வெளிச்சத்தைக்
கொஞ்சம் கொஞ்சமாகக்
குடித்துக்கொண்டே
இருள் தன்னை
விரிக்கத் தொடங்கியிருக்கும்
மாலையின் மெல்லிய காற்றை
அனுபவித்துக் கொண்டே
வீடுதிரும்பிக் கொண்டிருந்தேன்
எல்லோரையும் போல
அவசரமான மனநிலையில்
இல்லாதவன் என்பதால்
சிற்றுண்டிக் கடைகள்
காய்கறிக் கடைகள்
தள்ளுவண்டிக் கடைகள்
நடந்து செல்கிறவர்கள்
இருசக்கர வாகனத்தில்
இறக்கை இல்லாமல்
பறந்து செல்கிறவர்கள்
கார்களுக்குள் உட்கார்ந்துகொண்டு
ஒலியெழுப்பியபடியே
சென்று கொண்டிருப்பவர்கள்
சாலையோரம் படுத்தபடி
அசைபோட்டுக் கொண்டிருக்கும்
எருமை மாடுகள்
அவசரவேலை இருப்பதைப்போல
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
தெருநாய்கள்
தொலைதூரத்தில்
மின்னிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்
எனக்காக
ஒளிர்ந்து கொண்டிருக்கும்
என் நிலா
என்னைப்போலவே
வேடிக்கைபார்த்துக் கொண்டு
தாயோடும் தந்தையோடும்
பயணித்துக் கொண்டிருக்கும்
சின்னசின்னக் குழந்தைகள் என
சாலைகள் எங்கும்
கூட்டம் கூட்டம் கூட்டம்
திடீரென்று கேட்ட அந்தச்சத்தம்
எல்லோருடைய வேகத்தையும்
ஒருகணம் குறையச்செய்தது
காய்கறிகளை வாங்கிக்கொண்டு
சென்று கொண்டிருந்த
பெண்ணின் மீது
இருசக்கர வாகனத்தில்
வேகமாகச் சென்ற முட்டாளொருவன்
இடித்துவிட்டான்
கீழே விழுந்தவள்
கொஞ்சமும் தாமதிக்கவில்லை
சட்டென்று எழுந்து
சாலையெங்கும் சிதறிக்கிடந்த
காய்கறிகளை பொறுக்கத் தொடங்கினாள்
“அடிபட்ருக்காம்மா” என்று
ஓடிச்சென்று விசாரித்ததை
கண்டுகொள்ளவே இல்லை அவள்
மொத்தக் கவனமும்
காய்கறிகளை எடுப்பதில்தான்
குவிந்திருந்தது
நான்கு கத்தரிக்காய்கள்
ஐந்து உருளைக்கிழங்குகள்
கொஞ்சம் பச்சைமிளகாய்கள் என
எடுத்துக் கொடுத்த என்னை
ஏறெடுத்துப் பார்க்காமலேயே
வாங்கிக் கொண்டாள்
இன்னொரு பெண்ணும்
அந்தம்மாவிற்கு உதவிசெய்தாள்
அவளையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை
சாலையில் உருண்ட
சக்கரங்களில் நசுங்கிக்
கொஞ்சம் காய்கறிகள்
குலைந்து கிடந்தன
அதை எடுக்கப்போனவளைத் தடுத்து
“வேண்டாம்மா விட்ருங்க” என்றாள்
“அட போம்மா
விக்கிற விலைவாசில
விட்டுட்டு போறதா”
என்று சொல்லிக்கொண்டே
அவைகளையும் எடுத்து
சேலையில் துடைத்துவிட்டு
பைக்குள் போட்டுக்கொண்டு
நடக்கத் தொடங்கினாள்
கீழே விழுந்ததில்
கையில் அடிபட்டு
வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை
கவனிக்கவே இல்லை அவள்
சாலையில் பரபரப்பு
மீண்டும் பற்றிக்கொண்டது
எளிய மக்களால்
எதையுமே வாங்க முடியாதபடி
ஏறியிருக்கும் விலைவாசியை
நினைத்து நினைத்து
நினைத்து நினைத்து
அந்தக் காற்றிலும்
புழுங்கிக்கொண்டே புறப்பட்டேன்!
ஜோசப் ராஜா