உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
என்ற வார்த்தைகளை
முதன்முதலில் வாசித்தபோது
பரவசம் பற்றிக்கொண்டது
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
என்ற வார்த்தைகளை
முதன்முதலில் கேட்டபோது
இனிமை நிறைத்துக்கொண்டது
அதிகாரத்தில் இருப்பவர்கள்
அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக
எந்தக் கூச்சமும் இல்லாமல்
பிரிவினைப் பேச்சுக்களை
பேசித்திரிந்து கொண்டிருக்கும் காலத்தில்
பிரிவினைப் பேச்சுக்கள்
கட்டுக்கடங்காத கலவரங்களுக்குக்
காரணமாக இருக்கும் காலத்தில்
பிரிவினைப் பேச்சுக்கள்
யுத்தங்களைத் தொடங்கிவைத்து
எண்ணமுடியாத உயிரழப்புகளுக்கு
காரணமாக இருக்கும் காலத்தில்
ஒன்று சேருங்கள் என்ற வார்த்தைகளை
மீண்டும் மீண்டும் மீண்டும்
சொல்லிப்பாருங்கள்
ஒன்று சேர்வதின் தேவையை
உணர்ந்து கொள்வீர்கள்
உலகத் தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்த போதுதான்
இருள் நிறைந்த அறைகளுக்குள்
பாய்ந்தது ஒளி
உலகத் தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்த போதுதான்
பண்ணை நிலங்களுக்குள் வீசியது
சுதந்திரக் காற்று
உலகத் தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்த போதுதான்
அடிமை விலங்குகள்
வெறும்கைகளால் உடைக்கப்பட்டன
உலகத் தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்த போதுதான்
ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு
எட்டுமணி நேர வேலை
என்பது நிரந்தரமாயிற்று
உலகத் தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்த போதுதான்
முதலாளிகளின் பேராசையின் மீது
நெருப்பு மூட்டப்பட்டது
உலகத் தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்த போதுதான்
மாபெரும் புரட்சிகள்
நடக்கத் தொடங்கியது
உலகத் தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்த போதுதான்
மாபெரும் மாற்றங்கள்
நிகழத் தொடங்கியது
இப்போது
மீண்டும் இந்த உலகத்தைப்
யுத்தங்கள் சூழ்ந்திருக்கிறது
இப்போது
மீண்டும் இந்த உலகத்தை
ஆயுதங்கள் நிறைத்திருக்கிறது
பாருங்கள்
பிஞ்சுக் குழந்தைகளின் இரத்தம்
பூமியில் பிசுபிசுத்துக்
கொண்டிருப்பதைப் பாருங்கள்
வீடற்றவர்களாலும் நாதியற்றவர்களாலும்
அகதி முகாம்கள்
நிறைந்து வழிவதைப் பாருங்கள்
கொல்லப்பட்ட குழந்தைகளின்
மண்டை ஓடுகளை எண்ணிஎண்ணி
மகிழ்ந்து கொண்டிருக்கும்
சர்வாதிகாரிகளைப் பாருங்கள்
இந்தச் சர்வாதிகாரிகளுக்கு
முடிவுரை எழுதுவதற்காக
இந்தச் சர்வாதிகாரிகளை
எழவே முடியாதபடி
ஆழப் புதைப்பதற்காக
ஏவுகணைகளாலும் எறிகுண்டுகளாலும்
பீரங்கிகளாலும் கன்னிவெடிகளாலும்
காயமடைந்திருக்கும் நிலங்களின்
காயங்களை ஆற வைப்பதற்காக
நிச்சயமாக நிச்சயத்திலும் நிச்சயமாக
முன்னெப்போதைக் காட்டிலும்
உலகத் தொழிலாளர்களே நீங்கள்
ஒன்றுசேர வேண்டிய காலமிது
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
யுத்தங்களுக்கு எதிராக
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
யுத்தங்களை நடத்துகிறவர்களுக்கு எதிராக
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
ஆயுத வியாபாரிகளுக்கு எதிராக
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
நவீனமாக இரத்தம் குடிக்கும்
நவீனமாக உழைப்பைச் சுரண்டும்
நவீனமாக இலாபத்தைப் பெருக்கும்
நவீனமாக கொள்ளையடிக்கும்
நவீன முதலாளிகளுக்கு எதிராக
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
பூக்கள் மீண்டும் பூத்துக்குலுங்க
புரட்சிகள் மீண்டும் பூமியை அழகாக்க
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
யுத்தங்களுக்கு எதிரான பேரணிகள்
உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன
சூரியனையே வெட்கச் செய்யும்
செங்கொடிகள் நிறைந்த
இந்த ஆண்டின்
பிரம்மாண்டமான
மேதினப் பேரணிகளும் கூட
யுத்தங்களுக்கு எதிரானதாகவே இருக்கட்டும்!
ஜோசப் ராஜா