வெறுப்பின் விதைகளும் நம்பிக்கையின் நாற்றுகளும்

படம் : மே,2, 1945 ல் வெறுப்பை ஒழித்து நம்பிக்கை உயிர்த்தெழுந்த போது

ம்புங்கள்

இது தற்காலிகமானது தான்

நம்புங்கள்

இவர்களும் தற்காலிகமானவர்கள் தான்

நிரந்தரமானது

இந்த நிலம்தான்

இந்த தேசம்தான்

நிரந்தரமானவர்கள்

இந்த மக்கள்தான்

மீண்டும்மீண்டும் சொல்கிறேன்

மக்களுக்குள் பிரிவினையை விதைத்தவர்கள்

மோசமான முடிவைத்தான் பெற்றிருக்கிறார்கள்

மக்களுக்குள் அச்சத்தைப் பரப்பியவர்கள்

அசிங்கமான முடிவைத்தான் பெற்றிருக்கிறார்கள்

தேசமென்பது மக்கள் திரள்தான்

மக்களில்லாமல் தேசமுமில்லை ஒன்றுமில்லை

தலைவர்கள் வருவார்கள் போவார்கள்

என்ன செய்தார்கள்

என்பதைப் பொறுத்தே

மக்களால் போற்றப்படுவதும்

மக்களால் தூற்றப்படுவதும்

மனிதகுலத்திற்கு எதிரான

எந்தத் தலைவனையும்

மனசாட்சியே இல்லாமல்

சிதைத்திருக்கிறார்கள் மக்கள்

மனிதகுலத்தின் மீது

பேரன்பு கொண்ட எந்தத் தலைவரையும்

எல்லைகளுக்கு அப்பாற்பட்டு

ஏந்திச்சுமந்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள்

 

ரலாற்றைப் படைக்கிறவர்கள் நீங்கள்

வரலாற்றைச் செதுக்குகிறவர்கள் நீங்கள்

தலைவர்கள் வழிநடத்துவார்கள்

மக்கள்தான்

தலைகீழாக மாற்றிக்காட்டுவார்கள்

மக்கள் வழிநடத்த சில நேரங்களில்

தலைவர்கள் உருவாகி வருவார்கள்

ஏதாவதொன்று நடந்தே தீரும்

இது வரலாற்று நியதி

இனி செய்ய வேண்டியதெல்லாம்

ஒன்றே ஒன்றுதான்

ஒன்றாக இருப்பதுதான்

ஒன்றாக இருப்பதுதான்

ஒவ்வொருவனையும் அச்சமூட்டுகிறது

ஒன்றாக இருப்பதை

எந்தவொரு முதலாளியும்

விரும்புவது கிடையாது

ஒன்றாக இருப்பதை

எந்தவொரு முதலாளித்துவ அரசும்

விரும்புவது கிடையாது

கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்

மக்களுக்குள் எந்தவொரு பிரிவினையும்

இல்லாத போது

இவர்கள் ஏன்

மதம்பிடித்த யானையைப் போல

எல்லாவற்றையும்

கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்கள்

மக்களுக்குள் எந்தவொரு வேற்றுமையும்

இல்லாத போது

இவர்கள் ஏன்

கொடிய வேட்டைக்காரனைப் போல

எல்லோரையும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்

பணம் மட்டுமல்ல மதமும் மூலதனமாகும்

பணவெறி மட்டுமல்ல

மதவெறியும்  பூமியை நிர்மூலமாக்கும்

பிரிவினைத் தீயில்

நாமெல்லாம் எரிந்து கொண்டிருக்கிறோம்

பிரிவினைத் தீயில்

அவர்களெல்லாம் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்

உங்களுக்குத் தேவை வாழ்க்கை

அவர்களுக்குத் தேவை பணம்

வாழ்வின் மீதான ஆசை

பணத்தின் மீதான பேராசையை வீழ்த்தவேண்டும் !

 

ம்புங்கள்

இரவின் முடிவில் சூரியன் வரும்

நம்புங்கள்

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை நிகழும்

நம்புங்கள்

அழுத்த அழுத்த பெருவெடிப்பு நடக்கும்

நம்புங்கள்

பிரிவினைப் பேச்சுக்கள் ஒன்றிணைக்கும் மக்களை

நம்புங்கள்

வெறுப்பை விதைத்தவன் வெறுப்பை அறுப்பான்

நம்புங்கள்

மக்கள் எல்லாவற்றையும் கடந்து வருவார்கள்

நம்புங்கள் உங்களையே நீங்கள் நம்புங்கள்

உங்களைச் சுற்றியிருப்பவர்களை நம்புங்கள்

உங்களை சுற்றியிருப்பவர்களை நேசியுங்கள்

இது நம்பிக்கையாய் இருக்கவேண்டிய நேரம்

இது அன்பாயிருக்க வேண்டிய காலம்

உலகமே பார்த்தும் கேட்டும் அச்சப்பட்டிருந்த

அந்தக் கொடூர நாஜிக்களை

அந்தக் கொடூர நாஜிக்களின் கொடூரங்களை

அந்தக் கொடூர நாஜிக்களின் தலைவனை

அந்தச் சோசலிச நாட்டின் செஞ்சேனையானது

முற்றும் முழுவதுமாகத் துடைத்து விடவில்லையா

ஆபத்துக் காலங்களில் உச்சரிக்கப்படும்

மந்திர உச்சாடனங்களைப் போல

நீங்கள் நினைத்துக்      கொள்ள வேண்டிய உண்மை

நம்புங்கள்

இருளை விரட்டப் பேரொளி பாயும்

வெறுப்பின் விதைகள் நம்பிக்கையின் நாற்றுகளாகும் !

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

மைத்திரிஅன்பு 16/04/2024 - 10:22 AM

வணக்கம் தோழர். நம்பிக்கையூட்டும் வரிகள்… காலத்தில் நிகழ்ந்துவரும் கலவரங்களையும் அதிகாரங்களையும் கட்டுப்போட கையிலிருக்கும் ஓட்டாயுதத்தை தமிழக மக்கள் சரியாகக் கையாளவேண்டியிருக்கிறது. அதற்கான மனக்குழப்பத்தை இக்கவிதை வரிகள் நம்பிக்கையுடன் போக்குவதாக அமைந்திருப்பதை உணர்கிறேன். நன்றியும் வாழ்த்துகளும்…

Reply
பெரணமல்லூர் சேகரன் 16/04/2024 - 9:55 PM

“வெறுப்பின் விதைகளும் நம்பிக்கையின் நாற்றுகளும்” எனும் கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதை பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் சமயத்தில் வந்துள்ள பொருத்தமான கவிதை.

அக்கால இட்லரைப் போன்ற இக்கால ஆட்சியாளரைக் கண்முன் நிறுத்துகிறார் கவிஞர். இட்லருக்கு நேர்ந்த கதியை இன்றைய ஆளும் பாசிசவாதிகளும் அனுபவித்தே ஆக வேண்டும்.

ஏனெனில் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டென்பதே அறிவியல்.

Reply

Leave a Comment