கவிதை குறித்த உரையாடல்

இத்தாலிய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமையான ராபர்ட்டோ பெனிக்னி ( Roberto Benigni ) இயக்கத்திலும் நடிப்பிலும் 2005 ம் ஆண்டு வெளிவந்த தி டைகர் அண்ட் தி ஸ்னோ ( The Tiger And The Snow )  என்ற திரைப்படத்தின் இரண்டு காட்சிகளில் வருகின்ற கவிதை குறித்த உரையாடல் . .

ஒரு காட்சி :

இரவு உறங்கச் செல்வதற்கு முன் நாயகனின் இரு மகள்களும் அவனிடம் நீங்கள் எப்படி கவிஞனாக மாறினீர்கள் என்று கேட்க, நாயகன் தான் கவிஞனான கதையைச் சொல்கிறான்.

  • மகள் 1 : நல்ல கவிதைகளை எழுத எனக்குச் சொல்லிக் கொடுக்க முடியுமா?
  • மகள் 2 : நீங்கள் எப்படி கவிஞனாக மாறினீர்கள்?
  • மகள் 2 : எப்படி கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்?
  • நாயகன் : இப்பொழுது நீங்கள் இருப்பதை விடவும் சிறுவனாக இருந்தேன், எட்டு அல்லது ஒண்பது வயது இருக்கும்
  • அப்பொழுது என் தாயுடன் இருந்தேன். அவளை நான் அதிகமாக நேசித்தேன்
  • ஒரு காட்டுக்குள் இருக்கிற எங்களுடைய மாமாவின் வீட்டில் இருந்தோம்
  • உங்களுக்குத் தெரியுமா என்ன நடந்தது என்று? தெரியுமா?
  • ஒரு சின்னப் பறவை பாடிக் கொண்டே பறந்து வந்தது. தாழ்வாக
  • ரொம்ப ரொம்பத் தாழ்வாக
  • அது என்னுடைய வலதுபக்க தோளின் மேல் வந்து உட்கார்ந்தது
  • என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்
  • எல்லா மனிதர்களையும் விட்டுவிட்டு அது என்னைத்தான் தேர்ந்தெடுத்தது
  • நான் பயந்து விட்டேன், அது பறந்து போய்விட்டது, ஆக நான் என்னை ஒரு மரமாக உணர ஆரம்பித்தேன்
  • என்னுடைய தோளை நான் அசைக்கவே இல்லை
  • என்னுடைய இதயத் துடிப்பை உணர ஆரம்பித்தேன். நிஜமாகவே வேகமாக இருந்தது
  • அப்புறம் அது தூரமாகப் பறந்து போய்விட்டது
  • என் அம்மாவிடம் இதைச் சொல்ல வேண்டுமென்று விரும்பினேன்
  • அம்மா, ஒரு சின்னப் பறவை பாடிக் கொண்டே பறந்து வந்தது
  • கொஞ்ச நேரம் என்னுடைய தோளில் உட்கார்ந்திருந்தது
  • அம்மா சொன்னாங்க, ஏதோ பயங்கரம் நடந்துருச்சுன்னு நினைக்கிறேன்னு. அப்படியே தொடர்ந்து பேச ஆரம்பிச்சிட்டாங்க
  • மகள் 1 : ஆமா, பாட்டி மாதிரியே, சரி பாட்டி பறவைகளை விரும்பலையா?
  • நாயகன் : இல்லை அப்படி இல்லை, பாட்டி சின்னச் சின்னப் பறவைகளை விரும்பினாள்.
  • ஆனா அது பாட்டிக்கு நடக்கலையே, எனக்குத்தானே நடந்தது
  • இது என்னுடைய தவறுதான், நடந்ததைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை எனக்கு
  • நான் உணர்ந்ததை அம்மாவை உணர வைக்க முடியவில்லை என்னால்
  • நான் அதிகமாகக் குழம்பிப் போனேன். அப்புறம் எனக்குள்ளேயே நான் சொல்லிக் கொண்டேன்
  • எந்த வேலையைச் செய்தாலும் சரியான வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டுமென்று
  • அந்த வழியில் வார்த்தைகளைப் பயன்படுத்த நினைத்தேன்
  • தன்னுடைய இதயத் துடிப்பை உணர்ந்தவனால் தான் அடுத்தவனுடைய இதயத் துடிப்பையும் உணர முடியும்
  • அந்த நாள் நான் முடிவு செய்தேன் ஒரு கவிஞனாக ஆக வேண்டுமென்று
  • ஏனென்றால், என்னுடைய இதயம்தானே துடித்தது, என்னுடையதுதானே பாட்டியோடது இல்லையே!

இன்னொரு காட்சி :

கல்லூரியின் வகுப்பறை. மாணவர்கள் கவனமாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஆசிரியர் வேகமான உடல் அசைவுகளோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் கவிதை எழுதுவது எப்படி என்று கற்றுக் கொடுக்கத் தொடங்குகிறார்.

  • இப்பொழுதே காதல் கவிதைகளை எழுத ஆரம்பித்து விடாதீர்கள்
  • ஏனென்றால் அது கடினமானது
  • அப்படியும் எழுத வேண்டுமென்றால் உங்களுடைய எண்பது வயது வரையிலும் காத்திருங்கள்
  • ஆக, இப்போதைக்கு எதைப்பற்றியாவது எழுதுங்கள்
  • உதாரணமாக கடல், காற்று, ஒரு குளிர்விப்பான் இவைகளைப் பற்றி எழுதுங்கள்
  • கவிதைக்கு அப்பாற்பட்டு இங்கே எதுவும் கிடையாது, எல்லாமுமே பாடுபொருள்தான்
  • கவிதை இல்லாததிலிருந்து வருவதில்லை, இருப்பதில் இருந்து வருவதுதான் கவிதை
  • கவிதை என்றால் என்ன? உண்மை என்றால் என்ன என்று கேட்காதீர்கள்
  • கண்ணாடியைப் பாருங்கள், நீங்கள்தான் கவிதை
  • எழுதத் தொடங்குங்கள் உங்களுடைய கவிதையை
  • வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்
  • ஒரே ஒரு வார்த்தைக்காக சமயங்களில் எட்டு மாதமெல்லாம் காத்திருக்க வேண்டி வரலாம்
  • ஆனாலும் தேர்ந்தெடுங்கள்
  • தேர்ந்தெடுக்கத் தொடங்கும் பொழுதுதான் அழகு தொடங்குகிறது
  • காதலிக்கத் தொடங்குங்கள், காதலிக்கவில்லை என்றால் எல்லாமே இறந்து போய்விடும்
  • காதலிக்கத் தொடங்கும் பொழுதுதான் வாழ்க்கைக்குள் எல்லாமுமே வரத் தொடங்கும்
  • மகிழ்ச்சியை செலவு செய்யுங்கள், உற்சாகத்தை சிதறச் செய்யுங்கள்
  • வருத்தத்திலும் அமைதியிலும் ஆர்வத்தோடு இருங்கள்
  • உங்களுடைய சந்தோஷங்களை மக்களின் முகங்களில் வீசி எறிங்கள்
  • மகிழ்ச்சியைக் கொடுத்தீர்களானால் நீங்களும் மகிழ்ச்சியாயிருப்பீர்கள்
  • உங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்
  • மகிழ்ச்சியோடிருங்கள், கண்டிப்பாகத் துயரப்படுங்கள்
  • துயரப்படுவதற்கு ஒருபோதும் பயப்படாதீர்கள்
  • ஏனென்றால் ஒட்டுமொத்த உலகமே துயரத்தில் தான் இருக்கிறது
  • உங்களிடம் இல்லாததற்காக ஒருபோதும் கவலைப் படாதீர்கள்
  • கவிதை எழுத அவசியமாக தேவைப்படுவது ஒன்றுதான்
  • அது என்னவென்றால்
  • எல்லாமும்
  • கவிஞன் வெறுமனே பார்க்கிறவன் இல்லை, அவன் உற்றுப் பார்க்கிறவன் உணர்கிறவன்
  • உற்றுப் பாருங்கள்
  • வார்த்தைகளை உங்களுக்குக் கீழ்ப்படியச் செய்யுங்கள்

ஜோசப் ராஜா

10.01.2013

(தை இதழில் பிரசுரித்த அன்பு அண்ணன்.அறிவுமதி அவர்களுக்கு நன்றி)

Related Articles

1 comment

Baskaran F T 06/01/2023 - 5:08 PM

ஒரு சினிமாவை அதிலும் ஒரு காட்சியை வைத்து கவிதையை இப்படி விளக்க முடியும் என தோழர் ஜோசப் ராஜா நிரூபித்துள்ளார்…….ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான்….. அவன் எழுதும் நிகழ்வு பயன்படுத்தும் வார்த்தைகள் இப்படி கூறி நம்மை வியப்பில் ஆழ்த்தினார் ஆழ்த்துகிறார்

Reply

Leave a Comment