வார்த்தையே என்னுடைய மரணமின்மை

குயவனின் கைகளிலிருந்து

களிமண் வடிவமெடுப்பதைப் போல

நெசவாளியின் கைகளிலிருந்து

நூல்கள் துணியாவதைப் போல

விவசாயியின் கைகளிலிருந்து

விதை உயிர்ப்படைவதைப் போல

சிற்பியின் கைகளிலிருந்து

பாறை உருப்பெருவதைப் போல

தாயின் கருவறையிலிருந்து

குழந்தை வெளிவருவதைப் போல

வார்த்தைகள்

என்னுடைய இதயத்திலிருந்து புறப்பட்டு

கரங்களின் வழியாக இறங்குகிறது

வார்த்தைகளால்

வார்த்தைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும்

கவிஞன் நான்

வார்த்தைகளுக்காகக் காத்துக் கிடக்கிறேன்

 

பனியுருகப் புகை கிளம்புவதைப் போல

உனக்காக நான் உருகும் பொழுதினில்

வார்த்தைகள் எனக்குள்ளிருந்து எழுந்து வருகிறது

வார்த்தைகளை நேசிக்கிறேன் நான்

ஓப்பனைகள் இல்லாத

உயிர்ப்பின் அழகு உறைந்திருந்த

காதலியை நேசித்ததைப் போல

ஏழைஎளிய மக்களின்

உதடுகளில் தவழ்கின்றதைப் போல

எளிமையான

வார்த்தைகளையே விரும்புகிறேன் நான்

புரியாத புதிர்நிறைந்த

வார்த்தைகளைத் தவிர்த்து விடுகிறேன்

 

வார்த்தைகள் எனக்குள் பற்றி எரிகிறது

வார்த்தைகள் எனக்குள் மிதந்து கொண்டிருக்கின்றன

வார்த்தைகள் எனக்குள் நங்கூரமிட்டு நிற்கின்றன

வார்த்தைகள் எனக்குள் விதைக்கப் பட்டிருக்கின்றன

வார்த்தைகள் எனக்குள் முளைத்து எழுகிறது

வார்த்தைகள் என்மேல் கொடிபோல் படருகிறது

 

அழகிய காதலியாய் வார்த்தைகளை அணைத்துக் கொள்கிறேன்

அற்புதக் காதலை வார்த்தைகளில் வடித்துத் தருகிறேன்

வார்த்தைகள் எனக்குச் சொந்தமானதா என்ன

இல்லை இல்லவே இல்லை

உணர்ந்து கொள்கிறேன் உள்வாங்கிக் கொள்கிறேன்

வெளிப்படுத்தி விடுகிறேன்

வார்த்தைகள் எனக்குச் சொந்தமானவைகள் அல்ல

 

வார்த்தைகளைச் சேகரிக்கிறேன் நான்

கடற்கரையில் சிப்பிகள் சேகரிக்கும் சிறுமியைப் போல

நடந்து போகும் தெருக்களில்

பேருந்து நிலையத்தில்

காய்கறிச் சந்தையில்

தேநீர்க் கடைகளில்

தினமும் சந்திக்கும் தோழர்களிடத்தில்

சாலையோரமாய் வாழ்க்கை நடத்துபவர்களிடத்தில்

நகரெங்கும் நிரம்பியிருக்கும் நாடோடிகளிடத்தில்

என்னுடைய கிராமத்து மனிதர்களிடத்தில்

கொட்டிக்கிடக்கின்ற வார்த்தைகளைச் சேகரித்து

நிறைத்துக் கொள்கிறேன் எனக்குள்

 

ஓவ்வொரு மாலையிலும்

கூடுதிரும்பும் பறவைக் கூட்டங்களாய்

வார்த்தைகள் எனக்குள் தங்கிக் கொள்கின்றன

என்னுடைய இதயக் கிணற்றுக்குள்

புதிய வார்த்தைகள் நிறையநிறைய

பழைய வார்த்தைகள் வழிந்து வருகின்றன

 

மனிதன் ஆகாரத்தினால் மாத்திரமல்ல

தனக்காக ஒலிக்கின்ற

தன்னுடைய துயரங்களைத் துடைக்க நினைக்கின்ற

தன்னுடைய நலனில் அக்கறை கொண்டிருக்கின்ற

தன்னுடைய வாழ்வை மாற்றத் துடிக்கின்ற

ஒவ்வொரு வார்த்தையினாலும்

பிழைப்பான் என்பதையும்

ஒவ்வொரு வார்த்தையையும்

பிடித்துக் கொள்வான் என்பதையும்

அனுபவித்து அறிந்து கொண்டதினால்

நல்ல நிலத்தில் விழுந்த விதை

நல்ல விளைச்சலைக் கொடுப்பதைப் போல

என்னுடைய இதயத்தில் விழுந்த வார்த்தைகளால்

உங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும்

வலிமையையும் கம்பீரத்தையும் கொடுக்க முயற்சிக்கிறேன்

நிலத்தைப் போலவே நானும்

என்றென்றும் நிலைத்திருக்க எத்தனிக்கிறேன்

 

ஆதியில் மட்டுமல்ல இப்போதும் கூட

நீங்கள்தான் எனக்கு வார்த்தைகளாய் இருக்கிறீர்கள்

நீங்கள்தான் எனக்கு வார்த்தைகளைத் தருகிறீர்கள்

வார்த்தையில்தான் உங்களைப் பார்க்கிறேன் நான்

வார்த்தைதான் எனக்கு எல்லாமுமாக இருக்கிறது

இரகசியங்கள் எதுவுமில்லாமல்

எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்துவதற்கு

மறைபொருளாய் இருப்பவற்றையெல்லாம்

தெருவில் இறைத்துப் போடுவதற்கு

பயன்படுத்த முடியாத பொருட்களை

தன்னுடைய உழைப்பின் மூலமாகப்

பயன்மதிப்புள்ள சரக்குகளாகப்

பிரசவித்துக் கொண்டிருக்கும்

தொழிலாளியைப் போற்றுவதற்கு

அந்தப் பயன்மதிப்புள்ள சரக்குகளே

பரிவர்த்தனைப் பண்டங்களாகி

பணக்கழுகுகளாய் மாற்றமடைந்து

திறந்து விடப்பட்ட எல்லைகளைத் தாண்டிச்

சுதந்திரமாகப் பறந்து சென்று

சின்னஞ்சிறு கூடுகளில் இல்லாமல்

பெரிய பெரிய மாளிகைகளுக்குள்

காவலர்கள் நிறைந்த அரண்மனைகளுக்குள்

வங்கிகளின் இரும்பு அறைகளுக்குள்

பதுங்கிக் கிடந்து கொண்டு

பிரசவித்துப் போட்டவனையே பார்த்து

பரிகாசம் செய்து கொண்டிருப்பதைப்

பறையடித்துப் பறைசாற்றுவதற்கு

வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன் நான்

 

உற்பத்தியில் விளையும்

உபரி மதிப்பைப் போல

யாராலும் கண்டுகொள்ளப்படாமல்

வாழ்ந்து கொண்டிருக்கும்

என்னுடைய தோழர்களை

உற்பத்தியைப் பற்றியும்

உபரிமதிப்பைப் பற்றியும்

உணரச் செய்வதற்கு

துயரச் சிலுவை சுமந்து சுமந்து

துன்பத்தில் உழன்று கொண்டு

ஆறாத காயங்களோடு

அரைவாழ்வும் அல்லாமல்

குறைவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்களின்

குறைகளைக் கேட்பதற்கு சொல்வதற்கு

அல்லற்பட்டு ஆற்றாது

அழுது கொண்டிருக்கும் விழிகளில்

வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைத்து

அவர்களை ஆற்றுப்படுத்துவதற்கு

 

காலமெல்லாம்

எம் உழைப்பு எம் இரத்தம்

எம் வியர்வை எம் விளைச்சல்

கொள்ளை கொண்டு போவதற்கா

என்று புலம்பிக் கொண்டிருக்கும்

உயிருள்ள ஓரு மனிதனுக்கு

வர்க்கத் தண்ணுணர்வைத் தருவதற்கு

வார்த்தைகளைப் பற்றிக் கொள்கிறேன் நான்

 

வார்த்தைகள் வெறும்

எழுத்துக் கலவைகளல்ல எனக்கு

உணர்வாய் உயிராய் உறவாய்

காதலாய் மானுட நேசமாய்

வார்த்தைகளைப் பார்க்கிறேன்

வார்த்தைகளே எனக்கு ஆயுதம்

வார்த்தைகளே எனக்குக் கவசம்

வார்த்தைகளே எனக்கு வலிமை

வார்த்தைகளே எனக்கு இளமை

 

வார்த்தையே என்னுடைய ஜனனம்

வார்த்தையே என்னுடைய மரணமின்மை

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 23/02/2024 - 8:57 AM

வார்த்தைகளை வைத்து நெடுங்கவிதையைப்
படைத்திருக்கிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

வழக்கம்போல் வார்த்தைகளால் காதலை, உழைப்பை, உழைப்புச் சுரண்டலை, உபரி மதிப்பை, உழைக்கும் வர்க்க எழுச்சியை, சமூக மாற்றத்தைக் கவிஞரின் வார்த்தைகள் காத்திரமாகப் படைக்கின்றன.

வாசியுங்கள்
உணர்வீர்கள்.

Reply

Leave a Comment