உண்மைக்கான முத்தம்

தயத்தின் ஆழத்திலிருந்து

பொங்கிவரும்

பேரன்பின் முத்தங்களும்

மகிழ்ச்சியின் உச்சத்தில்

மழையைப்போல பொழியப்படும்

கணக்கற்ற முத்தங்களும்

அவ்வளவு சாதாரணமாக

கிடைக்கக்கூடியதல்ல என்பதை

உங்களுக்கு

ஞாபகப்படுத்த விரும்புகிறேன்

முத்தம் என்பது

பேரன்பின் அங்கீகாரம்

முத்தம் என்பது

பெருங்கருணையின் காட்சித்தோற்றம்

முத்தம் என்பது

பேருவைகையின் பெருவெடிப்பு

முத்தம்

உங்களுக்கானது மட்டுமல்ல

உங்கள் செயல்களுக்கானதுமாகும்

செயல்படாமல் இருப்பவன்

ஒருபோதும்

ஒற்றை முத்தத்திற்கும்

தகுதியே இல்லாதவன்

மக்களுக்காகவும்

மக்களின் நன்மைகளுக்காகவும்

ஏதாவது ஒரு வழியில்

ஏதாவது ஒரு வகையில்

செயல்பட்டுக் கொண்டிருப்பவனே

ஓயாத முத்தத்திற்கும்

உண்மையின் முத்தத்திற்கும்

முழுமையான தகுதியுடைவன்

முத்தத்திற்கெல்லாம் தகுதியா என்று

அவசரப்பட்டு என்னிடம்

எதுவும் கேட்கமாட்டீர்கள் என்று

உறுதியாக நம்புகிறேன்

 

ன்பின் முத்தத்தைத்

தாங்கியிருக்கும்

இந்தப் புகைப்படத்தைத்தான்

இந்த விடியலில்

இந்த உலகத்தின்

அதிகமான கண்கள்

மீண்டும் மீண்டும்

பார்த்துக் கொண்டிருக்கின்றன

ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி ஒருநாள்

சிறைவாசத்திலிருந்து

மீண்டுவந்திருக்கிறான் அவன்

தொடர்ந்து நாடுகடத்தப்பட்டதிலிருந்து

சொந்த நாட்டிற்குத்

திரும்பி வந்திருக்கிறான்

கொலை செய்யவில்லை

மக்கள் பணத்தை

கொள்ளையடிக்கவில்லை

போர் என்ற பெயரில்

இனப்படுகொலை செய்யவில்லை

வெட்கமே இல்லாமல்

பொய்யான காரணங்களைச்

சொல்லிச்சொல்லி

இலட்சோபலட்சம் மக்களை

கொன்று குவிக்கவில்லை

அவன் செய்தது ஒன்றுதான்

ஒன்றே ஒன்றுதான்

உண்மையைச் சொன்னதுதான்

அமெரிக்கா

ஆப்கானின் இதயத்தை

திட்டமிட்டுச் சிதைத்தது

அமெரிக்கா

ஈராக்கின் நிலங்களை

திட்டமிட்டுச் சல்லடையாக்கியது

அமெரிக்கா

லிபியாவின் அமைதியை

திட்டமிட்டுக் குலைத்தது என்று

யாரும் சொல்லாத உண்மையை

அசைக்கமுடியாத ஆதாரங்களோடு

எல்லோருக்கும் சொன்னான்

இருளை மட்டுமே

தரிசித்துக் கொண்டிருக்கும்

உலகத்தின் கண்கள்

அவன் காட்டிய

உண்மையின் ஒளியில்

கூசிக் கொண்டிருந்தன

அவன் வெளிப்படுத்திய உண்மையில்

அந்த ஏகாதிபத்திம்

வேரோடும்

வேரடி மண்ணொடும்

வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்க வேண்டும்

நடக்கவில்லை என்பது

வருத்தம்தான் எனினும்

அவன் வெளிப்படுத்திய உண்மைகள்

அதிகாரத்தின் அஸ்திவாரத்தை

அசைத்துப் பார்த்தது

அவன் அம்பலப்படுத்திய உண்மைகள்

அதிகாரத்தின் இழிவான இதயத்தை

அம்பலத்தில் ஏற்றியது

 

தோ

விடுதலைக்கும் பின்

ஜூலியன் அஸாஞ்சே பெற்ற

இந்த முத்தத்தைப் போல

பேரன்பின் முத்தத்தை

பெற்றுவிட வேண்டும் என்று

உங்களுக்கும் ஆசையிருக்கும்

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம்

ஒன்றுதான்

உண்மையைப் பேசவேண்டியதுதான்

உண்மையைப் பேசுங்கள்

நீங்களும்

முத்தங்களால் வரவேற்படுவீர்கள்

முத்தங்களால் மூழ்கடிக்கப்படுவீர்கள்

கவிஞனாகவே இருந்தாலும்

அவ்வளவுதான் சொல்லமுடியும்

அந்த உணர்வு

அனுபவித்து அறியக்கூடியது

அறிந்து கொள்ளுங்கள்

உண்மையும் முத்தமும் வேறுவேறல்ல!

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

Baskaran F T 27/06/2024 - 11:47 AM

கடவுளின் வரத்தை விட உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்னதற்கு கிடைத்த சிறை தண்டனையை மறக்கடிக்கச் செய்யும் இந்த முத்தம்..

Reply
பெரணமல்லூர் சேகரன் 27/06/2024 - 9:53 PM

ஆறாண்டு கால சிறை வாழ்க்கைக்குப் பின் அசாஞ்சேவுக்குக் கிடைத்த விடுதலையும் முத்தமும் சாதாரணமானதல்ல.

அதன் முக்கியத்துவத்தை
உன்னதத்தை
கவிஞர் ஜோசப் ராஜா அழகுறப் படமாக்கியுள்ளார் தமது கவிதையில்.

வாசியுங்கள்
பகிருங்கள்.

Reply

Leave a Comment