படம் : அழகிய பஹல்காம் நகரம்,காஷ்மீர்
இந்த நாளின் மீது
இடியை இறக்கியது
அந்தப் புகைப்படம்
இந்த நாளின்
வெப்பத்தை
இன்னும் அதிகமாக்கியது
அந்தப் புகைப்படம்
கொல்லப்பட்ட
கணவனின் உடலருகே
அழுது ஓய்ந்து
கையறு நிலையில்
அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள்
அவளுக்குள்
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்
போரொலி
கேட்கிறது எனக்கு
அந்தக் கையறுநிலை
அவளுக்கானது மட்டுமல்ல
இந்த தேசத்தின்
பெரும்பான்மையான மக்கள்
அந்த நிலையில்தான்
இருக்கிறார்கள்
இழப்பின் வலி
மனிதர்களால்
உணரக் கூடியதுதான்
இழப்பின் வலி
மனிதர்களால்
உணரக் கூடியதுதான்
வேதனையின் இந்நேரத்திலும்
என்னுடைய அச்சமெல்லாம்
இந்தப் படுகொலைகளை
எதற்காகப்
பயன்படுத்தப் போகிறார்களோ
என்பதுதான்
தோழர்களே
வெறுப்பின் வார்த்தைகளுக்குச்
செவிசாய்க்காதீர்கள்
வெறுப்பை விதைப்பவர்களை
விரட்டியடிங்கள்
அரசியல்வாதிகளின்
அருவெறுக்கத்தக்க நோக்கங்களை
புறக்கணிக்கப் பழகுங்கள்
கேவலம்
பிணங்களின் மீது
அதிகாரத்தை கட்டமைப்பவர்களுக்கும்
நமக்கும் வித்தியாசமிருப்பதை
வெளிப்படுத்தும் நேரம்
எதற்காக இந்தப் படுகொலைகள்
யாருக்காக இந்தப் படுகொலைகள்
என்ற கேள்விகளை
நீங்கள்
கேட்கத் தொடங்கினால்
அதற்கான விடையை
நீங்கள்
தேடத் தொடங்கினால்
நிச்சயமாக
இப்படிப்பட்ட படுகொலைகள்
இல்லாமல் போகும்
நம்புங்கள்
நாமும்
கொல்லப்படாமல்
நிம்மதியாக இருக்கலாம்!
ஜோசப் ராஜா