அன்பெனும் பேராயுதம்

னிதகுல வரலாறு முழுக்க

தொடர்ந்து வலியுறுத்தப்படுவது

அன்பு மட்டும்தான்

அன்பிற்கான தேவை

இல்லாமல் ஆக்கப்பட்டபோதுதான்

போட்டிகளும் பொறாமைகளும்

யுத்தங்களும் என

அழிவின் கரங்களைத்

தேடிப்போய்த் தஞ்சம் புகுந்தது

இந்த மனிதகுலம்

ஆனபோதிலும்

ஒவ்வொரு முறையும்

அன்பெனும் ஏணியைப்

பற்றிப் பிடித்துதான்

இவ்வளவு தூரம்

ஏறி வந்திருக்கிறோம்

ஒவ்வொரு தேசத்தின்

ஒவ்வொரு தத்துவஞானிகளும்

அன்பை மட்டும்தான் வலியுறுத்தினார்கள்

ஒவ்வொரு தேசத்தின்

உண்மையான மக்கள் தலைவர்களெல்லாம்

அன்பை மட்டும்தான் போதித்தார்கள்

இதுவரையிலும்

இந்த உலகத்தில் நடந்தேறிய

ஒவ்வொரு மாற்றத்தின் பின்னாலும்

அன்புதான் நிறைந்திருந்தது

இதுவரையிலும்

இந்த உலகத்தில் நடந்தேறிய

ஒவ்வொரு புரட்சியிலும் கூட

பேரன்பே பிரதானமாயிருந்தது

அன்பிற்கான அத்தனை பாதைகளும்

அழித்தொழிக்கப்பட்டிருக்கும்

இந்தச் சமூகமைப்பில்

அன்பைப் பற்றிப் பேசுவதே

ஆக்கப்பூர்வமான ஒன்றுதான்

அன்பிற்கான அத்தனை தேவைகளும்

இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கும்

இந்தச் சமூகமைப்பில்

அன்பிற்கான தேவையை வலியுறுத்துவதே

அவசியமான ஒன்றுதான்

வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாயிருக்கும்

இந்த நேரத்தில்

வாழ்க்கை அச்சத்திற்குள்ளாகியிருக்கும்

இந்தக் காலத்தில்

அன்பின் ஆதார வேர்கள்

அறுத்தெறியப்படுவது

அவ்வளவு நல்லதல்ல

அன்பிற்கான தேவைகள்

குறையும் நேரத்தில்தான்

ஆயுதங்களின் தேவை அதிகரிக்கிறது

ஆனால் வாழ்க்கையென்பது

ஆயுதங்களிலிருந்தல்ல

இதயங்களிலிருந்துதான் தொடங்குகிறது

ஆயிரமாயிரம் வருடங்களாக

வலியுறுத்தப்பட்டதைத்தான்

நானும் வலியுறுத்துகிறேன்

தோழர்களே

அன்புசெய்யுங்கள் நம்பிக்கையோடிருங்கள்

காதலிக்க வேண்டாமென்று சொல்கிறவன்

புத்திசரியில்லாதவன்

காதலிக்கக் கூடாதென்று கட்டளையிடுகிறவன்

இயற்கைக்கு எதிரானவன்

மனித உணர்விலிருந்து விலகிவிட்டவர்களோடு

நேரத்தை விரயம் செய்யாதீர்கள்

மனிதர்களாக இருக்க விரும்பாதவர்களோடு

நேசத்தை வீணடிக்காதீர்கள்

உங்கள் அன்பிற்காகக் காத்திருக்கும் இதயங்கள்

நிலத்திலும் தொழிற்சாலைகளிலும்

புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்

இரைப்பையில் ஒருபருக்கைகூட இல்லாமல்

உயிரிழக்கும் மனிதர்கள் இருக்கும் தேசத்தில்

ஆயிரமாயிரம் கோடிகள் கடன்களோடு

ஒவ்வொரு முதலாளியும்

வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பாருங்கள்

அவர்களுக்குச் சாதகமாகப் பணத்தின் பின்னால்

ஒவ்வொரு மனிதனையும் ஓடவைத்திருக்கும்

இந்தச் சமூகமைப்பை

இன்னும் எத்தனை காலம்

தாங்கிப் பிடித்திருக்கப் போகிறீர்கள்

உறவுகளைத் திரைபோட்டு மறைத்திருக்கும்

இந்த முதலாளித்துவச்

சமூகமைப்பை மாற்ற வேண்டுமென்றால்

தோழர்களே அன்பு செய்யுங்கள்

உறவுகளுக்குள் பகைமையை வளர்த்திருக்கும்

இந்த முதலாளித்துவச்

சமூகமைப்பை ஒழிக்க வேண்டுமென்றால்

தோழர்களே அன்பு செய்யுங்கள்

மனிதகுல விரோதிகளுக்கு எதிராக

அன்பெனும் பேராயுதத்தை உயர்த்திப்பிடிங்கள்

உங்களுக்கான இதயங்களை வென்றெடுங்கள்!

உங்களுக்கான வாழ்க்கையை வென்றெடுங்கள்!

Related Articles

2 comments

Ram 14/02/2023 - 11:30 AM

அன்பே பேராயுதம். இந்த முதலாளித்துவச் சமூகமைப்பை மாற்றவும், இந்த முதலாளித்துவச்
சமூகமைப்பை ஒழிக்கவும் அன்புசெய்வதுதான் சரியான வழி. அதுவும் வர்க்க அன்பே வழியென்று திருத்தமாய்ச் சொன்ன கவிஞருக்கு வாழ்த்துகள்.
வாழ்க்கையென்பது
ஆயுதங்களிலிருந்தல்ல
இதயங்களிலிருந்துதான் தொடங்குகிறது
என்பது இதயத்தை தொட்டது. இன்னும் நிறைய எழுதுங்கள்.

Reply
கணபதி இளங்கோ 14/02/2023 - 11:52 AM

சமுதாய காதலர்கள் தான் சமூக மாற்றத்திற்கு அடித்தளம் என்பதை அற்புதமாக கூறும் கவிதை. மிக அருமை சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்

Reply

Leave a Reply to Ram Cancel Reply