விலைவாசி ஏற்றத்திற்கு

ழக்கமாக

கூட்டம் அலைமோதும்

அந்தக் காய்கறிக்கடைக்குள்

ஈக்கள் மட்டுமே

மொய்த்துக் கொண்டிருந்தன

விலை குறைவாக

எது இருக்கிறதோ

அதை வாங்கினால் போதும்

என்ற

என்னுடைய எஜமானியின்

கட்டளையை

எப்படி நிறைவேற்றுவதென்று

ஒவ்வொரு காய்களையும்

தொட்டுத்தடவித்

தவியாய்த்

தவித்துக் கொண்டிருந்தேன்

கத்தரிக்காய் கொஞ்சம்

முள்ளங்கி கொஞ்சம்

இரண்டு வாழைக்காய் என

பார்த்துப்பார்த்து நான்

வாங்கிக் கொண்டிருக்கும்போது

கடைக்குள்

வேகமாக வந்த பெண்ணொருத்தி

கடைக்காரரைப் பார்க்காமலேயே

“பீன்ஸ் எவ்வளோப்பா”

“கிலோ எழுவதும்மா”

“கத்தரிக்கா எவ்ளோப்பா”

“கிலோ அம்பதும்மா”

“சவ்சவ்”

“அதுவும் அம்பதும்மா”

கொஞ்சம் தாழ்ந்த குரலில்

“இந்தக் கொத்தவரங்கா”

“கிலோ அறுவதும்மா”

“உருளைக்கிழங்கு”

“அம்பத்தஞ்சுமா”

“தக்காளி”

“நூறுமா”

அவ்வளவுதான்

பெருமூச்சுவிட்டபடி

அந்தக் கடையைச் சுற்றிலும்

ஒரு பார்வை பார்த்தாள்

பைக்குள் இருந்து

வெளியே எடுக்காமலேயே

பணத்தை எண்ணிப்பார்த்தாள்

கிலோ கணக்கில்

வாங்க வந்தவள்

கிராம் கணக்கில் வாங்கினாள்

கடையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த

தொலைக்காட்சி பெட்டிக்குள் இருந்து

பாரளுமன்றத்தின் சுவர்கள்

நடுங்கும் அளவிற்கு ஒருவர்

தங்கள் சாதனைகளை

அடுக்கிக் கொண்டிருந்தார்

பார்க்கக்கூடாத அந்தக்காட்சியை

பார்க்காமல் இருந்திருந்தால் கூட

அவ்வளவு கோபம் வந்திருக்காது

“விக்கிற வெலைவாசிக்கு

எப்பிடிச் சாப்பிட்றது

எப்பிடி உயிர்வாழுறதுனு தெரியல

பேசுறானுக முக்கிமுக்கி

அந்தச் சனியன

அமத்திப்போடுப்பா”

என்றவள் சொன்னதும்

அணைக்கப்பட்டது தொலைக்காட்சி

வேகமாக வெளியேறினாள்

இன்னும் சொல்லப்படாமல்

அவளுக்குள் நிறைந்திருந்த

வார்த்தைகளின் சூட்டில்

மிச்சமிருந்த காய்கறிகள்

பொசுங்கத் தொடங்கின

இப்படியாக இப்படியாக

எத்தனை எத்தனை கோபங்கள்

எல்லாமும் எல்லாமும்

ஒன்றுசேரத்தான்

ஓயாமல் ஒதுங்காமல்

எழுதிக் கொண்டிருக்கிறேன்!

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 18/07/2024 - 5:43 PM

“கையில வாங்கினேன்
பையில போடல
காசு போன இடம் தெரியல”
என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

அதுபோல விலைவாசி உயர்வை மக்கள் மொழியில் கவிதையாக்கியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

படியுங்கள்
பரப்புங்கள்.

Reply

Leave a Comment