சுற்றிவளைத்துப் பேச விரும்பவில்லை
நேரடியாகவே கேட்கிறேன்
இந்த முதலாளித்துவச் சமூகமைப்பில்
ஒரு முதலாளிக்கு
ஓர் அரசாங்கம்
என்னென்ன வசதிகளை
எவ்வளவு விரைவாக
எவ்வளவு தாராளமாக
எத்துனை வாஞ்சையோடும்
எத்துனை பேரன்போடும்
செய்து கொடுக்கிறது என்று
யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா
அதேநேரத்தில்
உங்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காக
உங்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்காக
இந்த அரசாங்கமும்
இந்த அரசாங்கக் கட்டமைப்பும்
எப்படியெல்லாம் உங்களை அலைக்கழித்ததென்றும்
எப்படியெல்லாம் உங்களை அவமானப்படுத்தியதென்றும்
எப்படியெல்லாம் உங்களை ஏமாற்றுகிறதென்றும்
எப்படியெல்லாம் உங்களை அரித்தெடுக்கிறதென்றும்
யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா
ஜனநாயகத்தைப் பற்றியும்
மக்களாட்சி பற்றியும்
இவர்களது
இதயத்தை உருக்கும் உரைகளை
மூளையைச் சலவைசெய்யும் பேச்சுக்களை
இப்போதும் உண்மையென்று
நம்பிக் கொண்டிருந்தீர்களென்றால்
உங்களைவிடவும் முட்டாள்கள்
இந்தப் பூமியில் இருக்கமுடியாது
நிலமற்ற எளிய மனிதர்கள்
ஏராளமாய் இருக்கும் தேசத்தில்
எத்தனை ஏக்கர் நிலங்கள்
சொற்ப விலைக்கும் விலையே இல்லாமலும்
வாரிவழங்கப்படுகின்றன ஒவ்வொரு முதலாளிக்கும்
உணவிற்கு வழியின்றி
பசித்துப் பசித்தே செத்துப்போகும்
மனிதர்கள் இருக்கும் தேசத்தில்
எத்தனை குறைந்த வட்டிக்கு
கோடிக்கணக்கிலான ரூபாய்கள்
வாரிவழங்கப்படுகின்றன ஒவ்வொரு முதலாளிக்கும்
பொழுதெல்லாம் வியர்வை சிந்தி
உழைத்துக் களைத்த போதும்
பொருந்தாத கூலியில் வருந்திக் கொண்டிருக்கும்
தொழிலாளர்கள் இருக்கும் தேசத்தில்
இந்த மண்ணும் இந்த மலைகளும்
இங்கிருக்கும் இயற்கை வளங்களும்
வாரிவழங்கப்படுகின்றன ஒவ்வொரு முதலாளிக்கும்
ஒவ்வொரு கணமும்
மரணத்தை நோக்கிய எண்ணங்களால்
வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும்
வேலையிழந்தவர்கள் இருக்கும் தேசத்தில்
எத்தனை முதலாளிகளின்
எத்தனை கோடி வாராக்கடன்கள்
தள்ளுபடி செய்யப்படுகின்றன
இந்தத் தேசத்தின்
கோடிக்கணக்கான நடுத்தரவர்க்கத்தினர்
வரிகட்டமுடியாமல்
வதங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்
வரிச்சலுகையென்று
எத்தனை முதலாளிகளின் இதயங்களை
குளிர்வித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்
தேசப்பற்று மொழிப்பற்று
மதப்பற்று சாதிப்பற்று
இத்யாதி இத்யாதி உணர்வுத் திரைகளை
உங்கள் மீது வீசிவிட்டு
அவர்கள் செய்வது
ஒன்றுதான் ஒன்றே ஒன்றுதான்
சுரண்டுவது சுரண்டுவது
சுரண்டுவது மட்டும்தான்
ஒரு தேசத்தின்
ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவையானதை
ஒற்றை முதலாளி வைத்திருக்கிறான்
என்ற உண்மையிலிருந்து
என்ன புரிந்து கொள்கிறீர்கள்
நீங்கள் உழைத்துக் கொண்டிருப்பது
உங்களுக்கென்றும்
உங்கள் பிள்ளைகளுக்கென்றும்
நம்பிக் கொண்டிருக்கிறீர்களா
இல்லை இல்லவே இல்லை
நீங்கள் உழைத்துக் கொண்டிருப்பது
முதலாளிக்கு
நீங்கள் வியர்வை சிந்துவது
முதலாளிக்காக
நீங்கள் இரத்தம் சொரிவதும்
முதலாளிக்காகவே
எனக்குத் தெரியும்
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு
நீங்கள் புரியாததுபோல இருப்பீர்கள்
எனக்குத் தெரியும்
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே
நீங்கள் மெளனமாக இருப்பீர்கள்
ஆனால்
ஒரு கவிஞனாக
பெருமழையின் சொற்களை
உங்களை நோக்கிப்
பொழிந்துகொண்டே இருப்பதும்
சூறாவளியின் வார்த்தைகளை
உங்களைச்சுற்றி
வீசிக்கொண்டே இருப்பதும்
என்னுடைய கடமையாகிறது!
2 comments
ஆட்சியாளர்களும் முதலாளிகளும் எப்படி கூட்டாளிகளாக இருந்துகொண்டு சுரண்டல் பணியைத் திறம்படச் செய்கிறார்கள் என்பதைத் தமது கவிதை மூலம் கவிஞர் ஜோசப் ராஜா விளக்குகிறார்.
இக்கவிதையைப் படிப்பதும் பரப்புவதும் களப்பணியாற்றுவதும் மனிதநேயப் போராளிகளின் மகத்தான கடமை.
I needed to thank you for this wonderful read!! I absolutely loved every bit of it. I have you saved as a favorite to check out new things you postÖ