கர்ப்பப்பையை காவுகேட்கும் கரும்புத் தோட்டம்

கரும்பைச்

சாப்பிட வேண்டாம்

நினைத்தாலே போதும்

இதயத்தின் ஆழத்திலிருந்து

எழுந்துவரும்

தித்திப்பு

திசையெங்கும் திசையெங்கும்

நிறைந்து கொள்ளும்

ஆனால்

அந்தக் கரும்பு

எப்படி

விளைவிக்கப்படுகிறது

எப்படி

அறுவடை செய்யப்படுகிறது

என்ற கேள்விகளும் கூட

முக்கியமானவைகள்தான்

வெறும்

தண்ணீர் ஊற்றி மட்டுமா

வளர்க்கப்படுகிறது கரும்புகள்

எத்தனை எத்தனை

தொழிலாளர்களின்

இரத்தமும் வியர்வையும்

ஊற்றப்படுகின்றன

ஒவ்வொரு வேரிலும்

ஒவ்வொரு

கரும்புத் தோட்டமும்

கண்ணீர் சிந்திய

எத்தனைக் கண்களைப் பார்த்திருக்கும்

ஒவ்வொரு

கரும்புத் தோட்டமும்

வெடித்துச் சிரித்த

எத்தனை உதடுகளைப் பார்த்திருக்கும்

ஒவ்வொரு

கரும்புத் தோட்டமும்

எத்தனை காதல்களை

கரும்புகளோடு சேர்த்து

வளரச் செய்திருக்கும்

ஒவ்வொரு

கரும்புத் தோட்டமும்

எத்தனை அவமானங்களை

யாருக்கும் சொல்லாமல்

மறைத்துக் கொண்டிருக்கும்

கரும்பு என்பது

வெறும் கரும்பு மட்டுமா

ஓராயிரம் கைகளின் உழைப்பில்லையா

கரும்பு என்பது

வெறும் கரும்பு மட்டுமா

ஓராயிரம் அரிவாள்களின் அசைவில்லையா

அப்பேர்ப்பட்ட கரும்பு

இனிக்கும் கரும்பு

இப்போது கசக்கிறது எனக்கு

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின்

பீட் மாவட்டத்தில்

கரும்பு விவசாயமே முக்கியமானது

ஆயிரக்கணக்கான பெண்கள்

கரும்பு வெட்டும் வேலையில்

ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

அதனால் என்ன என்கிறீர்களா

பிரசவமும்

மாதவிடாயும்

பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை

கிடைத்துக் கொண்டிருக்கும் கூலியைப்

பாதிக்கும் என்பதால்

தங்களுடைய கர்ப்பப்பைகளை

அகற்றிக் கொள்கிறார்களாம்

தங்களுடைய கர்ப்பப்பைகளை

அகற்றிக் கொள்கிறார்களாம்

இப்போது சொல்லுங்கள்

இனிக்குமா கரும்பு

கர்ப்பப்பைகளைக்கூட

காவு கேட்டுக் கொண்டிருக்கும்

இந்தச் சமூகமைப்பை

இப்படிப்பட்ட அவலங்களை

ஏராளமாக வைத்துக்கொண்டு

இந்தத் தேசம்

வளர்ந்துவிட்டது என்று

கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும்

முட்டாள்களை

என்ன செய்யலாம் சொல்லுங்கள்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 11/06/2025 - 7:35 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்ட கரும்பு அறுவடைப் பணி மூலம் குடும்பங்களைக் காப்பாற்றி வரும் பெண்கள் பணிக்காலத்தில் கர்ப்பமும் மாதவிடாயும் பெருந்தடையாக இருப்பதால் கர்ப்பப் பைகளை அகற்றிவிட்டு வேலை பார்க்கும் அவலம் இந்தியாவிற்கே அவமானம்.

பெண்களுக்காகவே தாங்கள் ஆட்சி புரிவதாய்ப் பசப்பும் காவிக் கூட்டம் இந்தக் கசப்பான உண்மையைக் கடந்து போவார்கள்.

இது குறித்த தோழர் ஜோசப் ராஜாவின் பதிவுகளைப் படியுங்கள். பரப்புங்கள்.

Reply

Leave a Reply to பெரணமல்லூர் சேகரன் Cancel Reply