இரும்புக் கம்பிகளுக்கு இதயமில்லை தான்

றுக அணைத்துக்கொள்ளக்கூட

வேண்டாம்

காதலின் கரங்களால்

மெல்லத் தீண்டப்படுதலே

பேரின்பம் என்பதை

எல்லோரும் அனுபவித்திருப்பீர்கள்

என்றே நம்புகிறேன்

அப்படி ஓர் அனுபவத்தில்

பூமியின்

அழுக்குகளை மறந்து

காதலின்

உன்னதமான உலகத்தில்

உலவிக் கொண்டிருக்கிறார்கள்

காதலர்கள்

பேரிடி என்பதைக்

கேள்விப்பட்டிருப்பீர்கள்

ஆனால்

அவன் அனுபவித்தான்

அந்தப் பேரிடியை

அன்பின் சொற்களை மட்டும்

அள்ளித்தரும் அந்தக்குரல்

இல்லையென்பதை

அவனால் நம்ப முடியவில்லை

காதலின் பெருமிதங்களால் மட்டுமே

நிறைந்திருக்கும் அந்த இதயம்

துடிப்பதை நிறுத்திக் கொண்டதை

அவனால்

ஏற்றுக்கொள்ள முடியவில்லை

காதலியின் மரணம்

அவனுடைய இதயத்தில்

அத்தனை திசைகளிலிருந்தும்

முள்ளாய்க் குத்திக் கொண்டிருக்கிறது

ஒரு காதல்

ஒன்றுசேரும்போது

இந்த உலகத்தின்

எந்தச் சூழ்ச்சிகளும்

இந்த உலகத்தின்

எந்தக் குரூரங்களும்

யாருக்கும் தெரிவதில்லை

அதே காதல்

பிரிக்கப்படும் போது

இந்த உலகத்திற்கு

தேவையே இல்லாத

சாதியை

இந்த உலகத்திற்கு

தேவையே இல்லாத

மதத்தை

இந்த உலகத்தில்

இருக்கவே கூடாத

பொருளாதாரச் சமமின்மையை

இரத்தமும் சதையுமாகப்

புரிந்து கொள்ளலாம்

அப்படிப் புரிந்துகொண்டவன்

அலறியடித்து ஓடுகிறான்

காதலியின் வீட்டின் முன்னால்

கண்ணீரோடு மன்றாடுகிறான்

நீங்களே சொல்லுங்களேன்

பெத்த மகளை

உடன்பிறந்த தங்கையை

இரும்புக்கம்பியால்

தலையில்

அடித்துக் கொன்றவர்களை

இரும்புக்கம்பியால்

தலையில்

அடித்தே கொன்றவர்களை

அந்தக் கண்ணீர்

என்ன செய்துவிடும்

அந்தக்

கொலைகாரர்களை மட்டுமல்ல

இப்படிப்பட்ட படுகொலைகளை

காலமெல்லாம்

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்

உங்களையும்

என்ன செய்துவிடும்

அந்தக் கண்ணீர்

இரும்புக் கம்பிகளுக்கு

இதயமிருக்காது என்பதை

என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

ஆனால்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

Baskaran F T 02/04/2025 - 1:11 PM

தோழர் ஜோசப் ராஜா காதலின் வலிகளையும் உணர்வுகளையும் இதயத்தோடு கலந்து இங்கு எழுதியிருக்கிறார் இந்த நிகழ்வு எனக்கும் அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கும் 20 கிலோமீட்டர் தான் இன்று காலையில் தான் அந்த நிகழ்வை நான் பார்த்தேன் ஆனால் எனக்கு முன்பே இருந்த கவிதை எழுதி எனக்கு இந்த வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார். அண்ணன் தன் வாயால் ஒப்புக்கொண்டான் இவரு வேறு ஒரு ஜாதி பையனை காதலித்ததால் அவரை அடித்துக் கொன்றேன் என்று எப்படி இதற்கு பெற்றோரும் பெற்றோர்களும் ஒப்புக்கொண்டார்கள் என்பது புரியவில்லை காதலை ஏற்றுக் கொள்ள முடியாத இந்த உலகம் எப்படி தன் பிள்ளைகளோடு அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள் என்பது புரியவில்லை. இந்த காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அனைவருக்கும் இந்தக் கவிதை அவர்களுக்கு கேள்விகளை எழுப்புவோம் இதயம் இருந்தால்…..

Reply

Leave a Reply to Baskaran F T Cancel Reply