வினேஷ் போகத்திற்கு

தேசத்தின் வெற்றிக்காக

உடலெங்கும் காயங்களைச் சுமந்தவளே

இதயத்தில் நிறைந்திருக்கும்

எண்ணிலடங்கா காயங்களுக்காக

நீண்ட நாட்களாகப்

போராடிக் கொண்டிருந்தவளே

மனசாட்சியே இல்லாத

மாபெரும் அமைப்பை நோக்கி

மல்யுத்தம் நடத்திக் கொண்டிருந்தவளே

இன்றைய இரவு

உனக்கானதாக இருக்குமென்றுதான்

உன்னுடைய வெற்றியால்

இன்றைய இரவு

மகிழ்ச்சிக்கானதாக இருக்குமென்றுதான்

எல்லோரையும் போல

நானும் நினைத்திருந்தேன்

இப்போது

கோடானகோடி

உடைந்த இதயங்களோடு

நானும் உடைந்துபோய்

உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்

இந்தச் சமூகமைப்பில்

நம்முடைய கனவுகளை நிறைவேற்றுவதும்

இந்தச் சமூகமைப்பில்

நம்முடைய இலட்சியங்களை எட்டிப்பிடிப்பதும்

எளிதான காரியமல்ல

ஆனாலும் நீ போராடினாய்

அன்றும் இன்றும்

நியாயத்திற்கான

உன்னுடைய உறுதியான போராட்டத்தால்

என்னுடைய இதயத்தையும் சேர்த்து

இந்த தேசத்தின்

கோடிக்கணக்கான ஈரமுள்ள இதயங்களை

வென்றிருக்கிறாய்

இத்தனை அன்பிற்கு முன்னால்

இத்தனை ஆதரவிற்கு முன்னால்

அந்தப் பதக்கம்

அவ்வளவு பெரிதொன்றுமில்லை பெண்ணே

கலங்காதே

வெட்டப்பட்ட பறவையைப்போல

துடிதுடித்திருக்கும் உன்னிதயம்

உணர்ந்து கொள்கிறேன்

காஸாவின் பெண்களைப்போல

கதிகலங்கியிருக்கும் உன்னிதயம்

உணர்ந்து கொள்கிறேன்

ஆழ்மனதின் அந்தக் கூக்குரல்

என் காதுகளை நிறைத்திருக்கிறது

முதுகுக்கு பின்னால்

விளையாடிக் கொண்டிருக்கும்

கோழைகளைக் கண்டுகொள்ளாதே

அவர்கள் கோழைகள் அவ்வளவுதான்

இந்தச் சமூகம்

முழுமையான

நாகரீகமான

சமூகமாக இருந்திருந்தால்

இந்நேரம் உனக்கான குரல்கள்

ஓங்கி ஒலித்திருக்கும்

அதிகாரத்திற்கு எதிராக

நீயும்

உன்னோடிருந்தவர்களும்

நடத்திய

வேதனையான மல்யுத்தத்தையே

வேடிக்கை பார்த்தவர்கள்தான்

போகட்டும்

களத்தில் நேருக்குநேர்

நின்று சந்திக்கும் வீரத்தை

மீண்டும் மீண்டும்

நாம் சொல்லிக்கொடுப்போம்

இனியும் நாம்

தகுதிநீக்கம் செய்யப்படாமல்

இருக்க வேண்டுமென்றால்

ஒவ்வொரு கலைஞர்களையும்

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும்

காயப்படுத்திக் கொண்டிருக்கும்

இந்த முதலாளித்துவச் சமூகத்தை

தகுதிநீக்கம் செய்வதைத்தவிர

நமக்கும் வேறு வழியில்லை!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment