைப் படித்து முடிக்கும் வேளையில் ஒவ்வொருவருக்கும் எழும்.

நீங்களும் படியுங்கள். உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணம் எழுகிறதா என்று சொல்லுங்கள்.

Reply
Balu Murugesan 02/10/2024 - 8:35 PM

நெஞ்சம் கனக்கும் கவிதை தோழர் !! சிறப்பு.

Reply

Leave a Reply to Balu Murugesan Cancel Reply