எந்தப் பக்கம் திரும்பினாலும்
வெற்று முழக்கங்கள்
எதற்காக ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன
எந்தப் பக்கம் கேட்டாலும்
வெற்று வாக்குறுதிகள்
எதற்காக வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
எந்தப் பக்கம் பார்த்தாலும்
வெற்று நம்பிக்கைகள்
எதற்காகப் பரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
எந்தப் பக்கம் நகர்ந்தாலும்
வெற்றுக் கனவுகள்
எதற்காக விதைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன
இந்தக் கேள்விகளை
நீங்கள் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன்
இந்தக் கேள்விகளின் வழியாக
உங்கள் தேடல்கள் தொடங்கவேண்டுமென்றும்
இந்தக் கேள்விகளின் வழியாக
நீங்கள் உண்மையைக் கண்டடைய வேண்டுமென்றும்
இந்தக் கேள்விகளின் வழியாக
இந்தச் சமூகமும் உங்கள் வாழ்க்கையும்
ஒட்டுமொத்தமாக மாறவேண்டுமென்றும் ஆசைப்படுகிறேன்
ஒருபோதும் நிறைவேறாத வெற்றுக் கனவுகளை
உங்களுக்கு முன்னால் விதைத்துவிட்டு
அவர்கள் எதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா
ஒருவருக்கும் பிரயோசனமில்லாத வெற்று முழக்கங்களை
ஒவ்வொரு மேடைகளிலும் முழங்கிவிட்டு
அவர்கள் எதை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்
என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா
இந்த தேசம் ஒளிர்கிறது
இந்த தேசம் வளர்கிறது
இந்த தேசம் எழுகிறது
என்ற முழக்கங்கள் மட்டும்தான் உங்களுக்கு
ஆனால் இந்த தேசமோ
அந்த முழக்கங்களை உருவாக்குகிறவர்களுக்கு
என்ற உண்மைதான்
உடனடியாக நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டியது
உண்மைகளை அறிந்து கொள்வது
ஒருவகையில் விடுதலையின் வாசலைத் திறப்பதுதான்
உண்மைகளை அறிந்துகொள்வது
ஒருவகையில் மாற்றத்தின் பாதையைக் கண்டடைவதுதான்
உண்மைகளை அறிந்துகொள்வது
ஒருவகையில் புரட்சியின் தருணத்தை நெருங்குவதுதான்
உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்
அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்
பொய்களால் நீங்கள் சூழப்பட்டிருக்கிறீர்கள்
அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காகத்தான்
பொய்களால் நீங்கள் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
உங்கள் கண்களுக்கு முன்னால்
ஒரு மாநிலம் திட்டமிடப்பட்ட நெருப்பில்
எரிந்து கொண்டிருப்பதைப் பாருங்கள்
உங்கள் கண்களுக்கு முன்னால்
ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வடிவத்தில்
அதிகாரத்தின் கரங்களால் மீண்டும் மீண்டும்
சிதைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பாருங்கள்
உங்கள் கண்களுக்கு முன்னால்
மானுட ஒற்றுமையும் மானுட அன்பும்
தொடர்ந்து தகர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பாருங்கள்
மணிப்பூருக்கும் உங்களுக்கும்
சம்பந்தமில்லையென்று நினைக்கிறீர்களா நீங்கள்
பற்றியெரியும் அந்த நெருப்புக்கும் உங்களுக்கும்
இடைவெளி அதிகமென்று நினைக்கிறீர்களா நீங்கள்
நான் சொல்வதைக் கேளுங்கள்
இந்த மலைகள் உங்களுடையவைகள்
சிதைக்க விடாதீர்கள்
இந்த வளங்கள் உங்களுக்கானவைகள்
சுரண்ட விடாதீர்கள்
மத உணர்வையும் சாதி உணர்வையும்
தேசிய உணர்வையும் போலிப் பெருமைகளையும்
உங்களிடம் விதைத்துவிட்டு
பூட்டப்பட்ட அறைகளுக்குள்
ஆட்சியாளர்களும் முதலாளிகளும்
கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் காதல் மொழிகள்
பாழாய்ப்போன என் காதுகளுக்குமட்டும்
கேட்டுக்கொண்டே இருக்கும் போது
எழுதாமல் இருக்கமுடியவில்லை என்னால்
நீங்களும்
வெறுமனே வேடிக்கை பார்க்கமாட்டீர்கள்
என்றுதான் எப்போதும் நம்புகிறேன் !