வாழ்வின் மீதான பேராசை

ப்படிப் பார்த்தாலும்

இந்த மனிதர்கள்

வாழத்தான்

ஆசைப்படுகிறார்கள்

எப்படிப் பார்த்தாலும்

இந்த மனிதர்கள்

ஒவ்வொரு நாளையும்

நிம்மதியாகக் கழித்துவிடத்தான்

ஆசைப்படுகிறார்கள்

மனிதர்களின் ஆசைகள்

அவ்வளவு எளிதாக

நிறைவேறி விடுவதில்லை

ஆனாலும் மனிதர்கள்

ஆசைப்படுகிறார்கள்

மனிதர்களின் ஆசைகள்

அவ்வளவு சீக்கிரமாக

நிறைவேறி விடுவதில்லை

ஆனாலும் மனிதர்கள்

ஆசைப்படுகிறார்கள்

 

யுத்தங்களில்

கொல்லப்பட்ட

ஒவ்வொரு உயிர்களின்

முகங்களையும்

தொட்டுத் தடவிப் பார்க்கிறேன்

அத்தனை முகங்களிலும்

அந்த வேதனையையும் தாண்டி

அந்த வேதனையையும் தாண்டி

வாழ்ந்துவிடத் துடிக்கும் துடிப்பை

உணர்கிறேன் நான்

உண்மை என்னவென்றால்

யுத்தங்களில்

அழிந்து போவதை

விரும்பவில்லை யாருமே!

 

யுத்தங்களால்

அகதிகளாக்கப்பட்ட

ஒவ்வொரு உயிர்களின்

கைகளையும்

இறுகப் பற்றிக் கொள்கிறேன்

தாய்நிலத்திற்கான ஏக்கத்தையும்

சொந்த மண்ணிற்குச்

செல்லவேண்டுமென்ற தவிப்பையும்

உணர்கிறேன் நான்

உண்மை என்னவென்றால்

யுத்தங்களை மட்டுமல்ல

யுத்தங்களால் அகதிகளாக்கப்படுவதையும்

விரும்பவில்லை யாருமே!

 

நீங்கள்

வாழ வேண்டுமென்று

விரும்பினீர்கள் என்றால்

வாழ்க்கைக்கு எதிராக இருக்கும்

எல்லாச் சக்திகளையும்

எல்லாச் சக்திகளையும்

மிச்சமில்லாமல் அழித்தொழிக்காமல்

எதுவும் சாத்தியமில்லை

வாழ ஆசைப்படுகிறவனின் கைகளில்

மரணத்தைக் கொடுப்பது

எப்படி நியாயமாகும்?

பொம்மைகளோடு விளையாட

ஆசைப்படும் குழந்தைகளை

கொன்று புதைப்பது

எப்படி நியாயமாகும்?

ஆயிரக்கணக்கான உயிர்களைக்

கொன்றுவிட்டு

ஆயிரக்கணக்கான வீடுகளையும்

மருத்துவமனைகளையும்

பள்ளிக்கூடங்களையும்

தரைமட்டமாக்கிவிட்டு

யுத்தத்தைத் தொடங்கியவன்

வெட்கமில்லாமல் சொல்கிறான்

”யுத்தத்தை நிறுத்துகிறேன்

அமைதியின் தூதுவனாக

என்னை அங்கீகரியுங்கள்” என்று

 

முட்டாள்களின் கைகளால்

இந்தப் பூமியின் இதயம்

காயப்படுத்தப்படுவதை

வேதனையோடு

பார்த்துக் கொண்டிருக்கிறேன்

உங்களையெல்லாம்

நான் கேட்டுக் கொள்வது

ஒன்றுதான்

யுத்தம் நிறுத்தப்பட்ட

தங்களுடைய

சொந்த நிலத்தை நோக்கி

ஆசையோடு

ஆசை ஆசையோடு

ஓடிவரும் மனிதர்களின்

முகங்களைப் பாருங்கள்

இடிந்து தரைமட்டமாகிக் கிடந்தாலும்

ஒரு ஓரத்தில்

வாழ்ந்துவிடலாம் என்ற பேராசையோடு

அவசரத்தில் அள்ளிச்சென்ற

கொஞ்சம் பொருட்களோடு

விரைந்து வருகிறவர்களைப் பாருங்கள்

இத்தனை காலம்

குண்டுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட

தன்னுடைய சின்னஞ்சிறிய செடியை

ஏந்திவரும் சிறுமியைப் பாருங்கள்

எதுவும் இல்லையென்றாலும்

வாழ்ந்துவிடலாம் என்ற ஆசைதான்

வாழ்வின் மீதான பேராசைதான்

இன்னும் இந்தப் பூமி

உயிர்த்திருப்பதற்கான ஒரே நம்பிக்கை!

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

Baskaran F T 22/10/2025 - 7:37 PM

தான் அனுபவித்த துயரம் போன்று பிறரின் துயரங்களை வரிக்கு வரி எடுத்துரைக்கிறார் கவிஞர்….. அந்த வலிகள் படிக்கிற நமக்குள்ளும் கடத்துகிறார்.

Reply

Leave a Comment