வாருங்கள் தோழர்களே

ன்று மாலை காத்திருக்கும் சாவிகள் கவிதைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது. வெளியீட்டுக்கான எல்லா வேலைகளும் முடிந்தபிறகு, கொஞ்சம் இதயம் லேசானதை உணரமுடிந்தது.

இந்தத் தொகுப்பிலிருக்கும் கவிதைகள் என் இதயத்தைக் குத்திக்கிழித்த போரின் காட்சிகளிலிருந்து பிரசவிக்கப்பட்டவைகள். தாங்கிக் கொள்ளவே முடியாத யுத்தத்தின் வேதனைகளிலிருந்து உருவாகி வந்தவைகள்.

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் தொடங்கியதிலிருந்து, உன்னிப்பாக அதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். போர் எவ்வளவு கொடுமையானது என்பதை இரத்தமும் சதையுமாக உணர்ந்துகொண்டேன்.

இந்தக் கவிதைகள் போரின் கொடுமைகளைச் சொல்லக்கூடிய கவிதைகள்தான். ஒருவகையில் இந்தக் கவிதைகள் போருக்குப் பின்னாலிருக்கும் முதலாளித்துவத்தின் முகத்திரையைக் கிழிக்கக்கூடிய கவிதைகளும்தான்.

எப்போதும்போல இந்தக் கவிதைகளைக் காற்றைப்போல கடத்திச் செல்லுங்கள் என்று தோழர்களின் கரம்பிடித்துக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பு என்னை இன்னும் எழுதவைக்கும்.

உலகத்தின் நிலைமைகள் இன்னும் இன்னுமாய் நாம் ஒன்றுசேரவேண்டுமென்று வலியுறுத்துகிறது. இன்னும் இறுக்கமாக நாம் ஒன்றுசேர்ந்து மாற்றத்திற்கான பாதையில் முன்னேறுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய குருநாதரும், பேராசிரியரும் இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்க சம்மதித்தது எனக்குப் பெரும் பாக்கியம். இந்த வழி, அவர் காட்டிய வழிதான். இந்தச் சிந்தனை, அல்லும்பகலும் அவர் செதுக்கிக் கொண்டிருப்பதுதான்.

புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை வழங்கவிருக்கிறார் மதிப்பிற்குரிய தோழர். தொல். திருமாவளவன் அவர்கள். நிகழ்விற்காக அவரை இரண்டுமுறை சந்திக்கச் சென்றபோதும் மக்கள் வெள்ளத்தில் நீந்தித்தான் சந்திக்கமுடிந்தது. மக்கள் தலைவர், மக்களுக்கான தலைவர் இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியே.

நிகழ்வில் சிறப்புரை வழங்கவிருக்கும் அண்ணன் செழியன் அவர்களின் பேரன்பிற்கு எப்போதும் உரியவனாக இருக்கவேண்டும் என்பதே, இப்போது நான் நினைத்துக் கொள்வது. அண்ணனின் பேச்சிலிருந்து வெளிப்படப்போகும் பல பரிமாணங்களைக் காணக் காத்திருக்கிறேன்.

அண்ணன் சேது குமணன் அவர்கள் மட்டுமே, பாலஸ்தீன நிலத்தை நேரில் பார்த்திருப்பவர். அந்த மக்களின் பேரன்பில் திளைத்துத் திரும்பியிருப்பவர். அப்படிப்பட்ட நிலமும், மக்களும் பேரழிவிற்குள்ளாகியிருப்பதன் வேதனையை வெளிப்படுத்தினார். நிகழ்வில் இன்னும் அதிகமாகப் பேசுவார்.

ஓவியக் கண்காட்சிக்காக 21 ஓவியர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் வஸந்த், செளந்தர், விஜய் உள்ளிட்ட தோழர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்வை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.

நிகழ்வைத் தோழர் இசாக்கும் நானும் முடிவுசெய்தபோதிலிருந்தே எங்களோடு இணைந்துகொண்டார் தோழர்.செல்வா. தோழர்கள் விடிவெள்ளியும், பிரகாஷ் அம்பேத்கரும் என்னை பதட்டமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள், வேலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இன்னும் எத்தனையோ தோழர்கள் என்ன வேலை இருக்கிறது என்று வாஞ்சையோடு கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இத்தனை காலத்தில் நான் சம்பாதித்தது இந்தப் பேரன்பைத்தான் என்பதில் மகிழ்ச்சிதான் எனக்கு.

உங்களுக்காக கவிதை வாசிக்கக் காத்திருக்கிறேன். மாலை சந்திப்போம். திரளாகத் திரண்டு வாருங்கள் அன்புத் தோழர்களே!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment