வீடு திரும்புதல்

படம் : வீடு திரும்புவதற்காக அகதிமுகாமில் காத்திருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள்

திகமெல்லாம் இல்லை

வெறும் பத்துநிமிடம்தான்

தாமதமாக வந்தது

மின்சார இரயில்

அதற்குள் பயணிகளின் கூட்டம்

இரண்டுமடங்கு அதிகரித்திருந்தது

ஒவ்வொரு பெட்டிக்குள்ளும்

ஆட்கள் நிறைந்திருந்தாலும்

யாரும் ஏறாமல் இருக்கவில்லை

அவரவர் அவசரம் அவரவர்க்கு

இன்னும்

“எத்தினி ட்ரெயினு வுட்டாலும்

போறாதுப்பா நம்மூருக்கு”

என்று சொல்லிக்கொண்டே

என்தோளை அழுத்திப்பிடித்தபடி

என்னோடு ஏறிவந்தார் பெரியவர்

எங்களுக்குப் பின்னால்

குழந்தையைக் கையில் வைத்தபடி

கணவனும் மனைவியும் ஏறினார்கள்

அந்தக் கூட்டத்திற்குள்

குழந்தையைக் கையில் வைத்திருக்கும்

தாயைப் பார்த்ததும்

பதறிப்போனார் பெரியவர்

எப்படியாவது அவர்களுக்கு

இடம்பிடித்துக் கொடுத்துவிடலாம் என்று

எடுத்த எல்லா முயற்சிகளும்

தோல்வியில் முடிந்தன

“போனுக்குப் பிறந்தவனுக

நிமிந்துகூடப் பாக்க மாட்டேங்கிறானுக”

என்று கடிந்து கொண்டதும்

குழந்தையை வைத்திருக்கும் பெண்

பரவாயில்லை என்பதுபோல

பாவனை செய்தாள்

கூட்டம் குழந்தைக்குப் பிடிக்கவில்லை

முகம்சுளிக்கத் தொடங்கியது

காற்றுக்கு இடமில்லாததால்

வியர்க்கத் தொடங்கியது குழந்தைக்கு

துப்பட்டாவால் தொடர்ந்து

துடைத்துக் கொண்டேயிருந்தாள் அம்மா

“எப்பம்மா வீட்டுக்குப் போவோம்”

எரிச்சலாகக் கேட்டது குழந்தை

“கொஞ்சநேரத்துல போய்டுவோம் கண்ணா”

சமாதானப்படுத்தினாள் அம்மா

தலைக்குமேல்

அழுக்கடைந்து துருப்பிடித்து

ஓடாமல் இருக்கும் மின்விசிறியை

தன்னுடைய எழுதுகோலை வைத்து

இயக்கிவிடத் துடித்துக் கொண்டிருந்தார்

நடுத்தர வயதுள்ள ஒருவர்

கொஞ்சநேரம் அவரின் செயல்களை

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குழந்தை

அழ ஆரம்பித்தது

தாய் சமாதானப்படுத்தினாள்

தந்தை வாங்கிக்கொண்டார்

அவரும் சமாதானப்படுத்தினார்

“எப்பப்பா வீட்டுக்குப் போவோம்”

கோபமாகக் கேட்டது குழந்தை

எந்த இடமென்று

வெளியில் பார்த்துக்கொண்டே

“ம்ம்ம் இன்னும் இருபது நிமிஷம்தான்

வீட்டுக்குப் போயிரலாம்”

“உண்மதான் சொல்றியா”

“ஆமாம்ப்பா இருபது நிமிஷம்தான்”

அவ்வளவுதான் அமைதியாக

வேடிக்கை பார்க்கத் தொடங்கியது

குழந்தையோடு நானும்

வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்

 

சிறிதுநேரம் கழித்து

எங்கோ தொலைதூரத்திலிருந்து

“எப்பம்மா வீட்டுக்குப் போவோம்

எப்பப்பா வீட்டுக்குப் போவோம்”

என்று

ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும்

ஆயிரமாயிரம் பாலஸ்தீனக்

குழந்தைகளின் குரல்கள்

காதுகளை நிறைக்கத் தொடங்கின

ஒரு கணம்தான்

ஒரேஒரு கணம்தான்

எங்கிருந்தோ பாய்ந்துவந்த துயரம்

என்னிதயத்தைக் குத்திக்கிழித்தது

காற்றல்ல எதிர்க்காற்றல்ல

அந்தத் துயரம்தான்

கலங்கச்செய்தது கண்களை

எப்போது வீடு திரும்புவோம் என்று

ஒவ்வொரு அகதி முகாம்களிலும்

ஓயாமல்

ஒலித்துக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு

யாரால் பதில் சொல்லமுடியும்

எப்போது வீடு திரும்புவோம் என்று

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்

பரிதவித்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு பாலஸ்தீன இதயங்களுக்கும்

யாரால் பதில் சொல்லமுடியும்

வீடு திரும்புதல் என்பதில்தான்

உங்களுக்கும் எனக்கும்

பயணம் நிறைவுறுகிறதென்றால்

ஒவ்வொரு பாலஸ்தீனர்களின்

நீண்ட நெடிய பயணம்

எப்போது முடிவடையும்

வீடு திரும்புதல் என்பதில்தான்

உங்களுக்கும் எனக்கும்

நிம்மதி அடங்கியிருக்கிறதென்றால்

ஒவ்வொரு பாலஸ்தீனர்களும்

எப்போது வீடு திரும்புவார்கள்

எப்போது நிம்மதியாயிருப்பார்கள்

 

சொந்த வீட்டை எண்ணி

துடித்துக் கொண்டிருக்கும்

சொந்த நாட்டை எண்ணி

துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு அகதியின் இதயத்தையும்

அன்பினால் நெருங்கிச் செல்கிறேன்

ஒவ்வொரு அகதியின் கைகளையும்

அன்பினால் பற்றிக் கொள்கிறேன்

வீட்டிலிருந்து புறப்பட்டவர்கள் மட்டுமல்ல

யுத்தத்தின் பெயரால்

ஆக்கிரமிப்பின் பெயரால்

பேராசையின் பெயரால்

வீட்டிலிருந்து துரத்தப்பட்டவர்களும் கூட

வீடு திரும்பவேண்டும் என்றே

விரும்புகிறேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 16/07/2024 - 11:08 AM

வீடு திரும்புதல் குறித்த கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதை அற்புதமானது.

நமக்கெல்லாம் அன்றாடம் வீடு திரும்புதல் இயல்பான ஒன்று.

பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு மட்டும் வீடு திரும்புதல் கானல் நீராய்.. கண்ணீர்க் கதையாய்.

படியுங்கள்
பரப்புங்கள்.

Reply

Leave a Comment