வெறுப்பும் யுத்தமும்

வெறுப்பு

ஒரு யுத்தத்தைத்

தொடங்குவதற்குப்

போதுமானதாக இருக்கின்றது

வெறுப்பு

ஒரு யுத்தத்தைத்

தொடர்வதற்கும்

போதுமானதாக இருக்கின்றது

குழந்தைகளைக்

கொன்று குவிப்பதற்கும்

குடியிருப்புப் பகுதிகளை

சுடுகாடாக மாற்றுவதற்கும்

அப்பாவி மனிதர்களை

அகதிகளாக்கி அலைக்கழிப்பதற்கும்

இரக்கமேயில்லாத இனப்படுகொலையை

அரங்கேற்றுவதற்கும்

வெறுப்பு

போதுமானதாக இருக்கின்றது

 

சக மனிதர்களுக்கிடையில்

வெறுப்புணர்வை வளர்ப்பதற்காகவே

இந்த உலகத்தில்

அதிகமான பணம்

செலவு செய்யப்படுகிறது

என்பதற்காக

இந்த மனிதகுலம்

வெட்கப்பட வேண்டாமா!

சக மனிதர்களுக்கிடையில்

வெறுப்புணர்வை வளர்ப்பதற்காகவே

மனிதனின் ஒவ்வொரு

மகத்தான கண்டுபிடிப்பும்

பயன்படுத்தப்படுகின்றன என்பதற்காக

இந்த மனிதகுலம்

வெட்கப்பட வேண்டாமா!

சக மனிதர்களுக்கிடையில்

வெறுப்புணர்வை வளர்ப்பதற்காகவே

ஒவ்வொரு மதமும்

ஒவ்வொரு கடவுளும்

ஒவ்வொரு தத்துவமும்

உபயோகப் படுத்தப்படுவதற்காக

இந்த மனிதகுலம்

வெட்கப்பட வேண்டாமா!

சக மனிதர்களுக்கிடையில்

வெறுப்புணர்வை வளர்ப்பதற்காகவே

அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும்

அலைந்து கொண்டிருப்பதற்காக

குழந்தைகளுக்கு எதிரான

பெண்களுக்கு எதிரான

கொடூரமான திட்டங்களைத்

தீட்டிக் கொண்டிருப்பதற்காக

இந்த மனிதகுலம்

வெட்கப்பட வேண்டாமா!

 

“அவர்கள்

இருளின் குழந்தைகள்

கொல்லப்பட வேண்டியவர்கள்” என்று

வெறுப்பின் நாவினால்

பாலஸ்தீனக் குழந்தைகளைப்

பார்த்துச் சொல்லப்பட்ட

வெறுப்பின் வார்த்தைகள்

நீண்ட நாட்களாக என்னை

நிம்மதியிழக்கச் செய்தன

அந்த வார்த்தைகளைத் தொடர்ந்து

ஒன்று நூறு ஆயிரமென

பாலஸ்தீனக் குழந்தைகள்

கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது

இப்போது வரையிலும்

இதயத்தைக்

குத்திக் கொண்டிருக்கிறது

 

கவிதை மட்டும்

என் கைகளில்

இல்லாமல் இருந்திருந்தால்

கவிதை மட்டும்

என் இதயத்தில்

சுரக்காமல் இருந்திருந்தால்

சுக்குநூறாக

வெடித்துச் சிதறியிருப்பேன்

ஆனால்

என்னுடைய கேள்விகளெல்லாம்

நீங்கள்

என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

என்பதுதான்

இந்தக் காட்சிகளையெல்லாம்

எப்படிக் கடந்து கொண்டிருக்கிறீர்கள்?

என்பதுதான்

இந்த மானுட ஓலங்களையெல்லாம்

எப்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?

என்பதுதான்

 

வெறுப்பின் வார்த்தைகளை

இன்னுமா கேட்கவில்லை

உங்கள் காதுகள்?

வெறுப்பின் மனிதசாயலை

இன்னுமா பார்க்கவில்லை

உங்கள் கண்கள்?

பாருங்கள் பிணக்குவியல்களை

அன்றிலிருந்து இன்றுவரையிலும்

வெறுப்பே

இனப்படுகொலையின் தோற்றுவாயாக

இருக்கின்றதைப் பாருங்கள்

அன்றிலிருந்து இன்றுவரையிலும்

வெறுப்பே

யுத்தங்களின் தோற்றுவாயாக

இருக்கின்றதைப் பாருங்கள்

உங்களுக்காக இல்லையென்றாலும்

உங்களின் பிள்ளைகளுக்காக

உங்களுக்காக இல்லையென்றாலும்

உங்களின் பிள்ளைகளுக்காக

வெறுப்பிற்கு எதிராகப்

பேசத் தொடங்குங்கள்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 23/09/2024 - 10:06 PM

வெறுப்பு அரசியலின் பொறுப்பற்ற செயல் யுத்தம் என்பதைத் தம் கவிதை வரிகளால் காட்சிப்படுத்தியுள்ள கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதையைப் படியுங்கள். பரப்புங்கள்.

Reply

Leave a Comment