வெப்ப அலையும் சூடான கேள்விகளும்

வெயிலில் குழந்தைகளை

வெளியில் அனுப்ப வேண்டம்

வீட்டிற்குள் இருந்தாலும்

குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்

பத்திரமாக இருக்கச் சொல்லுங்கள்

பழங்களையும்

சத்தான காய்கறிகளையும்

நிறையச் சாப்பிடச் சொல்லுங்கள்

முக்கியமாகத் தண்ணீரை

அதிகமாகக் குடிக்கச் சொல்லுங்கள்

பகல்நேரங்களில்

எக்காரணம் கொண்டும்

வெளியில் செல்ல அனுமதிக்காதீர்கள்

இப்படித்தான்

இப்படித்தான்

சுட்டெரிக்கும் இந்தக் கோடைகாலம்

அறிவுரைகளால் நிறைக்கப்படுகிறது

அறிவுரைகள் சொல்வதற்கு

யாருக்கும் எப்போதும்

சலிப்பே ஏற்படுவதே இல்லை

அறிவுரைகள் சொல்வதற்கு

அவ்வளவு விரும்புகிறார்கள் மனிதர்கள்

ஆனபோதிலும்

அதிகரித்த வெப்பத்திலிருந்து

எப்படித் தப்பிப்பது என்பதுதான்

எல்லோருக்கும் கவலையாக

இருக்கிறதே தவிர

காரணங்களைப் பற்றிய

கவலைகளும் கேள்விகளும்

இல்லாமலிருப்பது

வெப்பத்தை விடவும்

வேதனையாக இருக்கிறது

கோடைகால வகுப்புகளை விடவும்

ஒவ்வொரு குழந்தைக்கும்

இந்தக் கேள்விகளும்

இந்தக் கேள்விகளுக்கான பதில்களும்

அவசியமானதென்று அழுத்திச்சொல்வேன்

 

வெப்பம்

ஏன் அதிகரித்தது

வெப்பத்தை

யார் அதிகரிக்கச் செய்தார்கள்

இந்த முதலாளித்துவ

உற்பத்தி முறைக்கும்

அதிகரித்துக் கொண்டே செல்லும்

சூரியனின் வெப்பத்திற்கும்

என்ன சம்பந்தம் இருக்கிறது

முதலாளிகளின்

இலாபம் பெருகுவதற்கும்

சூரியனின் வெப்பம் அதிகரிப்பதற்கும்

என்ன தொடர்பு இருக்கிறது

அதீத வெப்பம் போன்ற

இயற்கைப் பேரிடர்களுக்கும்

பேராசையால் மட்டுமே நிறைந்திருக்கும்

இந்த மனிதகுலத்திற்கும்

எந்தச் சம்பந்தமுமில்லையா

இயற்கைப் பேரிடர்கள் எல்லாமும்

இயற்கையாகத்தான் நிகழ்கின்றனவா

இந்தக் கேள்விகள்

வெப்பத்திடமிருந்து மட்டுமல்ல

இந்த முதலாளித்துவச் சூட்டிலிருந்தும்

உங்களை விடுதலை செய்யும்

வெப்பத்தைத்

தாங்குவதற்கான தன்மையை

இந்தப் பூமி இழந்ததற்கு

காரணம் யார்

இந்த நிலத்தில்

நிறைந்திருந்த மரங்கள் எங்கே

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக

இந்த பூமியில்

முளைத்திருந்த மரங்கள் எங்கே

என் மூத்தோர்கள்

கவிதையில் சொன்ன

ஆறுகள் எங்கே

நிறைந்திருந்த நீர்நிலைகள் எங்கே

களவாடப்பட்ட காடுகள் எங்கே

கண்மாய்களும் குளங்களும் எங்கே

எங்கே

எங்கே

எங்கே

என்ற கேள்விகளைக்

கேட்காமல் இருந்துவிட்டு

இந்தக் கேள்விகளுக்குப்

பதில்களைத் தேடாமல் இருந்துவிட்டு

சூரியனைச் சபிப்பதற்கும்

இயற்கையைச் சலித்துக் கொள்வதற்கும்

ஒருபோதும் உங்களுக்கு

உரிமை இல்லை என்பதை

உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

மைத்திரிஅன்பு 09/05/2024 - 11:36 AM

மிகச் சரியான கேள்வி? அரசே எல்லா வளங்களையும் அதிகாரத்துடன் அழித்துவரும் அரசியல் இங்கு மட்டுமே ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்துவருகிறது. அதற்கு பிறகு சமாதானமாக பேச குழந்தைகள் குறித்த பாதுகாப்பு எச்சரிக்கை அறிக்கைகள் விடப்படுகின்றன. பள்ளிகளில் தனி வசூலுக்கு ஏற்றவாறு தனித்தன்மைகளுக்கான கொள்ளைகள் நடந்துவருகிறது. பாவம் குழந்தைகள் – அவர்களுக்கான விடுமுறைகளை சூறையாடும் சுதந்திரத்தை எப்படி பெற்றோர்களும் ஆசிரியர்களும் தீர்மானித்தார்களோ?

Reply
பெரணமல்லூர் சேகரன் 10/05/2024 - 6:37 AM

புவி வெப்பமடைதல் குறித்த கவலை பெரும்பான்மையான நாடுகளுக்கு இருப்பதில்லை. எனவேதான் லாப வெறியுடன் பல நாடுகள் வெளியிடும் நச்சு வாயுக்களும் வெப்ப வாயுக்களும் வெளி மண்டலத்தில் கலந்து புவி வெப்பமடைதல் நிகழ்கிறது. புவியின் வெகு ஆழம் வரை சென்று துளையிடப்பட்டு பல அட்டூழியங்கள் நிகழ்கின்றன.

மக்கள் வாழ்வதற்கு உகந்ததல்லாத நிலையை நோக்கி இப்புவி நகர்த்தப்படுகிறது.

இது மனித குலத்திற்கே ஆபத்தானது. எனவே தான்,

“நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் குறளுக்கேற்ப
மூல காரணங்களை அறிந்து அவற்றை எதிர்க்க நாம் அணி திரள வேண்டும்.

அதற்கான உந்துசக்தியாக கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதை வந்துள்ளது.

வாசியுங்கள்
பரப்புங்கள்

Reply

Leave a Comment