உடலின் எடைக்குக்
கொஞ்சம் குறைவாக இருக்கும்
புத்தகப் பையைச் சுமந்தபடி
கைகளை இறுகப் பற்றிக்கொண்டு
சாலையோரமாக
மெதுவாக நடந்து
பள்ளிக்கூடம் நோக்கிச்
சென்று கொண்டிருக்கிறார்கள்
அக்காவும் தங்கையும்
இந்த அக்காள்கள்
மனதில்
என்னதான் நினைப்பார்களோ
தெரியவில்லை
அம்மாவைப் போல
சில நேரங்களில்
அம்மாவிற்கும் மேலாய்ப்
பார்த்துக் கொள்கிறார்கள்
தங்கைகளை!
அவளும் கூட
தங்கையை
அவ்வளவு கவனமாக
அழைத்துச் செல்கிறதைப்
பார்த்துக் கொண்டிருந்தேன்
சாலை விதிகளை மதிக்காமல்
விரைந்து செல்லும் வாகனங்கள்
மேடும் பள்ளமுமான சாலைகள்
வேகமாக
வேகமாக மட்டுமே செல்லும்
மனிதர்களுக்கு மத்தியில்
தங்கையின் கையை
விடவே இல்லை
தங்கையும் கூட
அக்காவின் கண் அசைவிற்கு
கட்டுப்பட்டு
அமைதியாக அழகாக
சென்று கொண்டிருக்கிறாள்
அன்பும்
அரவணைப்பும்
அக்கறையும்
பார்க்கத் திகட்டாதது
என்பதால்
பார்த்துக் கொண்டேயிருந்தேன்
பெரியவர்களான பிறகும்
இப்படியே இருக்க வேண்டுமென்று
நினைத்துக் கொண்டிருக்கையில்
எங்கிருந்தோ வந்த
பத்துக்கும் மேற்பட்ட நாய்கள்
அவர்களைச் சூழ்ந்து கொண்டு
குரைக்கத் தொடங்கியது
தங்கை அலறிவிட்டாள்
ஒருகையால் தங்கையை
இறுகப் பற்றிக்கொண்ட அக்காள்
பயத்தைக் காட்டிக் கொள்ளவேயில்லை
புத்தகப்பையைச் சுழட்டியப்படி
தங்கையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தாள்
நாய்கள் விடுவதுபோலத்
தெரியவில்லை
நாங்கள் ஓடிச்சென்று
அந்த நாய்களை விரட்டினோம்
எங்களுக்கே
அவ்வளவு எளிமையாக இல்லைதான்
ஐந்தாவது படிக்கும் அக்காள்
நன்றி சொன்னாள்
ஒன்றாவது படிக்கும் தங்கை
அக்காவை இன்னும்
இறுகப் பற்றியிருந்தாள்
நாய்கள் போனபின்பும்
அவளுக்குப்
பயம் போகவில்லை
எங்கோ
நாய்கள் குரைக்கும் சத்தம்
அந்த இடத்தையே
அதிரச் செய்து கொண்டிருந்தது
அக்காவும் தங்கையும்
எதிரிலிருக்கும் பள்ளிக்கூடத்திற்குள்
நுழைந்தார்கள்
சாலையில்
அந்த நாய்க்கூட்டம்
வேகமாக ஓடிக் கொண்டிருந்தது
அங்கிருந்து அலுவலகம்
வரும் வரைக்கும்
கண்ணில்பட்ட நாய்களையெல்லாம்
எண்ணிக்கொண்டே வந்தேன்
எல்லாச் சாலைகளிலும்
எல்லாத் தெருக்களிலும்
நிறைந்திருக்கின்றன நாய்கள்
நீங்களே சொல்லுங்கள்
இந்த நகரம் யாருக்கானது?

1 comment
மனிதர்கள் வாழ வேண்டிய நகரங்கள்
கிராமங்களில் கூட நாய்களின் எல்லை மீறிய தொல்லைகள்
பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வழக்கம் போல தமது கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.